tamilnadu

img

முன்னெப்போதும் இல்லாத நிலை - சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர். அவசரநிலைக் காலத்தில் தலைவராக இருந்தவர். அப்போது பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வைப்பதில் வெற்றியும் பெற்றவர். அவர், தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் அன்றைய அவசரநிலைக் காலத்தையும் இப்போதைய நிலைமைகளையும் ஒப்பிடுகிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:

  • கேள்வி: நீங்கள், இளம் மாணவனாக ஜேஎன்யு-வில் சேரும்போது, உங்களின் உணர்வுகள் எப்படி இருந்தன?

சீத்தாராம் யெச்சூரி: என் முதல் உணர்வு அங்கே யிருந்த சூழ்நிலை மிகவும் சுதந்திரமாக இருந்தது. ஆசிரியர்கள் அவர்களை விளிக்கும்போது, அவர்களின் பெயர்களைச் சொல்லித்தான் விளிக்க வேண்டும் என்று எங்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள். அவர்கள் எங்களிடம், “பாடத் திட்டங்களை மனப்பாடம் செய்யக் கூடாது” என்றும், “மிகவும் படைப்புத்திறன் உள்ளவர்களாக நீங்கள் அனைவ ரும் உருவாக வேண்டும்” என்றும், “வெளியே செல்லுங்கள், நிறைய படியுங்கள்” என்றும் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். உண்மையில், என்னுடைய நுழைவு நேர்காணலின் போது, மிகவும் மூத்த பேராசிரி யர்கள் மூன்று பேர் இருந்தார்கள். திடீரென்று அவர்களில் ஒருவர் என்னிடம், “நீ சிகரெட் பிடிப்பாயா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன்.  உடனே அவர், “அப்படியா னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்” என்றார்.

அவசரநிலைக்கு எதிரான  முதல் வேலை நிறுத்தம்

  • கேள்வி: 1975இல், நீங்கள் ஜேஎன்யு-வில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டு காலம் வளாகத்திற்குள் வாழ்நிலை எப்படி இருந்தது?

சீத்தாராம் யெச்சூரி: அவசரநிலைப் பிரகடனம் செய்யப் பட்ட அன்றே ஜேஎன்யு-வில் கிளர்ச்சிகள் தொடங்கிவிட்டன. துணைவேந்தர், மாணவர் சங்கத்திற்குத் தடை விதித்தார். ஆனால் நாங்கள் அதனை எதிர்த்தோம். மாணவர் சங்கம் ஒன்றும் பல்கலைக்கழகத்தின் சட்டங்களில் ஒன்று அல்ல என்றோம். அவ்வாறு அவர்களால் அதனைத் தடை செய்ய முடியவில்லை. பின்னர், ஜூலையில் மாணவர் சேர்க்கைக் காலம் வந்தது.  இப்போது எனக்கு நினைவில் உள்ளபடி, 13 மாணவர்கள் அரசியல் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டார்கள். அவர்களின் கல்வித்தகு தியில் எவ்விதக் குறையும் இல்லை என்ற போதிலும் அவர்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து  நாங்கள் மிகப்பெரிய கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தினோம். நிர்வா கம் நடவடிக்கை எடுத்தது. எங்களில் சிலரை வெளியேற்றி யது. பின்னர் இந்த நடவடிக்கைக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தம் நடத்தினோம். நாட்டில் அவசர நிலைக்கு எதிராக மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்த முதல் நிகழ்வு இதுவேயாகும்.

இந்தித் திரைப்படம்போல்...

வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளன்று, தில்லிக் காவல்துறையினர் வளாகத்திற்குள் சாதாரண உடை களுடன் நுழைந்தார்கள். மேனகா காந்தி (அப்போது மேனகா ஆனந்த்), ஜேஎன்யு-வில் மொழிகள் துறையில் (School of Languages) தன்னை மாணவராகப் பதிவு செய்தி ருந்தவர், உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டார். இது காவல்துறையினரிடையே சிடு சிடுப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மாணவர் சங்கத் தலை வராக இருந்த டி.பி. திரிபாதியைக் கைது செய்வதற்காக அத்துறையின் வாயிலருகே வந்தார்கள். 

அப்போது அவர் தாடி வைத்துக் கொண்டிருந்ததால், காவல்துறையினர் அவருக்குப் பதிலாக வேறொரு தாடி வைத்திருந்த மாணவரை, கைது செய்தார்கள். அவர் வேறு யாருமல்ல, பிரபிர்புர்கயஸ்தா தான். அது என்னவோ, ஒரு இந்தித் திரைப்படக் காட்சியைப் போலவே இருந்தது. பின் போலீசாரின் அம்பாசடர் கார்  பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே பறந்து சென்றது. அவ்வாறு சென்றபோது அதன் கதவு திறந்தே இருந்ததால் உள்ளுக்குள்ளிருந்த ஒரு போலீஸ்காரர் வெளியே விழுந்துவிட்டார்.  20 நிமிடங்களில் காவல் ஆணையர் எங்களை பய முறுத்துவதற்காக எங்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டிக் கொண்டே வந்தார். பின்னர் அன்று நள்ளிரவு சமயத்தில் காவல்துறையினர் வந்தார்கள். விடுதிகள் அனைத்தையும் சுற்றி வளைத்தார்கள். ஆனால் எங்களில் பலர் ‘பெரியார் மாணவர்கள் விடுதி’க்குள் இருந்தோம். அதனைச் சுற்றி வளைத்திடாமல் அவர்கள்  மாணவிகளின் விடுதிக்கு வெளியே நின்றிருந்தார்கள். அத்துடன் இன்னொரு மாண வர்கள் விடுதியிலிருந்த 67 மாணவர்களைச் சுற்றி வளைத்தி ருந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக எண் ணற்ற தந்திரங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டி யிருந்தது.

நள்ளிரவில்... ரகசியமாக...

  •  கேள்வி: அதனால்தான் அவசரநிலைக் காலத்தின்போது ஜேஎன்யு மூடப்பட்டதா?

சீத்தாராம் யெச்சூரி : இல்லை. துணை வேந்தர், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக இருந்தபோதிலும்கூட, கல்விப் பணி சீர்குலைந்திடவில்லை. எவரேனும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தாலோ அல்லது கிளர்ச்சிப் போராட் டங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் பல்கலைக்கழகத்திலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். எனவே, நாங்கள், “எதிர்ப்புக் குழு”  (“Resistance” group) ஒன்றை அமைத்தோம். துண்டுப்பிரசு ரங்களை விநியோகிப்பது மிகப் பெரிய வேலை. அனைத்து விடுதிகளும் கடும் கண்காணிப்பிற்குள் இருந்தன. முனிர்கா அப்போது ஒரு மிகச் சிறிய கிராமமாக இருந்தது. அங்கே ஒரேயொரு ‘சைக்ளோஸ்டைல்’ கடை மட்டுமே இருந்தது. ஆகவே, அங்கே நள்ளிரவில் நாங்கள் செல்வோம். கடைக்காரரை எழுப்புவோம். துண்டுப்பிரசுரங்களை நகலெடுப்போம், பின்பு வளாகத்திற்குள் வந்து அவற்றை ரகசியமாக விநியோகிப்போம்.

சீத்தாராம் யெச்சூரி: 1977 அக்டோபரில், துணை வேந்தர் பி.டி. நாக் சௌத்ரி மற்றும் வேந்தர் இந்திரா காந்தி உட்பட “குற்றமிழைத்தவர்களைத் தண்டித்திடுக” (“punish the guilty”) என்னும் மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தினோம். வேலைநிறுத்தத்தின்போது, நிர்வாகத்தின் நுழை வாயிலில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். அப்போது துணை வேந்தரின் கார் உள்ளே வந்தது. நான் அதனிடம் சென்று, அதனை வளாகத்திற்குள் நுழைய விடாது தடுத்தேன். மிகவும் பவ்யமாக அவரிடம், “சார், பல்க லைக் கழகம் உங்களின் எல்லைக்கு வெளியே இருக்கிறது, (“Sir, the University is out of bounds for you)” என்றேன். அவர் காரை ஒரு சுற்று சுற்றித் திருப்பிக்கொண்டு சென்று விட்டார். 

பின்னர், பல்கலைக் கழகம் காலவரையின்றி மூடப்பட்ட தாக ஆணைகள் வந்தன. ஆனால் மாணவர்களும், ஆசிரி யர்களும் பல்கலைக்கழகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்தினோம். நூலகம் 24 மணி நேரமும் திறந்திருந்தது. அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன. உணவுக்கூடமும் செயல் பட்டது. இவ்வாறு சுமார் 40 நாட்கள் நடந்தன. பணப் பற்றாக் குறை ஏற்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள், “பல்கலைக்கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கி றது, துணை வேந்தர் வேலைநிறுத்தத்தில் இருக்கிறார்,” என்று வாசகங்கள் எழுதிய பதாகைகளை அணிந்து மாண வர்களை சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கும், கன்னாட் பிளேஸூக்கும் அனுப்பினோம். அங்கு பணம் வசூலித்து, பல்கலைக்கழகத்தை நடத்தினோம். 

பின்னர் எங்கள் போராட்டத்தை விரிவுபடுத்த தீர்மா னித்து, பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை யும் சேர்த்தோம். அவர், மக்களவைத்  தேர்தலில் தோற்ற பின்னரும்கூட அந்தப் பதவியில் நீடித்துக் கொண்டிருந் தார். எனவே, எங்களில் 500 பேர் அவர் இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றோம். அவரது உதவியாளர்கள், “எங்க ளில் ஐந்து பேர் மட்டும் அவரைப் பார்க்க வருமாறு,” கூறி னார். ஆனால், “நாங்கள் அனைவரும் செல்வோம்,” என்று வலியுறுத்தியபோது, இந்திரா காந்தியே வெளியே வந்து விட்டார். எங்கள் தீர்மானத்தை அவரிடம் படித்துக் காண்பித் தோம்.  அது, முழுக்க முழுக்க வழிபாட்டு முறையிலேயே அமைந்திருந்தது. எனினும் அவர் மிகவும் தன்னடக்கத்து டன் அவற்றைக் கேட்டார். நான், தீர்மானத்தை அவரிடம் ஒப்படைத்தோம். அதனையும் அவர்  மிகவும் பவ்யமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர் ஒருசில நாட்களில் அவர் ராஜினாமா செய்துவிட்டார்.  

இரும்புக்கம்பிகள்  ஏந்திய குண்டர்கள்

  •  கேள்வி: ஜனவரி 5 அன்று, கைகளில் இரும்புக் கம்பிகள் ஏந்திக் கொண்டு குண்டர்கள் ஜேஎன்யு வளாகத்திற்குள் நுழைந்ததை நாம் பார்த்தோம். ஜேஎன்யு-வில் இதுபோன்ற ஒருநிகழ்வு இத்தனை ஆண்டு காலத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: இதுபோன்று இதற்கு முன்னெப் போதும் நடந்ததில்லை. அவசரநிலைக் காலத்தில்கூட நடந்ததில்லை. இது முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட ஒரு தாக்குதலாகும். எந்தெந்த அறைகளைத் தாக்க வேண்டும் என்று அவர்கள் முன்கூட்டியே தீர்மானித்திருந் தார்கள். வெளியார்கள் எப்போதாவது உள்ளே நுழைந்து ரகளை செய்வார்கள். ஆனால் இதுபோன்று பெரிய அள விலான வன்முறை வெறியாட்டங்களை எப்போதுமே நாங்கள் பார்த்ததில்லை. F கேள்வி: பாஜக அரசாங்கம் ஆட்சி அமைத்த முதல் நாளிலிருந்தே அதற்கு ஜேஎன்யு மீது ஒரு கண் இருந்ததாக ஏன் நீங்கள் நினைக்கி றீர்கள்? சீத்தாராம் யெச்சூரி: அவர்களுடைய குறிக்கோள், இன்றைய மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசை  ஓர் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதேயாகும். இது வெற்றி பெற வேண்டுமானால் இதனை மக்கள் ஏற்கச் செய்யுமாறு செய்திட வேண்டும். அவ்வாறு மக்கள் ஏற்பதற்கு, அவர்களிடமுள்ள பகுத்தறிந்து விஷயங்களைப் பார்க்கும் குணத்தை,  பகுத்தறிவற்றமுறையில் தாங்கள் சொல்வதை மட்டுமே கண்களை மூடிக்கொண்டு கேட்கக்கூடிய ஒன்றாக மாற்றுவதன் மூலம் மட்டுமே சாத்தியம். 

சிந்தித்துச் செயல்படும் அமைப்பு 

ஜேஎன்யு என்பது எதையும் விமர்சன அணுகுமுறையு டன் சிந்தித்துப்பார்த்து செயல்படும் ஒன்றாகும். அதனால் தான் அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. காங்கிரஸ் கட்சி, ஜேஎன்யு-வை நிறுவிய சமயத்தில் அது தன் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு உதவிடும் மூளை உழைப்பாளிகளை (thinktank) உருவாக்கிடும் என்று நினைத்தது. மாறாக அது, ஆளும் வர்க்கங்களைக் கடுமை யாக விமர்சிப்பவர்களை உருவாக்கி இருக்கிறது.

  •  கேள்வி:  ஆளும் கட்சித்தரப்பில், சமீபத்திய நிகழ்வுகள் கல்வி மையங்களில் இடதுசாரி களின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள்மீது இடதுசாரிகள் மேற்கொண்ட தாக்குதல் என்று சொல்லப்படுகிறதே!

சீத்தாராம் யெச்சூரி: இடதுசாரிகள் எப்போதும் அங்கே ஆதிக்க சக்தியாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களிடையே இருந்துவரும் பகுத்தறிவுச்  சிந்தனையும், மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டிருப்பத னாலேயுமாகும். இடதுசாரிகள், நியமனங்களை ஏற்படுத் திக்கொண்டிருப்பதுமில்லை அல்லது பல்கலைக்கழகங்க ளுக்குள் தங்கள் மக்களை நுழைப்பதுமில்லை. இடதுசாரி கள் செய்வது தவறு என்று நீங்கள் நினைத்தால் மக்களிடம் போதிய ஆதாரங்களுடன் கொண்டு செல்லுங்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று மக்களிடம் நிரூபி யுங்கள். அதற்குப் பதிலாக,  குண்டாயிசம் மூலமாக அவர் கள் மீது உங்கள் மேலாதிக்கத்தை நிறுவ முயலாதீர்கள்.  

ராஜினாமா தான் தீர்வா?

  •  கேள்வி: ஜேஎன்யு பிரச்சனைக்கு ஒரே தீர்வு துணை வேந்தரின் ராஜினாமா தானா?

சீத்தாராம் யெச்சூரி: ஜேஎன்யு-வில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பரிகாரங்களில் இது ஒரு முக்கியமான கூறு ஆகும். அவருடைய தலைமையின் கீழ் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் செயல்பாடும் எதேச்சதிகார முறையில் அமைந்திருப்பதால்தான் ஜேஎன்யு முடமாகிக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று மணி நேரம், முகமூடி குண்டர்கள் மிகவும் சுதந்திரமான முறையில் தங்கள் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொள்ள அனுமதிக் கப்பட்டிருக்கிறார்கள். வளாகத்திற்கு வெளியே காவல்துறை யினர் நிறுத்தப்பட்டிருந்தும் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்திட அவர்கள் ஏன் வளாகத்திற்குள் வருவதற்காக அழைக்கப்படவில்லை?  

நன்றி: தி இந்து நாளிதழ், 19.1.2020, 
தமிழில்: ச.வீரமணி


 


 


 

 

;