tamilnadu

img

இன்று கோட்டை முற்றுகை

போக்குவரத்து  ஓய்வூதியர்கள்  சங்கம்  அறிவிப்பு

சென்னை, செப். 23- ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.24) தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்களன்று (பிப்.23) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களாக 80ஆயிரம் பேர் உள்ளனர். 2001ஆம் ஆண்டு முதல் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தங்களின்படி ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை ஆட்சியாளர்கள் வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். அவற்றை தர வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலப் பலன்களை காலதாமதமாக வழங்குகின்றனர். 46 மாதமாக அகவிலைப் படியை நிறுத்தி வைத்துள்ளதையும் வழங்க வேண்டும்.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி மாதத்தின் முதல் தேதியன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படியை 300 ரூபாயாக உயர்த்தி தருவதோடு, காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின்வாரியத்தைப் போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் 7ஆயிரத்து 850 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சுமார் 3 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப்பலன்கள் 900 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி துறைச்செயலாளர், நிர்வாக இயக்குநர்களை சந்தித்து முறையிட்டும் பலனளிக்காததால் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின்போது அமைப்பின் துணைத்தலைவர் ஏ.ரைமண்ட், சென்னை கிளைத் தலைவர்  எம்.நீலமேகம், விரைவு போக்குவரத்து கிளைத் தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

;