தமிழகத்தின் இதர பகுதிகளைப் போலவே நீலகிரி மலையிலும் தேசத்தின் சுதந்திரப் போராட் டங்கள் ஏராளமானவை நடந்துள்ளன. மகாத்மா காந்தி 1934 ஜனவரி 31 முதல் பிப்.4ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். 1940களில் சில ஆண்டுகள் வரை சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் சரத் சந்திர போஸ் குன்னூரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் அடிக்கடி பொதுக்கூட்டங்களை நடத்தி உள்ளுர் மக்களை சுதந்திர போராட்டத்திற்கு திரட்டினார்.
ஒத்துழையாமை இயக்கத்தின்போதும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போதும் நீலகிரி இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கே.ஏ.பொம்மன், கே,பி.அஜ்ஜா கவுடர், போக்கே கவுடர், கே.எம்.ஹிரியன், ராமன் நாயர், திருவேங்கிடம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், சுதந்திர போராட்டத்தில் நீலகிரி மலையின் படுகர் இன மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக, சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பெரும் எழுச்சியாக எழுந்த சமயம், படுகர்களின் ஹட்டி பண்டிகை கொண்டாடப்பட்டது. அச்சமயம், படுகர் இன மக்கள் தங்களது வழிபாட்டு தளத்திற்கு செல்லும்போது வழக்கத்திற்கு மாறாக மகாத்மா காந்திக்கு ஜே என கோஷமிட்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆங்கிலேய காவல்துறை அதிகாரி, துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால், இதற்கு சற்றும் அஞ்சாத படுகர் இன மக்கள், முடிந்தால் சுடுங்கள் என்று எதிர்த்து நின்று எச்சரித்து முழக்கமிட்டனர். இவ்வாறு பண்டிகையைக்கூட விடுதலைப் போராட்டத் திற்காக பயன்படுத்திய தீரர்கள் நீலகிரி மக்கள்.