tamilnadu

img

தமிழ்த் திரைவானின் சிவப்பு நட்சத்திரம்!

இன்றைய தலைமுறைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப் பிடிப்புடன் வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்த இளைஞருக்கு வயது 90. ஏழை கைத்தறி நெசவுத் குடும்பத்தில் பிறந்ததால் ஏழ்மை விரட்டிக் கொண்டே சென்றது. விளைவு, இரண்டாம் வகுப்பையும் தாண்டவில்லை. பிழைப்பைத் தேடி கோலாரில் தஞ்சம் புகுந்தார். அங்கு மாடு மேய்ப்பு தொழிலால் படிப்பை தொடர முடியவில்லை. தங்க சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட  அவரது இரு சகோதரர்களும் 2 நாள் கழித்து உயிரோடு மீட்கப்பட்டனர். இதையடுத்து  அந்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினர். அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வி.கே. கோதண்டராமன், மருத்துவர் கண்ணபிரான், பா.முனுசாமிக்கு உதவி செய்ய கிடைத்த வாய்ப்பு அவரை கட்சிக்குள் கொண்டு வந்தது. குடும்ப வறுமையால் ‘எலும்பும் தோலுமாக’ இருந்த அவர்   திருமகள் நூல் மில்லில் அடியெடுத்து வைத்தார். கேண்டீனில் லாபம் கூடாது என்கிறது கம்பெனி சட்டம். அதை மீறிய நிர்வாகத்தை அவர் எதிர்த்தார். மில்லில் தேர்தல் வருகிறது. செங்கொடி சங்கம் 100க்கு 99 சதவீத வாக்கு பெறுகிறது. நிர்வாகத்தின் ஆதரவு சங்கத்தை மண்ணை கவ்வ வைத்து தலைவரானார். அவர் தான் கே.கே.ரத்தினம். கேண்டீனில் குறைந்த விலையில் தரமான உணவை வயிறாரச் சாப்பிட்டார்கள். 

கூட்டுறவு அமைப்பு முறையை உருவாக்கி அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களையும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்தார்.தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. மேலும் சலுகைகள் கிடைத்தன. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட காமராஜரின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சண்முக முதலியார் தான் மில் உரிமையாளர். கோபம் கொண்ட அவர் 1958 ஆம் ஆண்டு தோழர் கே.கே. ரத்தினத்தை வேலையி லிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், 18 ஆம் தேதி டிஸ்மிஸ் செய்வதாக நோட்டீஸ் கொடுத்தாலும் 17ஆம் தேதி இரவே பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நொடிந்த அவரது குடும்பத்தை சிஐடியு சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரவணைத்தது.  பின்னர் அவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஒரு ‘கம்யூனிஸ்டாக’ வெற்றிக் கொடி நாட்டினார். பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். ‘ருத்ரநாகம்’ ஜூடோ ரத்தினம் என்று திரையுலகில் அழைக்கப்பட்டார். அவரிடம் பயிற்சி பெற்ற பலரும் இன்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த 70 ஆண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள அவரது இல்லத்தில் எப்போதும் செங்கொடி பட்டொளி பறந்து வீசிக் கொண்டிருக்கிறது.

இன்று தோழர் ஜூடோ  கே.கே.ரத்தினம் பிறந்தநாள்.