tamilnadu

img

ஒகேனக்கல் வந்தது காவிரி தண்ணீர்

ஒகேனக்கல், ஜூலை 20-  நான்கு நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை சனிக்கிழமையன்று வந்தடைந்தது.  கர்நாடக மாநிலத்தில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 17 ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 064 கன அடி வீதம் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குடகு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. சனிக்கிழமையன்று முதல் 4 நாட்களுக்கு அப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.சனிக்கிழமையன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதாலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

;