tamilnadu

img

தலைமை செயலாளர் ஆளுநரிடம் விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்தது சட்டவிரோதமானது என்று கூறி ஆளுநர் விளக்கம் கோரிய நிலையில், இதற்கு முன்பும் இதுபோன்று வழக்கு தொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி அரசின் உறுதியான நிலைப்பாட்டை தலைமை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான், தலைமை செயலாளர் டாம் ஜோஸிடம் விளக்கம் கேட்டிருந்தார். திங்களன்று தலைமை செயலாளர் அரசின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கேரள அரசு எதிராக உள்ளது. இது தொடர்பான சந்தேகங்களில் தெளிவுபெற வேண்டியது அவசியமாகும். உச்சநீதிமன்றத்தை நாடியது அதற்காகவே. மத்திய சட்டத்திற்கு எதிராக இதற்கு முன்பும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் அனுமதி பெறாமல் உச்சநீதிமன்றத்துக்கு கேரள அரசு சென்றது நெறிமுறை மீறல் என இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், திங்களன்று தனது நிலைப்பாட்டிலிருந்து கீழே இறங்கி வந்த ஆளுநர், எனது அனுமதி வேண்டியதில்லை, ஆனால் தலைமை செயலாளர் அளித்த விளக்கம் திருப்திகரமல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம் கேட்டு ஆளுநர் அளித்துள்ள கடிதத்திற்கு தலைமை செயலாளர் சான்றுகளுடன் பதிலளிக்க உள்ளார். இந்த பிரச்சனையில் முதல்வருக்கு இதுவரை ஆளுநர் கடிதம் எதையும் அளிக்கவில்லை. எனவே, இதில் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை எழவில்லை. ஆளுநரின் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் செவ்வாயன்று கூறுகையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்களை பாதிக்கும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் செல்வது அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமை. அந்த உரிமையை பறிக்க யாராலும் முடியாது என்றார்.

;