tamilnadu

img

ஆதரவற்றவர்களுக்கு சிபிஎம் உதவிக்கரம்

இரத்தம் கொடுத்து உயிர்காக்கும் வாலிபர் சங்கத்தினர்

திண்டுக்கல்,  ஏப். 26- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க சமூக ஊரடங்கு அமல்படுத்த ப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவரின் குடும்பமும் வேலையின்றி வருமானமின்றி சிரமப்படுகின்றனர். பல இடங்களில் மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லை. மக்களின் துயரம் ஒருபுறமிருக்க வீடற்றவர்கள் ,ஆதரவற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஏராளமானவர்கள் உணவின்றி அவதிப்படுகிறார்கள்.

திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த 75 வயதான ஷாகிரா என்பவர் அவரது ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரிய கடை வீதிக்கு வாரம் ஒரு முறை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று மட்டும் வந்து பிச்சை எடுத்துக்கொண்டி ருந்தார். யார் அருகிலும் செல்லாதீர்கள் அம்மா கொரோனா  வந்து விடும் என்றேன். எனக்கெல்லாம் கொரோனா இல்லை என்றார். மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு கொரோனா  வந்துவிடும் என்று எச்சரித்தேன். அப்படியே வந்து செத்தால் பரவாயில்லை . வயிற்றுப் பசிக்காக என்ன செய்வது என்றார்.

ரேஷன் கடையில் அரிசி பருப்பு மற்றும் 1000 ரூபாய் தருவதாக கூறுகிறார்கள். நீங்கள் பெற வில்லையா என்றேன். எனக்கு ரேசன் கார்டு இல்லை.  மூன்று முறை மனு செய்தேன். ஒவ்வொரு முறையும் புரோக்கர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தேன் . ஆனால் ரேசன் கார்டு கிடைக்கவில்லை என்றார். அரசாங்கப் பணம் ஒரு பைசா கூட எனக்குத் தரவில்லை என்று வேதனையுடன் கூறினார்.

இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் ஒன்றியக்குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர் கிளை சார்பாக  தினசரி 100 பேர்களுக்கு ஒரு வேளை உணவு சமைத்து வழங்கப்படுகிறது. ஓயாது உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இவர்கள் உணவு வழங்குகிறார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐயன் குளம் பகுதியில் வீடு வீடாக சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. சுமார் 5 லட்சம் ரூபாய் உழைத்து சம்பாதித்த தங்களின் சொந்த பணத்தைசெலவு செய்து மாவட்டம் முழுவதும் வழங்கியுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. இதேபோல் எல்ஐசி ஊழியர்கள் பொருள் உதவி வழங்கியுள்ளனர்.

அதேபோல பழனி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வாலிபர் சங்க ஒன்றிய குழுத் தலைவர்கள் பொருள் உதவி வழங்கினர். பேகம்பூர் பகுதி முழுக்க மக்கள் முடக்கப் பட்டுள்ளனர். ஆனால் முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் பிலால் முகமது தலைமையில் ஒரு குழு வினர் மிகவும் சிரமப்படக்கூடிய நூறு குடும்பங்களை தேர்ந்தெடுத்து அரிசி மற்றும் உணவுபொருட்களை வழங்கியுள்ளனர்.

இதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் ,கல்லூரி மாணவர்கள் ஒன்றாக திரண்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.  இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக வரக்கூடியவர் களுக்கு தேவையான ரத்தம் ரத்த வங்கிகளில் இல்லாத நிலை உள்ளது. அதனால் இளைஞர்கள் ரத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை அரசு தரப்பில் இருந்து வந்துள்ளது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு முன்பாகவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக 50 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.இதய நோயாளிகள் , சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான மாத்திரைகளை அந்தந்த பகுதியில் உள்ள வாலிபர் சங்க இளைஞர்கள் மருத்துவமனைக்கு சென்று வாங்கி வந்து கொடுத்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு சார்பாக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி 500 ரூபாய் பெறுமான மளிகை சாமான்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. குஜிலியம்பாறை ஒன்றியம் கூடலூர் கட்சி கிளையை சேர்ந்த தோழர் தங்கராஜ் என்பவர் தன் சொந்தப் பணத்தில்800 கிலோ அரிசியை பாதிக்கப்பட்ட150 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வரை வழங்கியுள்ளார். பழனி நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 21 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.

இன்னும் நமது இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு இளைஞர்கள் குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஆனால் அரசாங்கமோ இதைவிட மக்களுக்கு கூடுதலாக செய்ய முடியும் என்ற நிலை இருந்தும் போதிய உதவி செய்யவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் மக்களுக்காக இதோ நாங்கள் இருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோழமை இயக்கங்களும் நல்ல உள்ளம் படைத்தவர்களும் களத்தில் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்  என்பதே நிதர்சனம்.  (ந.நி)

ஊரடங்கு முடியும் வரை உணவு வழங்குவோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழு சார்பாக ஏழை எளிய ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்கும் நிகழ்வில் மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜாமணி,செல்வகனேசன், பவுல்ராஜ், ஜோசப், சரத்குமார், சிஐடியு பெருமாள் மற்றும் குடும்பத்தினர், வாலிபர் சங்க தோழர்கள் சிவா மற்றும் மதன் ஆகியோர்  சாலையோரங்களில் ஆதரவற்றோர் 100 பேருக்கு பேருக்கு உணவு சமைத்து வழங்கினர். ஊரடங்கு காலம் முடியும்வரை இப்பணியை தொடர்ந்து மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

;