tamilnadu

img

குழந்தைகளும் குடற்பூச்சிகளும்

தடுப்பு முறையாக உணவு உண்பதற்கு முன் கையை நன்கு கழுவ வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தவிர்த்துத் தனிக் கழிவறைகளில் மலம் கழித்துப் பழக வேண்டும். தண்ணீரில் கழிவு நீர் கலக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களில் காலணி அணிந்து கொள்ள வேண்டும். இதற்கு “பெயினியம் ஹைட்ராக்சைடு” என்ற மருந்தையும் பிறகு இரத்த விருத்திக்கு இரும்புச்சத்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் கொடுப்பது வழக்கம். அடுத்ததாக நாடாப் பூச்சிகளைப் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் (Tape Worm) என்று கூறுவார்கள். இப்பூச்சி பற்றியுள்ள பன்றி, மாடு ஆகியவற்றின் இறைச்சியை உண்பதால், இது குடலை அடைகிறது. ஒவ்வொரு மிருகத்திற்கும் தகுந்த படி பூச்சியின் அமைப்பிலும், குணத்திலும் வேறுபாடுகள் உண்டு. பூச்சியின் நீளம் 10 மீட்டர் வரை இருப்பதுண்டு. இது மலத்துடன் வெளியே வரும் போது துண்டு துண்டாக வெளி வரும். இப்பூச்சி நம் நாட்டில் அதிக அளவில் காணப்படவில்லை. பன்றி, மாடு போன்ற மிருகங்களின் இறைச்சியை நன்றாக வேக வைக்காமல், உண்பதால் இப்பூச்சி தொற்றிக் கொள்கிறது. இப்பூச்சி பசியின்மை வயிற்றுவலி, அஜீரணம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

பன்றிகளினால் ஏற்படும் நாடாப் புழுவின் குஞ்சுகள் மூளை, தசைகள், கழுத்து, நாக்கு ஆகியவற்றைத் தாக்கும். மூளையில் கட்டியை ஏற்படுத்தி வலிப்பை ஏற்படுத்தும். ஆனால் மாட்டின் இறைச்சியினால் உண்டாகும் நாடாப்பூச்சி இம்மாதிரிக் குணங்களை உண்டு பண்ணுவதில்லை. மாடு, பன்றி, போன்றவற்றால் உண்டாகும் நோயைக் குணப்படுத்த ‘மெப்பாகிரின்’ என்ற மருந்தை மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். இந்நோய்க்குத் தடுப்பு முறை இறைச்சியை நன்றாக வேக வைத்து உண்பதும், வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மலம் கழிக்கக் கழிவறைகளை மட்டுமே உபயோகப்படுத்துவதும் ஆகும். நாடாப்பூச்சிகளில் மற்றொரு வகை நாயுடன் ஒட்டிப் பழகுவதால் வரும் நாடாப்பூச்சி ஆகும். இது மதுரை மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இப்பூச்சியின் முட்டைகள் வாய் வழியாகச் சென்று குடலை அடைகின்றன. அங்கிருந்து இரத்தக்குழாய்களின் மூலம் கல்லீரலுக்குச் சென்று அங்கு பெரும் கட்டியை உண்டு பண்ணுகின்றன. சில சமயங்களில் இக்கட்டிகள் மண்ணீரல், மூத்திரக்குழாய், மூளை, நுரையீரல், எலும்பு போன்ற இடங்களிலும் ஏற்படுவதுண்டு. இக்கட்டிகளை எக்ஸ்ரே மூலம் காணலாம். இதற்கு சில சமயங்களில் மாத்திரைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.  இதற்குத் தடுப்பு முறையாக நாயுடன் ஒட்டிப் பழகாமையும், அது சாப்பிடும் தட்டுகளை வேறுபடுத்தி வைப்பதும் அவசியம். தெரு நாய்களை ஒழித்து, வீட்டு நாய்களுக்குத் தகுந்தபடி மருந்து கொடுத்து நாடாப்புழுவை அகற்ற வேண்டும். இறந்த பிராணிகளை மிக ஆழத்தில் புதைக்க வேண்டும். இல்லையேல் எரித்துவிட வேண்டும். ஏனெனில் இறந்த பிராணிகளை நாய் தின்றும்பொழுது அவற்றில் உள்ள நாடாப்புழுவே நாயைப் பற்றிக் கொள்கிறது.

குடல்பூச்சிகளில் சாட்டைப்பூச்சி என்ற ஒரு வகை உண்டு. இப்பூச்சியின் முட்டைகள், உணவு, தண்ணீர் இவற்றின் மூலம் குடலுக்குள் செல்கின்றன. அங்கு அவை புழுக்களாக மாறி, சுமார் ஒன்றரை அங்குலம் நீளம் வரை வளர்கின்றன. இப்புழுக்கள் இடும் முட்டைகள் மலத்தின் வழியே வரும். இப்பூச்சியின் முட்டைகள், அசுத்தமான தண்ணீர், வேக வைக்காத அல்லது மலத்தை உரமாக இட்டு வளரும் காய்கனிகள் மூலம் மீண்டும் குடலுக்குள் செல்லுகின்றன. குழந்தைகளுக்கு இப்பூச்சிகள் பொதுவாக ஊறுவிளைவிப்பதில்லை. சில சமயங்களில் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, குடல்வால் அடைப்பு, குதம் தள்ளுதல் போன்றவற்றை உண்டாக்கும். மருத்துவர்கள் இப்பூச்சிக்கு ‘தயோபெண்டசோல்’ என்ற மருந்தைக் கொடுப்பார்கள். வெப்ப நாடுகளில், குறிப்பாக, நம் நாட்டில் ஒரு குழந்தையின் மலத்தில் நாக்குப்பூச்சி, கீரிப்பூச்சி, கொக்குப்பூச்சி, சாட்டைப்பூச்சி ஆகியவை ஒரே சமயத்தில் பொதுவாகக் காணப்படும். வாந்தி, பசியின்மை, உடல் அரிப்பு, பேதி, சுரம், மூச்சு இழுப்புச் சுணக்கம், இரத்தச்சோகை ஆகியவை இவற்றின் பொது அறிகுறிகளாகும்.

மேலே குறிப்பிட்ட பூச்சிகள் அல்லாத, கண்ணுக்குத் தெரியாத குடற்பூச்சிகளும் குடலில் உண்டு. அவைகளில் ‘எண்ட் அமிபா’ ’ஜியார்டியோ’ என்பவை முக்கியமானவைகளாகும். இவை காரணமாகக் காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, பெருங்குடலில் புண், கட்டி, வீக்கம், கல்லீரலில் வீக்கம் ஆகியவை உண்டாகும். இந்த நோய் உள்ளவர்கள் அசுத்தமான கைகளுடன் குழந்தைகளுககு உணவு கொடுப்பதால் இந்நோய் அவர்களைப் பற்றிக் கொள்ளும். இந்நோய் தென்பட்டவுடன் அசட்டையாக இல்லாமல் உடனே தகுந்த சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். மருத்துவரின் அனுமதி மூலம் மலம் பரிசோதனை செய்து, அவர் கூறும் அறிவுரையின்படி ‘மெட்ரிடசோல்’ போன்ற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் குழந்தைகளிடம் அதிகமான அளவில் குடற்பூச்சிகள் காணப்படுவதற்குக் காரணம், நமது பழக்க வழக்கங்களே ஆகும். தெரு ஓரங்களிலும், திறந்த வெளிகளிலும், மலம் கழிக்கும் பழக்கம் இன்றும் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. கைகால்களைச் சுத்தமாகக் கழுவிட்டு உணவு உட்கொள்ளும் பழக்கம் பல பேரிடம் இல்லை, நமது கிராம மக்களிடையே, செருப்பு அணியும் பழக்கமும் குறைவாகத்தான் உள்ளது. குடற்பூச்சிகளின் பாதிப்புக்களிலிருந்து விடுபட, வெளியிடங்களில் மலம் கழிக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். சுத்தமான கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் எல்லோருக்கும் வர வேண்டும். சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக கை, கால்களைக் கழுவ வேண்டும். செருப்புப் போடும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். உண்ணும் காய்கனிகளுக்கு மலத்தை உரமாகப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலே கூறப்பட்டவை அனைத்தும் மிகச் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் குழந்தைகளுக்கு, குடற்பூச்சி வருவதற்குக் காரணம் இவைதான். ஆகவே சுகாதாரமான பழக்கங்களை நாம் கைக்கொள்வதோடு நமது குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற நோய்களை ஒழிக்க இதுதான் சரியான வழியும் - வகையும் ஆகும்

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1