அமேசான் மழைக்காடுகள் உலகிற்கும் மனித சமூகத்திற்கும் இன்றுவரை அதிசயமே. ஏனெனில் அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத மர்மங்கள் நிறைய உள்ளன. இறுக்கமும், நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை, வருடமெல்லாம் மழை பெய்யும். இக்காடுகளில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான விலங்குகள், பறவைகள், இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
அமேசான் காடுகள் தென்அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளன. அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு எழுபது லட்சம் சதுர கிலோ மீட்டர்கள் இதன் காடு மட்டும் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர். இந்த காடுகள் பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்குவடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவிக்கிடக்கின்றன. இதில் 60 சதவீத மழைக்காட்டினை பிரேசில் தன்னகத்தே கொண்டுள்ளது. அமேசான் காட்டில் 6992 கி.மீ. நீளம் கொண்ட அமேசான் ஆறு உள்ளது. இது உலகிலேயே பெரிய ஆற்றுப்படுகையை கொண்டதாகும். இந்த ஆற்றுக்கு 1100 துணை ஆறுகள் உண்டு.
உயிரினங்கள்
உயிரியல் வளம்மிக்க அமேசான் காடுகளில் உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன. 3000 வகை மீன்கள், 1500 வகை பறவைகள், 1800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள், இந்த காடுகளில் உள்ளன. உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடி கொடிகள், மூலிகை செடிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் காடுகள்.
அமேசான் காடுகளில் 3000 பழவகைகளில் 200 வகை பழங்கள் மட்டுமே நம் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஆனால் அக்காடுகளில் வாழும் மக்கள் 2000 வகை அரிய பழங்களை உண்கின்றனர். அமேசான் காடுகளில் கி.பி.1500ஆம் ஆண்டுகளில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இப்போது 2.5 லட்சம் பேர்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன. இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர். இன்றளவும் இவர்கள் விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால் என்னவென்றே தெரியாது. உலகின் மிகப்பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரையில் வெகுசாதாரணமாக காணப்படுகின்றன. இந்த பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தை பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனை கொன்றுவிட முடியும். தம்மை விட பலமடங்கு பெரிய விலங்குகளைக் கூட ஒரு சில நிமிடங்களில் கடித்து குதறி எலும்புக்கூட்டை மட்டும் விட்டு வைக்கிற பிரானா மீன்கள் ஏராளமாக உள்ளன. அதே போல் ரத்தக்காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயை பரப்பும் வல்லமை இதற்குண்டு.
அமேசான் ஆறு
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் ஆறு உலகின் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். அமேசான் ஆற்றின் எந்தபகுதியிலும் பாலம் கட்டப்படவில்லை. ஏனெனில் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதால், அங்கு சில நகரங்களே உள்ளதால் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. இந்த ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு சுமார் ஒரு விநாடிக்கு 2,09,000 கனமீட்டர், ஆண்டுக்கு 6591 கன கிலோ மீட்டர் ஆகும். உலகத்தில் உள்ள ஆறுகளில் இருக்கும் நீரில் அமேசானின் பங்கு 20 சதவீதம் ஆகும். அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும். இது சுமார் 70,50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. அமேசான் ஆற்றுப்படுகை பெரு, ஈக்குவடார் நாடுகளிலும், பிரேசில் நாட்டில் பெரும் பகுதியும் உள்ளது. 17 துணை ஆறுகள் 1000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக் காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலமுடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள், இதில் குறிப்பிட்ட தூரம் வரை (மனவுஸ்) செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ்பாகம் நீர்நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கி.மீ. தூரம் வரை செல்லலாம்.
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு நதி ஒடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் குறித்த ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டு மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகள் வாலிய ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஓடும் நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு “ஹம்சா நதி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமேசான் காடுகளில் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத மர்மங்கள் நிறையவே உள்ளன.
சுற்றுச்சூழல்
அமேசான் காடுகள் சுற்றுச்சூழலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை- ஆக்சைடை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. உலகில் உருவாகும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதம் ஆக்சிஜன் அமேசான் காடுகள் மூலம் தான் உருவாக்கப்படுகிறது. உலகில் உள்ள 40 சதம் விலங்குகளின் வசிப்பிடமாக இருக்கிறது. அதனால் இந்த அமேசான் காட்டை “பூமியின் இதயம்” என்று குறிப்பிடுகிறார்கள். வேறு சிலர் பூமியின் நுரையீரல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இக்காடுகளில் உள்ள மரங்கள் பூமி வெப்பம் அடைவதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு பெய்யும் மழைநீர் தரையை அடைய 10 நிமிடங்கள் ஆகும். அந்த அளவிற்கு அடர்த்தியான காடுகள்.
அமேசானில் தீ
அமேசான் காடுகளில் தீ பெருமளவில் பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது. கோடைக் காலங்களில் காட்டுத் தீ ஏற்படும் என்றாலும், தற்போது முன் எப்போதும் இல்லாத அளவில் காட்டு தீ ஏற்பட்டிருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அரிய உயிரினங்கள், தாவர இனங்கள் இந்த காட்டுத்தீயால் அழிந்து வரும் நிலையில் இங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாசா மற்றும் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள படங்கள் தீயின் தீவிரத்தை பிரதிபலிக்கின்றன. இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தையும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 74 ஆயிரம் தீ ‘விபத்துக்கள்’ நடந்திருப்பதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த தீ விபத்து 84 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணம் காடுகள் அகற்றப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்ட இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து தான். அமேசான் காடழிப்பு 1970 களில் தீவிரமாக தொடங்கி 1990 இறுதி மற்றும் 2000 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. 2004ஆம் ஆண்டில் பிரேசிலில் சுமார் 28,000 சதுர கி.மீ.காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரேசிலின் சாவ்பாலோ நகரிலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் வனத்தில் தீ பரவி வருகிறது. ஆயினும் சாவ்பாலோ நகரமே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. பூமியின் நுரையீரலை பாதுகாக்க வேண்டுமென்றால் உலக நாடுகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அமேசான் காட்டுத்தீயை அணைக்க முன்வர வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் அமேசானில் உரிமை கொண்டாட நினைப்பது புவி வெப்பமடைதலுக்கு இட்டுச்செல்லும். சுற்றுப்புறச்சூழல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
===கே.பி.பெருமாள===