tamilnadu

img

இளம் தோழர்களே...! - ச.லெனின்

“மிக ஏராளமான அலுவல்கள் உள்ள ஒரு மனிதருடன் தாங்கள் பேசப் போகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் வேண்டப்படுகிறார்கள். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இது ரஷ்யப் புரட்சிக்கு பிறகான காலத்தில் லெனினைச் சந்திக்க வருபவர்கள் அமரும் வரவேற்பறையில்  வைக்கப்பட்டிருந்த வாசகமாகும். 

புதிய சமூகத்தைக் கட்டியமைப்பதற்கான பணிகளோடு எதிர்ப் புரட்சி சக்திகளின் ஆயுதம் தாங்கிய தாக்குதல்களையும், கருத்து ரீதியான மோதல்களையும், அந்நிய நாட்டினரின் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அதே நேரம் உட்கட்சியில் எழுந்த கருத்து வேறுபாடுகளையும் கையாள வேண்டிய நிலை. எல்லாவற்றுக்கும் மேலாக உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு எழுந்த நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வேறு. இன்னும் ஏகப்பட்ட பொறுப்புகளும் கடைமைகளும் இருந்தன. இவை அந்த வரவேற்பு அறையில் இருந்த வாசகத்தின் படாடோபம் அற்ற எதார்த்தத்தை விளக்கிடும்.

இளம் கம்யூனிஸ்ட்டுகள்

இப்படியான ஒரு சூழலில் தான் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி இளம் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாடு நடைபெற்றது. போர்க் களத்திலும், ஆலைகளிலும், விவசாய நிலங்களிலும் புதிய ரஷ்யாவைக் கட்டமைக்கும் எல்லா வேலைகளிலும் முன்னிற்கும் இளம் கம்யூனிஸ்ட்டுகள் கூடியிருந்தனர். லெனின் இதில் பங்கேற்று உரையாற்ற இருந்ததே அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்திருந்தது. தோழர்களே, ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஒருவர் பாக்கியின்றி எல்லோரும் போர் முனைக்குச் செல்லுங்கள் என்று லெனின் கூறியிருந்தால் அவர்கள் மறு பேச்சின்றி போர் முனைக்கு சென்றிருப்பார்கள். ஆனால் லெனின் அவ்வாறு கூறவில்லை.

கற்பது

லெனின் சொன்னார்... இளைஞர் அமைப்புகளின் பணிகளை ஒரே சொல்லில் வேண்டும் என்றால் அது ‘கற்பது’ என்பது தான் என்றார். “கம்யூனிசத்திற்கு மாற விரும்பும் எல்லா இளைஞர்களும் கம்யூனிசத்தைக் கற்க வேண்டும். மனிதகுலம் உருவாக்கியுள்ள அறிவுச் செல்வம் அனைத்தினாலும் நம் மனத்தை வளப்படுத்திக் கொள்ளும் போது தான் நாம் கம்யூனிஸ்ட் ஆக முடியும். ஆழ்ந்து அறிவது தனக்கு தேவையில்லை என்று ஒருவர் சொன்னால் அவர் எவ்வகையிலும் கம்யூனிஸ்ட் ஆக மாட்டார்” என்றார் லெனின்.

முந்தைய அனைத்து அதிகார வர்க்க சமூகத்திலும் ஒடுக்குமுறைகள் மூலம் பெறப்பட்ட உழைப்பின் பயனாய் மனித குலம் திரட்டிச் சேர்த்த அறிவியல்களின் சேமிப்புகளுக்கு ஈடான வளர்ச்சியாக பாட்டாளி வர்க்கப் பண்பாடு அமைந்திட வேண்டும். “ மார்க்சியமே மனித அறிவியல்களின் தொகுப்பிலிருந்து தோன்றியது தான். ஒரு விவரத்தைக் கூட கவனிக்காது விட்டு விடாமல், மனித சமூகத்தால் உருவாக்கப்பட்டிருந்த அனைத்தையும் மார்க்ஸ் விமர்சன நோக்குடன் மாற்றி அமைத்தார். மனித சிந்தனையில் உருவாக்கப்பட்டிருந்தவை எல்லாவற்றையும் அவர் புரிந்து தெளிந்தார், விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். தொழிலாளி இயக்க அனுபவங்களைக் கொண்டு சரி பார்த்தார். மனித குலத்தின் வளர்ச்சி அனைத்தினாலும் உருவாக்கப்பட்ட பண்பாட்டைச் சரியாகத் தெரிந்து கொள்வதன் வாயிலாகவே அதை மாற்றி அமைத்து பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை அங்கு நிறுவ முடியும் ” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் லெனின். 

கற்றறிதல் மட்டும் போதுமா?

“கற்றறிந்த எல்லா விஷயங்களையும் ஒன்றிணைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் முதலாளித்துவ முறையிலான மனப்பாடம் செய்யும் கல்வி அறிவு உண்மையில் கம்யூனிசம் கோரும் செயலுக்கு உதவாது. கம்யூனிசத்தைப் பற்றிய நூல்களில் கூறப்பட்டிருப்பதை அப்படியே ஏட்டளவில் கற்றுத் திருப்பிச் சொல்வது கால் காசுக்குக் கூட உதவாது; ஏனெனில் இது முதலாளித்துவ சமுகத்தில் நிலவுவது போன்று, சித்தாந்தத்திற்கும் நடைமுறைக்கும் இடையே இருக்கும் பிளவை தொடர்வது போன்றதாகும்” என்றார் லெனின். 

எதார்த்த நிலையை வெற்றுச் சொற்களின் மூலம் மறைத்துக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட விஷயத்தின் நிலைமைகளைப் பற்றிய திட்டவட்டமான பகுப்பாய்வு இன்றிப் பொருத்தப்படும் பொதுவான வரலாற்றுக் கூற்று ஒவ்வொன்றும் வெறும் சொல்லாகவே மாறிவிடுகிறது. புரட்சிகர கோஷங்களை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்வதை விட அது குறித்துச் சிந்தித்துத் தெளிவடைவதே முக்கியம் என்கிறார் லெனின். 

புரட்சிகரமான வாய்ச்சொற்களைக் கொண்ட வெறும் சொற்களாலும் கூச்சல்களாலும் அன்றி ஒழுங்கமைப்பு பணிகள் மூலமும், நடைமுறை நடவடிக்கையின் மூலமுமே உண்மையில் புரட்சியையும், புதிய சமூகத்தையும் கட்டியமைக்க முடியும் என்பதை வெறும் சொற்களால் அல்ல. செயலால் உணர்த்தினார் அவர். 

ஒழுங்கமைவும், கம்யூனிச நீதிநெறியும் 

“நாம் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம், இன்னும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம், மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். எல்லாவிதமான சோதனைகள் இருந்த போதிலும் எதிர்காலம் நமதே ” என்று லெனின் முழங்கினார். ஸ்தாபன ரீதியான ஒழுங்கமைவையும், செயல்பாட்டு ரீதியான ஒழுங்கமைவையும் லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றிச் செல்வதல்ல, உணர்வுப் பூர்வமாக செயலாற்றுவதே ஸ்தாபனம் என்பதற்கு அவர் செயல் வடிவம் கொடுத்தார். இளம் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு ஒன்றிணையும் முறையில் தங்களின் செயல்களை அமைத்துக் கொள்ள வலியுறுத்தினார். 

நமக்குச் சொந்த ஒழுக்க நெறிகள் இல்லை என்றும் கம்யூனிஸ்ட்டுகள் எல்லாவித ஒழுக்க நெறிகளையும் மறுக்கிறார்கள் என்று முதலாளி வர்க்கம் கூறிவருகிறது. ஆம், கடவுளின் பெயரால் சுரண்டலை நியாயப்படுத்தி அதை நிலைக்க வைக்கும் எல்லா ஒழுக்க நெறிகளையும், நீதி நெறிகளையும் கம்யூனிஸ்ட்டுகள் மறுக்கிறோம். மனித மாண்புக்கு எதிரான எல்லாவித நீதி நெறிகளையும் மறுக்கிறோம். அவைகளை ஏமாற்று என்றே கூறுகிறோம். இத்தகைய நீதிநெறிகளில் நமக்கு நம்பிக்கை கிடையாது. நீதிநெறி பற்றிய எல்லா வகைக் கதைகளிலும் உள்ள வஞ்சகத்தை நாம் அம்பலப்படுத்துகிறோம் என்றார் லெனின். 

பாட்டாளி வர்க்க நீதிநெறி என்பது உழைக்கும் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது. மனித சமூகத்தின் வெளியேயிருந்து எடுக்கப்பட்ட நீதிநெறிகள் நம்மிடம் இல்லை. சமூகத்தின் ஒரு பகுதி, மறுபகுதியின் உழைப்பை தனக்கு உரித்தாக்கிக் கொள்ள உதவும் ஆதிக்க ஆளும் வர்க்க ஒழுக்கநெறி இங்கு கிடையாது. சுரண்டலுக்கு எதிராகவும் எல்லா வகையான உடைமைக்கும் எதிராகவும் தொழிலாளர்களை எது ஒன்று சேர்க்கிறதோ அதுவே கம்யூனிஸ்ட் நீதிநெறி. தனது வேலைகளையும், சக்திகளையும் பொது நோக்கத்திற்காக வழங்குவதும், மனித சமூகத்தை உயர்த்துவதும் உழைப்புச் சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதுமே கம்யூனிஸ்ட்டுகளின் நீதிநெறி என்றார் லெனின். 

“உங்களின் பணி, யாவற்றிலும் சிறியதானாலும் சரி, யாவற்றிலும் எளியதானாலும் சரி, உங்களின் போதனைகளை நடைமுறையில் நிறைவேற்றும் வகையில் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று இளம் கம்யூனிஸ்ட்டுகளிடம் லெனின் வலியுறுத்தினார். இதையே “புரட்சி என்றால் அது செயல்பாட்டையே குறிக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது, ஒருங்கிணைக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட வேலையின் மூலம் திட்டமிட்டுக் கொண்டு வரப்படக் கூடிய ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது” என்றார் லெனினின் வார்த்தைகளை நன்கு பயின்ற மாவீரன் பகத்சிங். 

உண்மை பிடிவாதமானது. உண்மையான யதார்த்த நிலைமைகளைப் பார்க்க மறுப்பது மார்க்சியமல்ல. அதைத் தவிர்த்துப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் வெறும் புரட்சிகர வாய்ச்சொல் மட்டுமே என்கிறார் லெனின். இப்படியான வாய்ச்சொற்கள் காலப்போக்கில் அவநம்பிக்கைகளில் தான் போய் முடிகிறது. ஆகவே தான் லெனின் சொல்கிறார்: “எல்லாவற்றையும் விட மிகமிக அனுமதிக்கத்தகாதது அவநம்பிக்கை தான். வரலாறு தனது போக்கில் கட்டாயம் முன்னேறும். ஏனெனில் வரலாறு எப்போதும் திடமாக முன்னேறிக் கொண்டேயிருக்கிறது.”

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்

 

;