tamilnadu

img

என்.ஐ.ஏ. சட்ட திருத்தத்தில் இருக்கும் ஆபத்துகள் - அ.மார்க்ஸ்

NIA சட்டத் திருத்தத்தை எப்படிப் புரிந்து கொள்வது? (1)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது சாதாரண விடயமல்ல. முழுமையாகப் புரிந்து கொள்வோம்!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தில் செய்யப்பட்டுள்ல திருத்தத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. இந்தியா முழுவதுக்குமான ஒரே கல்வி, ஒரே பாடத் திட்டம், ஒரே பாடப் புத்தகம், ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே நேரத்தில் மத்திய மாநிலத் தேர்வுகள், ஒரே ரேஷன் கார்டு என்கிற வரிசையில் இந்தியா முழுவதுக்குமான ஒரே புலனாய்வு முகமை என்கிற இந்தக் கருத்தாக்கம் இன்று புகுத்தப்படுகிறது.

அது மட்டுமல்ல புலனாய்வு மற்றும் குற்றச் சட்டங்களீல் இப்போது மூன்று ஆபத்தான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவை:
National Investigation Agency Act, 2008 NIA Act);
The Unlawful Activities (Prevention) Act, 1967 (UAPA);
The Protection of Human Rights Act, 1993 (POHA) 
இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த UAPA சட்டம் இயற்றப்படும்போது “சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு” எதிரான சட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. குறிப்பாகப் “பிரிவினை” கோருவது அல்லது தேசத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது (disaffection’) முதலியனமட்டும் இதில் குற்றமாக்கப்பட்டன. பினாளில் “பயங்கரவாத நடவடிக்கைகள் (Terrorist activities) என்பதும் இதில் சேர்க்கப்பட்டன. இயக்கங்களை “பயங்கரவாத இயக்கங்கள்” என அறிவித்துத் தடை செய்யும் அதிகாரம் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது இங்கே புதிதாகச் சேர்க்கப்படும் திருத்தம் என்னவெனில் தனி நபர்களையும் இனி “பயங்கரவாதிகள்” என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். lone wolf attack எனச் சொல்லப்படும் தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல்களென்கிற அடிப்படையில் இப்படித் தனிநபர்களைப் “பயங்கரவாதிகளாக” அறிவிக்கும் அதிகாரத்தை அரசு இச்சட்டத்தின் கீழ் பெறுகிறது. அது மட்டுமல்ல. இப்படி வரையறுக்கப்படும் தாக்குதல் இந்தியாவில்தான் நடக்கவேண்டும் என்பதல்ல. வெளிநாட்டில் நடக்கும் ஒன்றை வைத்தும் இக்குற்றச்சாட்டைச் சுமத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே ஆளும் அரசுக்கு எந்த ஒரு அமைப்பு அல்லது குழுவைப் பிடிக்கவில்லையோ அவர்கள் இதன் கீழ் பழிவாங்கப் படலாம். பசுவின் பெயரால் நடக்கும் கொலைகள், பழங்குடி அல்லது தலித்கள் மீதான தாக்குதல் என யார் அவற்றை எதிர்த்து நின்றாலும் அவர்களை அரசு இச்சட்டத்தின் மூலம் இவர் என்னேரமும் வெடிக்கக்கூடிய வகையில் புகைந்து கொண்டிருப்பவர் எனச் சொல்லி ஆண்டுக் கணக்கில் ஒருவரை உள்ளே தள்ளி விடலாம்.

UAPA சட்டத்தின் 25ம் பிரிவில் மேற்கொள்ள இருக்கும் திருத்தம் ஆர்பாட்டம் இல்லாமல் விசாரணை உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு கைப்பற்றிக் கொள்வது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி? இதுவரைக்கும் இப்படியான “குற்றவாளிகளின்” சொத்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவையாகச் சொல்லி அவற்றைக் கைப்பற்றுவதற்கு மாநில காவல்துறை இயக்குனரிடம் (DGP) அனுமதி பெற வேண்டும், இனி அந்த அனுமதி பெற வேண்டியதில்லை. NIA இயக்குனரிடம் அனுமதி பெற்றால் போதுமானது. அதாவது மானில அளவில் எந்த அனுமதியும் இல்லாமலேயே மத்திய அரசு நிறுவனங்கள் மூலமாக காரியங்கள் நிறைவேற்றப்படும்.

(தொடரும்)
NIA சட்டத் திருத்தம் (2) 
++++++++++++++++++++++++
வெளிநாட்டில் செய்யப்படும் குற்றங்களை விசாரிப்பது நடைமுறைச் சாத்தியமா?
"""""*************"""""""""""""************""""""""""""******************
அடுத்து NIA சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்போம்

26/11ஐ ஒட்டி 2008 ல் NIA உருவாக்கப்பட்டபோது இந்தச் சட்டத்தில் எல்லாவற்றையும் மத்தியில் குவிக்கும் போக்கு அதில் தீவிரமாக வெளிப்படுவதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இருந்தவர்கள் இந்த ஐயத்தையும் விமர்சனத்தையும் மிக எளிதாக ‘டிஸ்மிஸ்’ பண்ணினார்கள். 26/11 மாதிரி இன்னொரு தாக்குதல் ஏற்பட்டால் ஒவ்வொன்றுக்கும் மாநில அரசு அனுமதி அது இது என சிவப்பு நாடா இடைஞ்சல்களை எல்லாம் தாண்டி வந்து நடவடிக்கை எடுக்கக் காத்திருக்க முடியுமா என்பதுதான் அவர்கள் முன்வைத்த வாதம். விரைவான புலன் விசாரணைக்கு NIA வேண்டும் என அவர்கள் உரத்துக் கூவினர். அது உருவாக்கப்பட்டது முதல் NIA வெடி குண்டுத் தாக்குதலுகுப் பின்னணியாக இருக்கும் “பயங்கரவாத நிதி உதவி” (terror funding) மற்றும் ‘பயங்கரவாதக் குழுக்கள்’ குறித்த புலன் விசாரணைகளிலேயே அது கவனம் கொண்டிருந்தது. NIA சட்டத்தைப் பொருத்தமட்டில் அதற்குகைது செய்யும் அதிகாரம் கிதையாது. NIA புலன் விசாரணை செய்யுமே ஒழிய கைது செய்யும் அதிகாரம் காவல்துறையிடமே இருந்தது. அதே போல NIA வுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரமும் கிடையாது. . NIA சட்ட இணைப்பில் கொடுக்கப்பட்ட குற்றங்களை புலனாய்வு செய்து வழக்கை நடத்துவது மட்டுமே அதன் பணி.

இப்போது மேற்கொள்ளப்படும் NIA சட்டத்தில் உள்ள சுவையான அம்சம் என்னவெனில் இப்போதுள்ள அரசின் ஆதர்சங்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பாணியில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதுதான். அங்குள்ள புலன் விசாரணை முறையை அப்படியே இங்கு காப்பி அடிக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் இங்கு அகக் கட்டுமானங்கள் இருக்க வேண்டுமே என்கிற சிந்தனை இவர்களுக்குக் கிடையாது.

எடுத்துக்காட்டாக ஒன்றைப் பாருங்கள். எங்கெல்லாம் இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும் என்பதை இச்சட்டத்தின் பிரிவு 1 (section 1) வரையறுக்கிறது. இதில் கூடுதலாக ஒரு கூறை இப்போது சேர்க்கிறார்கள். அதன்படி, “பட்டியலிலுள்ள குற்றம் ஒன்றைச் செய்பவர் அவர் இந்தியாவுக்கு அப்பால் இருந்து குற்றத்தைச் செய்த போதிலும் அக்குற்றம் இந்தியாவைப் பாதிக்கும் அல்லது இந்தியர்களைப் பாதிக்கும் என்கிறபோது அங்கும் இச் சட்டம் பயன்படுத்தப்படும். இன்னொரு நாட்டில் குற்றம் நடந்தால் அதையும் விசாரிக்கும் அதிகாரம் உள்ள சட்டம் நம்மிடம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்கு உரிய அனுமதியையும் உதவிகளையும் அந்த நாடு அளிக்குமா? அதுவும் நல்ல உறவு இல்லாத நாடுகளில் இதெல்லாம் சாத்தியாமா? அப்படிக் குற்றம் செய்தவர்களை அந்த நாடே பிடித்துக் கொடுக்காத நிலையில் நாம் போய் அதைச் செய்துவிட முடியுமா? அவர்களே பிடித்துக் கொடுத்தார்கள் என்றால் பிறகு இப்படி ஒரு சட்டம் எதற்கு? இதெல்லாம் நடக்கிற காரியமா?

NIA சட்டத்தில் இப்போது செய்யப்படும் இன்னொரு திருத்தம் 11ம் பிரிவில் உள்ள (3) லிருந்து (7) வரைக்குமான துணைப் பிரிவுகள் இனி செல்லாது. இந்தப் பிரிவுகள் என்ன சொல்கின்றன? ஏன் அதை இப்போது மோடி அரசு அதை நீக்குகிறது? இப்போது உள்ள NIA சட்டப் பிரிவுகளின்படி. புலன் விசாரணை முடிந்து வழக்கு விசாரணை தொடங்கும்போது மத்திய அரசு அவ்வப் பகுதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பரிந்துரையின்படி சிறப்பு நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமிக்கப்படுவர். இதை இப்போது மோடி அரசு மாற்றுகிறது. எப்படி? இனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாமல் இப்போதுள்ள செஷன்ஸ் கோர்ட்களே இந்த NIA வழக்குகளியும் விசாரிக்குமாம். இது ஏற்கனவே வழக்குச் சுமைகளால் கூன் விழுந்து கிடக்கும் நீதித்துறையை மேலும் பிரச்சினைகுள்ளாக்கும்.

(அடுத்து POHA சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்)
-
NIA சட்டத் திருத்தம் 3
+++++++++++++++++++++
1993 மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் (POHA AMENDMENTS)
"""""""""""""""""****************************""""""""""""""""""*************

POHA சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களைப் பொருத்தமட்டில் இதன் உள்நோக்கம் ஒன்றுதான். பிற்படுத்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Backward Classes- NCBC), குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights - NCPCR), மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabilities- CCPD) உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் அமைப்புகள் எல்லாவற்றையும் தன் பிடிக்குள் மோடி அரசு கொண்டுவருவது என்பதுதான் இந்த உள்நோக்கம்.

முதலில் தேசிய மனித உரிமை ஆணையத்தை (NHRC) எடுத்துக் கொள்வோம். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர்தான் இதன் தலைவராக இருக்க முடியும் என்பது இப்போதுள்ள விதி. அது இனி “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி” என இப்போது மாற்றப்படுகிறது. மனித உரிமைப் பிரச்சினைகளில் அனுபவம் உள்ள ஒரு பெண் உறுப்பினரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என ஆறுதலுக்காக ஒன்றும் இத்துடன் சொல்லப்படுகிறது. தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர்தான் தலைவராக இருக்க முடியும் என்பதை மாற்றி ஏதாவது ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி என்பதன் மூலம் தமக்குத் தேவையான் ஒருவரை உட்கார வைப்பது எளிது என்பது கவனிக்கத் தக்கது.

அடுத்து, பதவிக் காலம் 5லிருந்து மூன்று வருடமாகக் குறைக்கப்படுகிறது. தலைவராஅக இருப்பவர் மீண்டும் ஒருமுறை நியமிக்கப்படலாம். ஒரே நிபந்தனை அவரது வயது 70க்குள் இருக்க வேண்டும்.

மூன்றாவது: மனித உரிமை ஆணையத்தின் செயலர் “தலைமைச் செயல் அதிகாரி”யாக (Chief Executive Officer) இருப்பார். ஆனால் இனி அவர் ஆணையம் அவருக்கு அளிக்கும் வேலைகளைச் செய்பவராக இருக்க மாட்டார். மாறாக ஆணையத் தலைவர் சொல்வதை அவர் நிறைவேற்றுவார். தலைவர் மற்ரும் பிற உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு இயங்கும் அதில் இருவர் மட்டுமே எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு எல்லா திகாரமும் ஆனையத் தலைவரிடம் குவிக்கப்படுகிறது. மாநில மனித உரிமை ஆணைய (SHRC) நியமனங்களிலும் இதே விதிமுறைகள்தான் கடைபிடிக்கப்படும். தவிரவும் புதுச்சேரி போன்ற யூனியன் பகுதிகளைப் பொருத்தமட்டில் ஏதேனும் ஒரு SHRC யிடம் அவற்றின் பொறுப்பு ஒப்படைக்கப்படும். அப்படி ஒப்படைக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். டெல்லியைப் பொருத்தமட்டில் NHRC யே அதன் மனித உரிமை ஆணையப் பொறுப்பை மேற்கொள்ளும்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மேலே கூறிய எல்லாவற்றையும் நோக்கும்போது ஒன்று தெளிவாகிறது. இந்த எல்லாத் திருத்தங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் அது. எடுத்துக்காட்டாக திருத்தப்பட்ட UAPA வால் பயங்கரவாதிகள் என புதிய சட்டத்தின்படி அறிவிக்கப்படுகிறவர்கள் NIA வால் விசாரிக்கப்படுவது மட்டுமல்லாமல் ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றங்களில் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைக்கப்படுவர். அந்த நபர் உண்மையிலேயே அவர்மீது சாட்டப்பட்ட பயங்கரவாதக் குற்றச்சாட்டுடன் தொடர்பில்லாதவராக இருந்தபோதிலும் இந்த எல்லா வழக்குகளும் முடியும் வரை அவர் விடுதலையாக முடியாது. தவிரவும் UAPA வும் NIA வும் இணையும்போது பிணையில் வெளிவருவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாமல் ஆகிவிடும். திருத்தப்படும் POHA வில் அதிகாரங்கள் மையப்படுத்தப் படுவதாலும் தலைவர்கள் இனி அரசுக்கு வேண்டியவர்களாக அமையும் நிலை ஏற்படுவதாலும் நிலைமை மேலும் சிக்கலாகும்.

(முற்றும். இது தொடர்பாக வந்துள்ள ஆங்கிலக் கட்டுரைகளிலிருந்து கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன)

Marx Anthonisamy

;