tamilnadu

img

உழைத்து வாழ வேலை கொடு! ஊதாரித்தனத்தை நிறுத்திவிடு....

விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களின் மூலம் அதிகமான வேலைவாய்ப்பி னை அளிப்பதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், வாங்கும் திறனையும் உயர்த்திட வழிவகுக்கும். நாட்டில் இதுவரை உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அமலாக்கத்தில் குறைபாடுகள் நீடித்தபோதிலும் அது நிறைவேற்றப்பட்ட காலத்தில் ஓரளவிற்கு, உழைக்கும் மக்களுக்கு நிவாரணத்தை ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது என்பதே ஆய்வுகளின் வழி நாம் அறிந்து கொள்ள முடியும். சட்ட அந்தஸ்துடன் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2005ம், கடந்த 15 ஆண்டு காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், ஊரகப் பகுதிகளின் கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் பரவலாக உதவியுள்ளது.

கிராமப்புறங்களில் ஏறக்குறைய 67 சதமான உழைப்புச் சக்திக்கு தேவையான வேலை கிடைப்பதில்லை என்று ஆய்வு கூறுகிறது. விவசாயத்தில் இயந்திரமய மாக்கல் விவசாயத்துறை வளர்ச்சிக்கு அவசியமாகிவிட்ட நிலையில், மறுபக்கம் கிராமப்புற உழைப்பாளர் பகுதியில் கணிசமானவர்கள் அருகாமை நகரங்களுக்கு வேலைக்கு சென்று வந்தனர். ஆட்சியாளர்களின் கொள்கைகளால் நகர்ப்புற சிறு-குறு தொழில்களும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் வேலையின்மை கிராமப்புற உழைப்பாளர்களை வாட்டி வதைக்கிறது. நவீனதொழில்மயமாதல் நடவடிக்கைகளால் நகர்ப்புற உழைப்பாளிகளும் திண்டாட்டத்திற்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.கொரோனா தொற்று பொதுமுடக்கக் காலத்தில் கிராமங்களிலும் - நகர்ப்புறங்களிலும் வேலையின்மை மேலும் சில மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள்(12 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன) தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதுடன் வேலைநாள்களை 200 நாட்களாகவும் - தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்துவதும் கிராமப்புற வேலையின்மை நெருக்கடியை தீர்க்க உதவும். அதேபோன்ற பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை பேரூராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் துவங்குவது வேலையின்மையைத் தீர்க்கவும் - உற்பத்திச் சொத்துக்களை உருவாக்கிடவும் முக்கிய பங்காற்றும்.

தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புறங்களுக்கும் - கிராமங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக பேரூராட்சிகள் இருக்கின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ஐத் தழுவி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு ஆணை எண் 150, நாள் 31.05.1994ன்படி ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து பிரித்து தனித்துறையாக, 1994ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி (சட்டம் 25) செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் பேரூராட்சி அமைப்பு முறை தமிழ்நாட்டில்தான் துவங்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பேரூராட்சிகளில் சுமார் 50 பேரூராட்சிப் பகுதிகள் நகரத்தன்மையுடனும், சில தொழிற்சாலைகளை கொண்ட பகுதியாகவும் உள்ளன. இவைகள் தவிர்த்து பிற பேரூராட்சிகள் முழுக்க - முழுக்க விவசாயப் பகுதிகளாக கிராமப்புறத் தன்மையுடன்உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் வாழும் இந்த பகுதிகளில், சுமார் 40 லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும் - சிறு குறு விவசாயிகளாகவும் வாழ்கின்றனர்.

விவசாய நெருக்கடியால், கணிசமான ஏக்கர் நிலங்கள்விவசாயம் அற்ற பயன்பாட்டிற்குப் போனதாலும், விவசாயவேலைகள் இல்லாது போனதாலும், மிகப்பெரிய சிரமத்தையும், கஷ்டத்தையும் இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்திட அல்லல்படுகின்றனர். இவர்களுக்கு ஊரக வேலைத்திட்டம் போல் வேலைவாய்ப்புத் திட்டத்தை துவங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளன.

நானூறுக்கும் மேற்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிப் படித்த இளைஞர்கள் - இளம்பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கில் திரண்டு லட்சக்கணக்கான மனுக்களை அளித்தப் போராட்டம் 25க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியரகங்களில் ஒவ்வொரு ஆட்சியர் அலுவலகத்திலும் 20 ஆயிரம் பேர் வரை பங்கேற்ற போராட்டம். 2017ஆம் ஆண்டு அக்டோபர் 03 அன்று வேலை கேட்டு சென்னை கோட்டை நோக்கிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, முதலமைச்சருக்கு மனு என விவசாயத்தொழிலாளர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. ஆனால் போராட்டங்களை தடுத்திட - சீர்குலைத்திட அனைத்து மாவட்டங்களிலும் முயன்றதே தவிர, இந்த மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

தமிழக அரசு சமீபத்தில், பொருளாதாரத்தை மேம்படுத்திட ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்கிடஅமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் குழு தனது பரிந்துரையில் முக்கியமானதாக நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை துவங்கிட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. அந்த குழுவிற்கு நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை துவங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்திருந்து. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும்சி.ரங்கராஜன் குழுவிற்கு பேரூராட்சிப் பகுதிக்கு வேலைத்திட்டம் வேண்டுமென 31.7.2020 அன்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்சஞ்சய்குமார் கடந்த மாதம் வெளியிட்ட ஊடக செய்தியில்ஊரக வேலைத்திட்டம் சிறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வேலையின்மை குறித்து பெங்களூரில் உள்ள அசிம்பிரேம்ஜி பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தியுள்ளது. நகர்ப்புற வேலைத்திட்டத்தின் மாதிரியைத் தயாரித்துள்ளதுடன் அது எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அத்திட்டத்திற்காக மத்திய அரசு மொத்த உள்நாட்டு பொருள் உற்பத்தியில் (ஜிடிபி) 1.7 சதவீதம் முதல் 2.7 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளது.நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி உள்பட இன்று உள்நாட்டிலும் - வெளிநாட்டிலும் உள்ள பொருளாதார வல்லுநர்களின் கருத்து ‘சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பெற வேண்டுமெனில் மக்களின் கையில் பணத்தைக்கொடு” என்பதே. ஆனால் மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இதை புறந்தள்ளி கார்ப்பரேட்டுகளின் கடிவாளத்தில் சிக்குண்டு கிடக்கின்றனர். நாட்டின் செல்வங்கள் முழுவதையும் வகை -தொகையின்றி விரல்விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்கின்றனர்.

2019 ஆகஸ்ட் முதல் 2020 பிப்ரவரி வரை நாட்டின் பெருசெல்வந்தர்கள்  சிலருக்கு மட்டும் ரூபாய் 3லட்சம் கோடிக்கு மேல் வரிச்சலுகை என்ற பெயரில் வாரி வழங்கியுள்ளனர்.மோடியின் ஆட்சிக்காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு -வெளிநாட்டு முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. போதாதென்று கொரோனா காலத்திலும் ஊக்கத்தொகை என்ற பெயரில் 20 லட்சம் கோடியை அவர்களுக்கு வாரி வழங்கியுள்ள கொடுமை நடந்தேறியுள்ளது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை வழங்கும் ஆட்சியாளர்கள் - தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலையைத் துறந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் பட்டாளத்தைப் பட்டினிப்போட்டுச் சாகடிக்கிறது.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையிழப்பு உருவாகியுள்ள இச்சூழலில், அரசு ஊதாரித்தனமாக இந்தியப் பொருளாதாரத்தைப் பங்கு வைப்பதை தவிர்ப்பதும் - உழைக்கும் வர்க்கத்தினருக்கு உதவியையும் உழைப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டியுள்ளது.வேலையின்மையின் நெருக்கடியிலிருந்து நகர்ப்புற - கிராமப்புற மக்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். கொரோனா கால பாதிப்புகளிலிருந்து ஏழை மக்கள் மீண்டெழுந்திட நிவாரணமாக ரூ.7500 வழங்கிட வேண்டும். 60 வயதைக் கடந்த அனைத்து முதியோருக்கும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பொது விநியோகத்தின் மூலம் சமையல் பொருள்கள் இலவசமாக வழங்கிட வேண்டும் ஆகியகோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் கூலிப்போராட்டத்தில் செங்கொடியைப் பாதுகாக்க 1967ல் நிலப்பிரபுத்துவ காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான தியாகி பூந்தாழங்குடி பக்கிரி நினைவு நாளான வரும் அக்டோபர் 06 அன்று, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், பேரூராட்சிப் பகுதி உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் துவங்கக்கோரி தமிழ்நாடு முழுவதும்- பேரூராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

அனைவரும் பங்கேற்போம்... வேலையின்மை என்ற விருட்சத்தை வேரோடு பிடுங்கியெறிவோம்!

கட்டுரையாளர் : வீ.அமிர்தலிங்கம், மாநில பொதுச் செயலாளர்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்

;