tamilnadu

img

உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி!

லண்டனில் நேற்று நடந்த உலக கோப்பை போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பெற்றது.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில், உலக கோப்பை போட்டியின் 14-வது லீக் ஆட்டமானது, இந்தியா அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும்,ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடி, 19-வது ஓவரில், 100 ரன்களை அடித்து, உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்த முதல் இந்திய ஜோடி என்ற பெயர் பெற்றனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதில் ஷிகர் தவான் 17-வது சதத்தையும், விராட் கோலி 50-வது அரைசதத்தையும் அடித்தனர். இந்நிலையில், 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. இதில் ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்களும் (16 பவுண்டரி), விராட் கோலி 77 பந்துகளுக்கு 82 ரன்களும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 70 பந்துகளில் 57 ரன்களும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களும், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் கொல்டர்- நைல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை அடுத்து 353 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் 9 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிரடியை தொடங்கிய நேரத்தில் ஆரோன் பிஞ்ச் (36 ரன்) ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. 50 ஓவர்களில்,  ஆஸ்திரேலியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியா அணியில், வார்னர் 84 பந்துகளில் 56 ரன்களும் (5 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 70 பந்துகளில் 69 ரன்களும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 35 பந்துகளில் 55 ரன்களும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த போட்டியில், ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 
 

;