tamilnadu

img

நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் இருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.  

தலைநகர் தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு  குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து, இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில்,  தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை 2018 ஜூலை 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அவர்களுக்கு வழங்கிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

இதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிட தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

இதற்கிடையே குற்றவாளிகளில் வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தூக்கு தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பு இதுவாகும். இந்த மறுசீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது. 
 

;