சென்னை,அக்.15- உங்களது மகன், மருமகளை வரவேற்பதற்காக இன்னொருவரு டைய மகளை கொன்றுள்ளீர்கள் என்று அதிமுக பிரமுகருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் அதிமுக நிர்வாகி ஜெய கோபால் மகன் திருமணத்திற்காக சாலையின் நடுவே வைக்கப்பட்ட ஒரு பேனர் விழுந்ததில் இளம் பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் இருவரும் கைது செய்யப் பட்டனர்.
இவர்கள் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செவ்வாயன்று(அக்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயகோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜெய கோபாலின் மகன் திருமணத்துக்கு அவர் பேனர் எதுவும் வைக்கவில்லை. அவர் மீதுள்ள பாசத்தினால், கட்சிக்காரர்கள் தான் பேனர்கள் வைத்தனர். ஜெய கோபால் மீதான வழக்கின் புலன் விசாரணை முடிந்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, திருமணம் நடந்த உங்களது மகன், மருமகளை வரவேற்பதற்காக இன்னொருவருடைய மகளை கொன்றுள்ளீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். சம்பவம் நடந்த பின்னர் பல நாட்கள் ஜெயகோபால் ஏன் தலைமறைவாக இருந்தார்? அவர் உடனடியாக போலீசில் ஏன் சரணடையவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் என்றார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசா ரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.