தேனி,அக்.9- மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தந்தைகளுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா (20). இவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்த இர்பான், இவரது தந்தை போலி மருத்துவரான முகமது சபி மற்றும் சில மாணவர்கள் தேனி சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப் பட்டனர். இந்நிலையில் மாணவர்கள் உதித்சூர்யா, இர்பான் ஆகியோரது தந்தையர் டாக்டர் வெங்கடேசன், முகமதுசபி ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணை தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் வெங்கடேசனுக்கும், முகமதுசபிக்கும் ஜாமீன் தர முடியாது என்று கூறி நீதிபதி பன்னீர்செல்வம் மனுக் களை தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கின் முதல் குற்றவாளி உதித்சூர்யாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் தர்மபுரி இர்பான் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.