tamilnadu

img

இந்நாள் டிச. 20 இதற்கு முன்னால்

1971 - ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்ற அமைப்பு பிரெஞ்சு மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது. இயற்கையாகவும், மனிதனாலும் உருவாகும் பேரழிவுகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இனம், மதம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடுமின்றி உதவும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. 1967-70இல் நடைபெற்ற நைஜீரிய உள்நாட்டுப்போரில் நேரடியாகச் சுமார் ஒரு லட்சம் பேரும், பட்டினியால் இருபது லட்சம் பேர் வரையும் பலியாயினர். நைஜீரியாவிலிருந்து பயாஃப்ரா மக்கள் பிரிய முயற்சித்தபோது அவர்களை அடக்க நைஜீரிய அரசால் தொடுக்கப்பட்ட இப்போரின்போது, அப்பகுதிக்கு உணவு, மருந்துகள் செல்வதை அரசுப் படைகள் தடுத்ததாலேயே இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் மருத்துவ உதவியில் ஈடுபட்ட செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்களும் நைஜீரிய ராணுவத்தின் தாக்குதல்களுக்குள்ளாயினர். இவற்றுக்கு செஞ்சிலுவைச்சங்கம் உறுதியான எதிர்ப்புத் தெரிவிக்காமல், நைஜீரிய அரசுடன் இணக்கமாக நடந்துகொண்டது. இதனால், பாகுபாடின்றி இயங்கும் ஓர் அமைப்பு தேவை என்று முடிவெடுத்த பிரெஞ்சு மருத்துவர்கள் ‘அவசரகால மருத்துவ, அறுவைசிகிச்சை தலையீட்டுக் குழு’ என்ற அமைப்பினை 1971இல் உருவாக்கினர்.

1970இல் வங்கத்தில் ஒரே இரவில் 5 லட்சம் பேருக்குமேல் உயிரிழந்த (இத்தொடரில் 2018 நவம்பர் 13இல் இடம்பெற்ற) போலா புயலின் சேதங்களைத் தொடர்ந்து, இயற்கைப் பேரிடர்களில் உதவுதற்காக, ‘பிரெஞ்சு மருத்துவ உதவி’ என்ற மற்றொரு குழு, இவர்களுக்குத் தொடர்பின்றி, வேறு மருத்துவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இவையிரண்டும் இணைக்கப்பட்டே, ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு உருவானது. தற்போது 150 நாடுகளைச் சேர்ந்த 67 ஆயிரம் உறுப்பினர்கள், பல்வேறு பாதிக்கப்பட்ட நாடுகளிலும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ள இவ்வமைப்பு, அதற்கான நிதியை நன்கொடைகள்மூலமே பெறுகிறது.

சுதந்திரமான செயல்பாடுகளில் குறுக்கீடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும் தனி மனிதர்களின் சிறு நன்கொடைகளையே இவ்வமைப்பு ஏற்கிறது. மிகவிரைவாக உதவிக்கு வந்துவிடுவதாகப் பெயர் பெற்றிருக்கும் இவ்வமைப்புக்கு 1999இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தீவிரவாதத்துக்கெதிரான போர் என்று அமெரிக்கா ஆக்கிர மிப்பில் ஈடுபட்ட நாடுகளில், அவர்களால் தாக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மனிதநேய உதவிகள்கூட, எதிரிகளுக்கான உதவிகளாக கூட்டணி நாடுகளால் பார்க்கப்பட்டு, பாதுகாப்புகள் மறுக்கப்பட்டதால், அப்பகுதிகளில் இவ்வமைப்பின் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உயிரிழந்ததும் நிகழ்ந்துள்ளது.

- அறிவுக்கடல்