tamilnadu

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆதரவு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாநில தலைவர் எஸ்.நூர்முகமது மற்றும் மாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 5 ஆண்டு காலஆட்சியில் மதச்சார்பின்மை, மனித நேயம் மக்கள் ஒற்றுமைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவதை அனைவரும் அறிந்ததே. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு தியாகங்கள் செய்த தியாக தலைவர்களின் ஆதரவோடு அண்ணல் அம்பேத்கர் நிறுவப்பட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை இக்காலத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதுவும்கூட அரசியல் சட்டத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்து ஆட்சி பொறுப்பேற்ற அவர்களாலேயே நடைபெற்று வருகிறது தான் கொடுமையான செய்தியாகும். பசு வதை என்ற பெயரில் சிறுபான்மையினரும், தலித்துகளும் ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் நிலைமை உள்ளது. லவ் ஜிகாத்எனும் கற்பனையான காரணத்தைக் கூறி சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். கிறிஸ்துவ மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளில் கூட காவல்துறையினரின் ஆதரவுடன் தலையீடுகள் நடைபெறுகின்றன. மதச்சார்பின்மைக்கும் ஆதரவாகவும், மனித வெறிக்குஎதிராகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக நரேந்திர தபோல்கர், கோவிந்த்பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற பெண் எழுத்தாளர்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டதையும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடிவருவதையும் கண்டு வருகிறோம்.பொய் வழக்குகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்திற்கும் மத்திய ஆட்சியாளர்களே காரணம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டது. பல லட்சம் இளைஞர்கள் வேலை இழந்தனர். பணப்புழக்கம் குறைந்து அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலையை நோக்கி தள்ளி விட்டார்கள். இப்படி அனைத்து பகுதி மக்களின் வாழ்வையும் நிர்மூலமாக்கிய தோடு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமைக்கு மட்டுமின்றி தனி உரிமைக்கு கூட இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. இத்தகைய நிலையை மாற்றிட தற்போது உள்ள ஒரே வாய்ப்பு இந்தத் தேர்தல்தான். மத்திய பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்த வேண்டும். எனவே அதற்கான பலத்தோடு இருக்கக்கூடிய கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அனைத்துப் பகுதி மக்களும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;