கோபிசெட்டிபாளையம், செப்.19- கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் வைர விழா மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் வைரவிழா மேல்நிலைப் பள்ளியும் இணைந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப்பேரணியில் அரசு உதவி பெரும் பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பாதகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்றனர். இப்பேரணி கச்சேரிமேடு அரசு உதவிபெறும் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கச்சேரிமேடு கடைவீதி பெரியார் திடல் வழியாக கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்னதாக, பேரணியை கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தியாக ராஜன், வைரவிழா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.