tamilnadu

விவசாயம், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - அ.கணேசமூர்த்தி

ஈரோடு, ஏப்.14-விவசாயம், கல்விக்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி கொடுமுடி பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி சனியன்று கொடுமுடி ஒன்றியத்திற்குட்பட்ட வஉசி நகர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம் காலனி, பள்ளக்காட்டூர், வேலாயுதம்பாளையம், சின்னியம்பாளையம், கருத்திபாளையம், வள்ளிபுரம், கருக்கம்பாளையம் காலனி, கைகாட்டி, நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் என்பது மோடி ஆட்சியை முறியடிக்கவும், நீட் தேர்வினை ரத்து செய்வதற்காகவும் இந்த தேர்தல் நடக்கிறது. ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள், ஜவுளி, நெசவு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராண்ட் அரிசிக்கு வரி செலுத்த சொல்லும் மோடி அரசை அகற்ற வேண்டும். வங்கியில் நகைக்கடன், பட்டதாரிகள் கல்விக்கடன், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர் பணி, 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணி வழங்கப்பட உள்ளது. எனவே, மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

;