ஈரோடு, ஏப். 12- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 14,593 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து, அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் பேசியதாவது, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தால் முதல்முறையாக செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் மாற்றுத் திறனாளி கள்தனது வாக்குச்சாவடி எங்கு அமைந்துள்ளது என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பணி அலுவலர்கள் அந்த வாக்குச் சாவடிக்கு உள்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை, அவர்களுக்குத் தேவைப்படும் சக்கர நாற்காலிகள் ஆகியவற்றின் விவரங்களையும் இச்செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒருங்கிணைப்பாளர்கள் அப்பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 2,213 வாக்குப் பதிவு மையங்களில் உள்ள 912 அமைவிடங்களில் 14,593 மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகளில் இவர்களுக்கு தேவையான சாய்வு தளம், கழிப்பறை வசதி, பிரெய்லி பேப்பர் உள்பட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும்போது அவர்களுடன் ஒருவர் அனுமதிக்கப்படுவர் என்றார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ம.தினேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ஜெயராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சி.குமார் உள்பட அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.