tamilnadu

img

ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது : சிபிஎம்

சென்னை, ஜன. 6- தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் திங்க ளன்று தமிழக ஆளுநர் ஆற்றியுள்ள 2019-20க்கான உரை, தமிழக மக்களின் அதிகரித்து வரும் அன்றாடப்பிரச்சனைகளுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்காமல் பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் பொருளாதார கொள்கை கள் தமிழகத்திலும் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, தொழில் வளர்ச்சி முடக்கம் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு எவ்வித நிவாரணமும் இந்த ஆளுநர் உரையில் தென்படவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் நிதியளவு குறைந்துள்ளது என்று ஆளுநர் தனது உரையில் ஆதங்கப்பட்டிருந்தாலும், மாநிலத்திற்கு வர வேண்டிய தொகை யினை கேட்டுப்பெற வலுவான குரல் எழுப்பு வதற்கு தமிழக அரசு மறுத்து வருவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு தமிழக அரசுக்கு தர  வேண்டிய மானியத் தொகையும் தொடர்ந்து  குறைந்து வருவதும், தமிழக அரசு மென்மை யான குரலில் மானிய நிதியை வழங்குமாறு கோருவதும் மாநில நலனை புறக்கணிப்பதாக உள்ளது. அதேபோல் தமிழகத்திற்கு தர வேண்டிய சேவை வரியில் 50 சதவிகி தத்திற்கு பதிலாக 42 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை வெளிப்படுத்துவ தாக உள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து மத்திய அரசு கர்நாடக அரசுக்கு சாதகமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு தனது வலுவான எதிர்ப்புக் குரலை எழுப்பிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறை யான அனுமதி பெற்று இப்போராட்டங்களை நடத்த முயன்ற போதிலும் காவல்துறை அதி காரிகள் அனுமதி மறுத்து, போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அலைக்கழித்து வரு கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஆளும் பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் போராடும்போது மட்டும் காவல்துறை அனுமதி வழங்குவது என்பது இந்த அரசின் பாரபட்சமான  போக்கினை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் அறிக்கையில் ‘தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தை யோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.  ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மதரீதியான பாரபட்சமான  குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து விட்டு, அனைவரின் நலன்களை பாது காக்கப்போவதாக கூறுவது மக்களை ஏமாற்று வதாக உள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட சட்டங்களுக்கு மாநில அரசு தனது ஆதரவினை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக விவசாயிகள் நெடுங்காலமாக போராடிவரும் விளைபொருட்களுக்கு நியாய மான விலை, விவசாயக்கடன்  தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த ஆளுநர் அறிக்கையில் எவ்வித  அறிவிப்பும் இல்லாதது,  விவசாயிகளைப் பற்றிய தமிழக அரசின் கவலையற்ற தன்மையை வெளிப் படுத்துகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் பல மாதங்கள் கூலி பாக்கி வைத்துள்ளதுடன் முறையாக வேலை வழங்காத நிலைமை நீடிக்கிறது. இக்குறைபாடுகளைப் போக்கு வதற்கு எவ்விதத் திட்டமும் இல்லை. தமிழகத்தில் கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைகளிடம் இருந்து வர வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் துயர் துடைக்கும் வகையிலான திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

நலிந்த பிரிவினருக்கான ஓய்வூதிய தொகை மேலும் 5 லட்சம் பேருக்கு வழங்கப் படும் என்று அறிவித்துள்ள போதிலும், ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் பலரும் முறையாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய தொகை கிடைக்கவில்லை என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர் என்பதனையும் மாநில அரசு கவனமுடன் பரிசீலித்து ஓய்வூதியம் மாதாமாதம் அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், சிறு,குறு தொழில்கள் பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலை ஆகியவற்றில் மாநில அரசு உடனடி கவனம் செலுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

;