வேலூர், ஜூன் 14- முற்போக்கு கலைஞரும், எழுத்தாளரும் கவிஞருமான முகில் காலமானார். வெள்ளியன்று மாலை 5 மணியளவில் வேலூரில் முகில் காலமானார். அவரது உடல் வேலூர் அருகில் உள்ள பொய்கையில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலையில் இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரமானந்தம் என்ற இயற்பெயரை கொண்ட அவர், திருச்சி மற்றும் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமுஎகசவின் துவக்க கால தலைவர் களில் ஒருவரான அவர், திருச்சி மாவட்ட செய லாளராகவும் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிறந்த நாடக ஆசிரியரான இவர், நாட்டார் வழக்காற்றியல் பணிகளிலும், நாட்டுப்புற கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கம் நடத்திய மாநில அளவிலான கலைப் பயணங்களை தலைமையேற்று நடத்தியவர். ஏராளமான முற்போக்கு ஆளுமைகளை உருவாக்கியவர்.
தமுஎகச அஞ்சலி
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், தோழர் முகில் மறைவு தமுஎகசவிற்கு பேரழிப்பு. இந்த அமைப்பை முன்னெடுத்துச் சென்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோழர் முகில். நாடகம், கவிதை, நாவல், சிறுகதை, நாட்டுப்புற பாடல்கள் என பல்வேறு துறைகளில் காத்திரமான பங்களிப்பை தந்தவர் முகில். மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகளோடு நெருக்கமாக தொடர்பு கொண்டு பணியாற்றியவர் தோழர் முகில். அவரது மறைவுக்கு தமுஎகச நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். அவருடைய மறைவுக்கு பொருளாதார பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா இரங்கல் தெரிவித்துள்ளார். அறிவொளி இயக்க கலைப் பயணங்களில் முகில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.