பரிதவிக்கும் தொழிலாளர்கள்
பொள்ளாச்சி, ஏப்.24- ஊரடங்கு உத்தரவால் பொள்ளாச்சியில் 700-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அதனை நம்பி வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆனை மலை, வேட்டைக்காரன் புதூர், அங்கலக் குறிச்சி, ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தென்னை நகரமாக பெயர் பெற்றுள்ள பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் தென்னை சார்ந்த தொழில்க ளும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இந்தத் தொழிலை நம்பியே இருந்து வருகின்றனர் .
குறிப்பாக, தென்னை மரத்திலிருந்து தேங்காய் இறக்குவது, தேங்காய் மட்டை உரிப்பது, ஏற்றுமதி செய்யப்படும் இளநீர்களை லாரியில் ஏற்றுவது போன்ற தொழிலும், தேங்காய் மட்டை கொண்டு தென்னை நார் உற்பத்தி செய்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது, அதிலும் குறிப்பாக பொள்ளாச்சியில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலே சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதனிடையே கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சார்ந்த தொழில்கள் முழுவதும் முடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இயக்கப்பட்டு 700க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக இதை நம்பி இருந்த தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
வங்கிக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்க
ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தென்னை நார் உற்பத்தி அதிகரித்து நல்ல லாபம் ஈட்டும் காலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தென்னை நார் உற்பத்தி முழுவதும் முடங்கி வருமானமின்றி தவித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். வங்கியில் கடன் வாங்கி தொழிற்சாலை இயக்கப்பட்டு வரும் நிலையில் கடன்களுக் கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தென்னை மரம் ஏறுவோர், தேங்காய் மட்டை உரிப்போர் , தென்னை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி ,இருப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிவாரணம் வழங்குக
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து, தென்னைநார் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணியாழன், பொள்ளாச்சி.