tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 27 இதற்கு முன்னால்

1590 - தேர்ந்தெடுக்கப் பட்ட 13 நாட் களில், பதவியேற்புக்கும் முன்பே, மலேரியாவால் இறந்து, வரலாற்றிலேயே மிகக்குறைந்த காலம் திருத்தந்தை(போப்) ஆக இருந்தவராக ஆனார் 69 வயது ஏழாம் அர்பன். ரோமின் ஆயராகவும்(பிஷப்), உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்கத் திருச்சபை களின் தலைவராகவும் போப் செயல்படுகிறார். தந்தை என்ற பொருள்படும் பாப்பஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து போப் என்ற சொல்லும், அவரது நிர்வாகத்தைக்குறிக்கும் பாப்பசி என்ற சொல்லும் உருவாயின. கிறித்தவ மதகுருக்கள் பொதுவாக தந்தையின் ஆங்கிலச் சொல்லான ஃபாதர் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டாலும், அதே பொருளுள்ள போப் என்பது, ரோமின் தலைமை குருவைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இயேசுவின் சீடரான புனித பீட்டரை முதல் போப்பாகக்கொண்டு, 2014இலிருந்து இருக்கும் தற்போதைய போப் பிரான்சிஸ், 266ஆம் போப் என்று குறிப்பிடப்பட்டாலும், 232-248 காலத்தில் போப்பாக இருந்த அலெக்சாண்ட்ரியாவின் ஹெராக்ளஸ்-தான் முதன்முதலில் போப் என்ற பட்டத்தைப் பயன்படுத்தி யவர். புனித ரோமத் திருச்சபையின் மூத்த ஆயர்களான கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தாலும், போப் ஆகிறவர் கார்டினலாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. உண்மையில், முந்தைய போப்பின் இறப்பு அல்லது பதவிவிலகலுக்கு முன்தினம் 80 வயதுக்குக் குறைவானவராகவும், திருமுழுக்கு(பாப்டிசம்) செய்யப்பட்ட கத்தோலிக்க கிறித்தவராகவும் இருந்தால் போதுமானது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 1378இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாம் அர்பன் கார்டினல் இல்லை, 1831இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறாம் கிரிகோரி ஆயராகக்கூட ஆகியிருக்கவில்லை, 1513இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாம் லியோ மதகுருவாகவே இல்லை என்பவை குறிப்பிடத்தக்கவை. அரசியல் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காக, போப் தேர்ந்தெடுக்கப்படும்வரை, கார்டினல்கள் ஓரிடத்தில் வைத்துப் பூட்டப்படுவார்கள் என்பதால், போப்பைத்  தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு பாப்பல் கான்க்ளேவ் (லத்தீனில் கம் க்ளேவ் என்றால் சாவியால் என்று பொருள்!) என்ற பெயர் ஏற்பட்டது. 1054இல் ஏற்பட்ட கிழக்கு-மேற்கு பிளவு, 1378இல் ஏற்பட்ட மேற்கத்திய பிளவு போன்ற வற்றின்போது பிற திருச்சபைகளால் நியமிக்கப்பட்ட வர்கள் எதிர்-போப்(ஆண்ட்டி-போப்) என்றழைக்கப்பட்ட னர். இத்தகைய பிளவால் 15ஆம் நூற்றாண்டில் ஒரே நேரத்தில் போப்பாக மூவர் நியமிக்கப்பட்டதுடன், ஒருவரை ஒருவர் மதவிலக்குச் செய்ததும் நடந்தது. 38 ஆண்டுகள் போப்பாக இருந்த புனித பீட்டரே அதிக காலம் போப்பாக இருந்தவர். இந்த ஏழாம் அர்பன் உட்பட, 9 போப்கள் ஒரு மாதத்துக்கும் குறைவான போப்பாக இருந்துள்ளனர்.