tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஆகஸ்ட் 2

1343 - பிரிட்டனியின் பெண் சிங்கம் என்றழைக்கப்படும் ஜீன் டி க்ளிஸன், அவ்வாறு ஆகக் காரணமாக அமைந்த நிகழ்வான, அவர் கணவரின் கொலை நிகழ்ந்தது. பிரிட்டான் இனத்தைச் சேர்ந்த இவர் பிரிட்டனியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனி என்பது, அக்காலத்திய ஃப்ரான்சுக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு குறுநில அரசாகும். இது 1532இல் ஃப்ரான்சுடன் இணைக்கப்பட்டுவிட்டது. உலகின் மிகப்பழைய கட்டிடக்கலைச் சின்னங்களாகக் கருதப்படும் கி.மு.5000களைச் சேர்ந்த சில கட்டிடங்கள் இங்கு இன்னும் உள்ளன. ரோமானியத் தன்மைகொண்டதாக இருந்த இங்கிலாந்தை, ஜெர்மானிக் தன்மைகொண்டதாக மாற்றிய ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்புகளின்போது, கி.பி.3-9 நூற்றாண்டுகளில், இங்கிலாந்திலிருந்து, இந்த பிரிட்டனிக்கு புலம் பெயர்ந்தவர்கள் பிரிட்டான்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

அதனால், இங்கிலாந்தைக் கிரேட் பிரிட்டன் என்றழைப்பதைப்போல, இந்தப் பகுதி லிட்டில் பிரிட்டன் என்றும் குறிப்பிடப்பட்டது. பிரிட்டனியின் குழந்தையில்லாத அரசரான மூன்றாம் ஜான், வாரிசையும் அறிவிக்க மறுத்து 1341இல் இறந்ததும், வாரிசுரிமைப்போர் ஏற்பட்டது. ஃப்ரான்சிற்குத் திரைசெலுத்தும் நாடாக பிரிட்டனி இருந்தாலும், அதன் அரச மரபுகளில் ஒன்றான மாண்ட்ஃபோர்ட்கள் இங்கிலாந்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர்.  அந்த மரபில் வந்தவரான பிரிட்டனியின் ஆண் வாரிசை இங்கிலாந்தும், ப்ளாய்ஸ் மரபில் வந்தவரான பெண் வாரிசை ஃப்ரான்சும் ஆதரித்து, இப்போரின் பின்னணியில் இயங்கியதால், இது நூறாண்டுப்போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. க்ளிசனின் கணவர் ஆலிவர் ஃப்ரான்சின் பக்கமிருந்தாலும், அவர் சகோதரர் எதிரணியை ஆதரித்தார்.

இந்நிலையில் ஆலிவரின் கட்டுப்பாட்டிலிருந்த வேன்ஸ் நகரை எதிரணி கைப்பற்றியதுடன், ஃப்ரான்சிடம் போர்க்கைதியாக இருந்த ஒரு பிரபுவுக்கு மாற்றாக ஆலிவரையும் எளிதில் விடுவித்ததால், ஆலிவரின்மீது ஃப்ரான்சிற்குச் சந்தேகம் எழுந்தது. போர் முடிந்தபின், விளையாட்டுப்போட்டிக்காகப் பாரிசுக்கு அழைத்து, கைது செய்து, இங்கிலாந்துடன் கூட்டணி வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி ஆலிவருக்கு மரண தண்டனையளித்தது ஃப்ரான்ஸ். இதனைப் படுகொலை என்று குற்றம்சாட்டிய க்ளிசன், தன் சொத்துகள் அனைத்தையும் விற்று, மூன்று போர்க்கப்பல்களையும், ஒரு படையையும் உருவாக்கினார். 'மை ரிவெஞ்ச்' என்று பெயரிடப்பட்ட கொடிக்கப்பலுடன், கருப்பு வண்ணம்கொண்ட அந்தக் கப்பல்கள், அடுத்த 13 ஆண்டுகளுக்கு ஆங்கிலக் கால்வாய்ப்பகுதியில் ஃப்ரான்சின் கப்பல்களை அழித்து, ஃப்ரான்ஸ் அரசருக்குத் தகவல் தெரிவிப்பதற்காக ஒருவரைமட்டும் உயிருடன் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது!

====அறிவுக்கடல்===

;