tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூன் 17

1963 - பொதுப் பள்ளிகளில், பைபிள் படிக்கும் வழிபாடு(ப்ரேயர்), அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையையும், பொருளையும், சுதந்திரமான பொறுப்புணர்வுடன் தேடுதல் என்பதைக் கோட்பாடாகக் கொண்ட, 'தனியொருமை பிரபஞ்சத்துவம்' என்பது, கிறித்தவத்திலிருந்து பிரிந்த ஒரு சமயப் பிரிவு. தொடக்ககால கிறித்துவத்தின் கோட்பாடுகளை வலியுறுத்தும் பிரபஞ்சத்துவம் 1793இலும், கிறித்தவத்தின் திரித்துவத்தை ஏற்காத தனியொருமைத்துவம் 1825இலும் அமெரிக்காவை அடைந்திருந்தன. இவற்றிலிருந்துதான், தனியொருமை பிரபஞ்சத்துவம் என்பது, 1961இல் உருவானது. இது ஒரு சமயமாகக் குறிப்பிடப்பட்டாலும், இதன் உறுப்பினர்கள் பவுத்தம் உட்பட பல மாறுப்பட்ட சமயங்களின் கோட்பாடுளின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தின் உறுப்பினரான எட்வர்ட் ஷெம்ப் என்பவரின் பிள்ளைகள் பென்சில்வேனியாவில் உள்ள (அரசு உதவிபெறும்) பொதுப் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களை வழிபாட்டின்போது பைபிள் வாசகங்களைக் கேட்கவும், சில நேரங்களில் படிக்கவும் சொல்வதாகவும், அது அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமயச் சுதந்திரம், தனிமனித உரிமை ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் ஷெம்ப் வழக்குத் தொடர்ந்தார். இதை மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள, பள்ளி மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில், பெற்றோர் எழுத்துப்பூர்வமாக வேண்டினால், வழிபாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று, பென்சில்வேனியா சட்டமன்றம் திருத்தம் கொண்டுவந்தது. அதைத் தீர்வாக ஷெம்ப் ஏற்காத நிலையில்தான், உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்தது. இதைத் தொடர்ந்து, பெரும்பாலான பள்ளிகளில் வழிபாட்டின்போது பைபிள் வாசிப்பு கைவிடப்பட்டது. 1971இல் மற்றொரு தீர்ப்பில், பள்ளிகளில் சமயச் சார்புள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் முழுமையாகத் தடைசெய்ததைத் தொடர்ந்து, பல பள்ளிகளில் ஒரு நிமிட மவுனம் கடைப்பிடிப்பது வழிபாடாக உள்ளது.

கனடாவின் பள்ளிகளில் சமயம் சார்ந்த வழிபாட்டுக்கு அனுமதியில்லை. ஃப்ரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில், சமயம் சார்ந்த வழிபாட்டுக்குத் தடையிருப்பதுடன், சமயக் குறியீடுகளை மாணவர்கள் அணிவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. துருக்கியில் சமயம் சார்ந்த வழிபாடு பள்ளிகளில் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பள்ளியிறுதி வகுப்புகளில் சமயக் கோட்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, கிரீஸ், இரான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில், சமயம் சார்ந்த வழிபாடு பள்ளிகளில் அனுமதிகப்பட்டிருப்பதுடன், சில நாடுகளில் அது கட்டாயமாகவும் உள்ளது.

===அறிவுக்கடல்===