tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... மார்ச் 4

அன்னை லட்சுமி நினைவு நாள்

கடைசி மூச்சுள்ள வரை கம்யூனிஸ இயக்க லட்சியங்களுக்காக வாழ்ந்து, அந்த வேள்வியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை லெட்சுமி. 1946ம் ஆண்டில் நடந்த தென்னகத்தைக் குலுக்கிய ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது 144 தடையை மீறி மற்ற பெண்களுடன் அன்னை லட்சுமி திருச்சி நகரில் உண்டியல் வசூல் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1948-49ம் ஆண்டுகள் கட்சிக்கு மிகவும் சோத னையான ஆண்டுகள்! அடக்குமுறை பேயாட்சி தலைவிரித்தாடிய ஆண்டுகள். அன்னை லட்சுமி யும் மகள் பாப்பாவும் கட்சி ஸ்தாபன வேலைக்கு உதவும் பொருட்டு தலைமறைவாகி சென்னை மாநில கமிட்டியின் தலைமறைவு அலுவல கத்தில் இணைக்கப்பட்டனர். அங்கு பணி யாற்றும் அத்தனை தோழர்களுக்கும் அம்மா வாக, தாய்மைப் பாசத்துடன் நடுநிசியில் வரும் தோழர்களுக்குக் கூட தக்க சாப்பாடு செய்து கொடுத்து சலிப்பில்லாமல் இன்முகத்துடன் அன்பு செலுத்தினார் அன்னை லட்சுமி. 

1950ம் ஆண்டு பிப்ரவரி 5ம்தேதியன்று தலை மறைவு இடம் போலீஸுக்குத் தெரிந்து வீடு சுற்றி வளைக்கப்பட்டது. கதவின் சந்து மூலம் போலீஸாரைப் பார்த்த அன்னை லட்சுமி, தனது இடுப்பில் பத்திரமாக வைத்திருந்த சில விவரங்கள் இருந்த காகிதத்தைக் கிழித்து வாயில் போட்டு மென்று முடிக்கவும் கதவை உடைத்துக் கொண்டு போலீஸ் நுழையவும் சரியாக இருந்தது. ‘ஏன் கதவைத் திறக்காமல் இருந்தாய்’ என்று போலீஸ் காரர்கள் அன்னை லட்சுமியைப் பிடித்துத் தள்ளியதில் மல்லாக்காக விழுந்து மண்டையில் அடி, கையிலும் சிராய்ப்பு காயம். அதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. இப்படி ஆகிவிட்டதே என்ற கவலைதான் அவர்களுக்கு. போலீஸாரைப் பார்த்ததும் உயரமான மாடியி லிருந்து பின்பக்கம் குதித்ததால் தோழர் உமாநாத் அவர்களின் கணுக்கால் எலும்பு முறிந்து அடி எடுத்து நடக்க முடியாத நிலையில் அவரும் கைதானார். மற்ற தோழர்களுடன் பாப்பா உமாநாத்தும் முதல் நாள் பல்லாவரம் போலீஸ் நிலையத்திலும் மறுநாள் பரங்கிமலை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் வைக்கப்பட்டனர்.

மறுநாள் பிப்ரவரி 10ம்தேதி ஒவ்வொரு வரும் தனித்தனியாக லாக்கப்பில் இருக்க வேண்டுமென கட்டாய உத்தரவு. மலபார் ஸ்பெஷல் போலீசும், ரிசர்வ் போலீசும் ஏராளமாக வரவழைக்கப்பட்டு தடியடிப் பிர யோகம் நடத்தப் பட்டது. அனைவரும் தனித் தனியாக லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொடுமையை எதிர்த்து பிப்ரவரி 10ந்தேதி அனைவரும் உண்ணா விரதம் மேற்கொண்டனர். இதற்கு மறுநாள் சேலம் சிறையில் தோழர்கள் 22 பேரை சுட்டுத் தள்ளினார்கள். உண்ணாநோன்பு ஆரம்பித்து ஒருவாரமாகியதும் ஒவ்வொருவராக சென்னை மத்திய சிறைக்கு எடுத்துச் சென்றார்கள். அன்னை லட்சுமியை அழைத்துப்போன 4 தினங்கள் கழித்து பாப்பா உமாநாத்தையும் கொண்டு போனார்கள். உண்ணாவிரதம் 28 தினங்கள் நீடித்தது. ஆனால் அன்னை லட்சுமி உண்ணாநோன்பின் 25வது நாளன்று மார்ச் 4ல் வீர மரணமடைந்தார். இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னரும்கூட மகள் பாப்பா  உமாநாத்தால் பெற்று ஆளாக்கிய அன்னையைப் பார்க்கவே முடியவில்லை. அதற்கு அவரிடம் “கட்சியி லிருந்து விலகுவதாக” எழுதித்தர வேண்டும் என்றனர் சிறை அதிகாரிகள். ‘முடியாது’ என்றதும் அன்னை லட்சுமியை நன்றாக மூடி தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்! அன்னை லட்சுமியை எங்கு புதைத்தார்கள் அல்லது எரித் தார்கள் என்று கூட இன்றுவரை தெரியாது.

பெரணமல்லூர் சேகரன்

;