1707 ‘நிலநிரைக் கோட்டு (தீர்க்கரேகை) சட்டத்தை’ இங்கிலாந்து இயற்றக் காரணமான, சிலி கடல் பேரழிவு என்றழைக்கப்படும் கப்பல் விபத்து நேரிட்டு, சுமார் 2000 கடற்படையினர் பலியாயினர். சிலி என்பது தென்மேற்கு இங்கிலாந்தை ஒட்டியுள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். (தென் அமெரிக்காவில் உள்ளது ‘ச்சிலி’!) ஸ்பெயின் வாரிசுரிமைப் போரின்போது, பிரான்சின் டவ்லான் துறைமுகத்தைத் தாக்கச்சென்ற, இங்கிலாந்து கடற்படையின் 21 கப்பல்கள் அணிவகுத்துத் திரும்பிக்கொண்டிருந்தன. மிகமோசமான வானிலை, மாறிமாறி வீசிக்கொண்டிருந்த கடுமையான காற்று ஆகியவற்றால், கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் இடம், திசை ஆகியவற்றை மாலுமிகளால் சரியாகக் கணிக்க முடியவில்லை.
ஆங்கிலக் கால்வாயில் நுழைவதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், சிலி தீவுகளை நெருங்கிய கப்பல்களில், கொடிக்கப்பல் (தலைமைத் தளபதியின் கப்பல்) உள்ளிட்ட 4 கப்பல்கள், பாறைகளில் மோதி மூழ்கின. இங்கிலாந்தின் கடற்பயண வரலாற்றில் மிகமோசமான விபத்தாகக் குறிப்பிடப்படும் இது, நிலநிரைக்கோடு(தீர்க்கரேகை) கணக்கீட்டுத் தவறுகளாலேயே ஏற்பட்டதாக நம்பப்பட்டது. ஏனென்றால், அக்காலத்தில், வானில் சூரியனின் இடத்தைக்கொண்டு, நிலநேர்க்கோட்டை(அட்சரேகை) எளிதாகக் கணக்கிட்டுக்கொண்டிருந்தனர். இத்தகைய பேரிழப்புகளை எதிர்காலத்தில் தடுக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட ‘நிலநிரைக்கோட்டுச் சட்டம் 1714’, சரியாகக் கணக்கிடும் முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள்(தற்போதைய மதிப்பில் ரூ.28 கோடிக்கும் அதிகம்!) பரிசுத்தொகை அறிவித்து, அதை நிர்வகிக்க ‘நிலநிரைக்கோட்டுத் துறை’ என்பதையும் உருவாக்கியது. ஆனால், நிலநிரைக்கோட்டுப் பிரச்சனைக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு இதுவல்ல. 1567இலேயே ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப் அறிவித்ததுதான் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு!
1598இல் ஸ்பெயினின் மூன்றாம் ஃபிலிப் 6,000 டுகாட்களும், ஓய்வூதியமும் அளிப்பதாகவும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசு 10,000 ஃபளோரின்கள் அளிப்பதாகவும் அறிவித்தன. பல்வேறு தீர்வுகளுக்குப் பரிசுகளும் அளிக்கப்பட்டாலும், தானே கற்றுக்கொண்டு கடிகாரம் செய்பவராக இருந்த இங்கிலாந்தின் ஜான் ஹாரிசன் 31 ஆண்டுகள் உழைத்து 1761இல் உருவாக்கிய கடற்கடிகாரம் மிகப்பெரிய தீர்வாக அமைந்ததுடன், மிகஅதிகப் பரிசுத் தொகையையும் (23,065 பவுண்டுகள்!)அவர் பெற்றார். இரண்டரை நூற்றாண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாத, இக்கப்பல்களின் மூழ்கிய எச்சங்கள், 1969இல் கண்டுபிடிக்கப்பட்டு, தங்க, வெள்ளி நாணயங்கள் எடுக்கப்பட்டதால், புதையல் வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றைக் காக்க, மூழ்கிய கப்பல்களின் எச்சங்களைக் காப்பதற்கு ஒரு சட்டத்தையும் 1973இல் இங்கிலாந்து இயற்றவேண்டியதாயிற்று!