tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 27 இதற்கு முன்னால்

1971 - காங்கோ மக்க ளாட்சிக் குடியரசின் பெயரை ஸையர் குடியரசு என்று அதன் ஜனாதிபதி மொபுட்டு மாற்றினார். பதினோராண்டு களில் நான்காவது பெயர் மாற்றம் என்பதுடன், இது அந்நாட்டின்  ஆறாவது பெயராகும்! ஸையர் என்பது, காங்கோ ஆற்றிற்குப் போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெய ராகும். ஆப்ரிக்க மொழிகளில் ஒன்றாக கிக்கொங்கோ மொழியில் மற்ற ஆறுகளை விழுங்கும் ஆறு என்ற பொருள்கொண்ட, ன்ஸியர் என்ற சொல்லிலிருந்து ஸையர் என்ற சொல்லைப் போர்ச்சுகீசியர்கள் உருவாக்கினர். நொடிக்கு 41,200 கனமீட்டர் நீர் பாய்ந்து, நீர் அளவில் உலகில் இரண்டா வதாக காங்கோ ஆறு திகழ்கிறது(முதலிடத்திலுள்ள அமே சான் நொடிக்கு 2,09,000 கனமீட்டர்!).

அந்நியர் (போர்ச்சு கீசியர்கள்) ஆட்சியின் அடையாளங்களனைத்தையும் நீக்க, மொபுட்டு அறிவித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பெயர் மட்டுமின்றி, மொபுட்டுவின் பெயர், காங்கோ ஆறு, பல நகரங்கள், உள்ளிட்டவை பெயர் மாற்றப்பட்டதுடன், மேற்கத்திய பாணி உடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. மாவோ-வின் கோட்டைப்போன்ற ஒன்றை ஆண்களுக்கும், அதற்கிணையான ஓர் உடையைப் பெண்களுக்கும் வடிவமைத்து, அதை மட்டுமே உடுத்தவேண்டுமென்று உத்தரவிட்டார் மொபுட்டு. தொண்ணூராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள பகுதியான காங்கோவில், ஆப்ரிக்காவிலேயே கடைசி யாகத்தான் பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய வற்றின் மேற்கத்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. 1960இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற காங்கோ ஃப்ரீ ஸ்டேட், தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொள்ள, அடுத்து பிரான்சிடமிருந்து விடுதலைபெற்ற பகுதியும் தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொண்டது.

அதனால், பெல்ஜியம் அரசரின் பெயராலேயே காங்கோ-லியோல்ட்வில்லி என்றழைக்கப்பட்ட இதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி மொபுட்டு, இத்தகைய மாற்றங்களைச் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிஸ் லுமும்பாவுக்கு சோவியத் ஆதரவளித்ததால், காங்கோ பொதுவுடைமைக்கு மாறிவிடும் என்று அஞ்சி, மொபுட்டுவின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவின. மொபுட்டுவின் மோசமான ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் போர் இன்றும் தொடர்கிறது. ஸையர் என்ற பெயர் 1997இல் கைவிடப்பட்டு காங்கோ மக்கள் குடியரசு என்று மாற்றப்பட்ட இது, ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக (முதலாவது அல்ஜீரியா) இருக்கிறது. பிரான்சிடமிருந்து விடுதலைபெற்றது காங்கோ குடியரசு என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பிலிருந்தவை தற்போது அங்கோலாவுடன் உள்ளன.

;