tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 26 இதற்கு முன்னால்

1947 - ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், அரசர் ஹரிசிங் கையெழுத் திட்டார். இணைப்பு ஒப்பந்தம் என்பது 1935இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது, ஆங்கிலேய ஆட்சியின் அங்கமாகவோ,  இங்கிலாந்தின் உடைமையாகவோ இன்றி 565 மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவில் இருந்தன. இந்தியாவில் கூட்டரசை(ஃபெடரேஷன்) உருவாக்க இயற்றப்பட்ட 1935இன் இந்திய அரசுச் சட்டம், மன்னராட்சிப் பகுதிகள் அதில் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்து, இந்த இணைப்பு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது. இதை மன்னராட்சிப் பகுதிகள் கடுமையாக எதிர்த்தாலும்கூட, இரண்டாம் உலகப்போரின்போது ஏற்றுக்கொண்டு, போர் முடியும்போது பெரும்பகுதி மன்னராட்சிப் பகுதிகள் இங்கிலாந்து முடியின்கீழ் வந்திருந்தன.

ஆனாலும்  அவை இங்கிலாந்தின் உடைமைகள் அல்ல என்பதால், 1947இன் இந்திய விடுதலைச் சட்டத்தின்படி அவற்றை இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைக்க  முடியாது என்பதுடன், அவற்றின்மீதான இங்கிலாந்தின் அதிகாரமும் முடிவுக்கு வந்து, அவை சுதந்திர நாடுகளாயின. பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, நிதி போன்றவற்றிற்காக சார்ந்திருக்கும் நிலையிருந்ததால் அவற்றில் பெரும்பாலான பகுதிகள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதென்று முடிவெடுத்தாலும், தனியாக இருக்க முடிவெடுத்த பகுதிகளுள் காஷ்மீர் குறிப்பிடத்தக்கது. 77 சதவீதம் இஸ்லாமியர்களையும், 20 சதவீதம் இந்துக்களையும்கொண்டு, இந்து அரசரால் ஆளப்பட்ட காஷ்மீர் தங்களுடன் இணையவேண்டும் என்று விரும்பிய பாகிஸ்தானால், காஷ்மீருக்குள் இஸ்லாமியர்களின்  கலகங்களையும் தூண்ட முடிந்தது.

இக்கலகங்களால், மேற்குப்பகுதி மாவட்டங்களின் கட்டுப்பாடு அரசரின் கைவிட்டுப்போனதுடன், எல்லை தாண்டிப்புகுந்த பாகிஸ்தானின் பஷ்த்தூன் பழங்குடியினரின் குடிப்படைகளும், நேரடி ராணுவமல்லாத பாகிஸ்தான் படைகளும், ஸ்ரீநகரை நோக்கி முன்னேறியதால், ஹிரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இணைந்தால் உதவுவதாக இந்தியா கூறியதையடுத்து இந்த இணைப்பு  ஒப்பந்தம் ஏற்பட, இந்தியப் படைகள் சென்று ஊடுருவியவர் களை விரட்டின. அவர்களுக்கு உதவியாகப் பாகிஸ்தான் படைகளும் வந்ததால் ஏற்பட்ட இந்தோ-பாகிஸ்தான் போர் 1948 டிசம்பர்வரை நீடித்தது.

போர்நிறுத்தம் ஏற்படும் போது காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய 2.22 லட்சம் ச.கி.மீ. பகுதி மீட்கப்பட்டிருந்தாலும், 0.86 லட்சம் ச.கி.மீ. பரப்புள்ள பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியாவால் அழைக்கப்படும் இப்பகுதியை, ஆசாத்(சுதந்திர) காஷ்மீர், ஜில்ஜித்-பால்ட்டிஸ்தான் என்ற தன்னாட்சி மாநிலங்களாக பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அக்டோபர் 26, காஷ்மீரில் ‘இணைப்பு நாள்’ என்று விடுமுறையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

- அறிவுக்கடல்

;