tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 24 இதற்கு முன்னால்

1260 - பாரீசுக்கு அருகில் சார்ட்ரஸ் நகரில், சார்ட்ரஸ் அன்னை பேராலயம்(கதீட்ரல்), ஒன்பதாம் லூயி அரசர் முன்னிலையில் மறு-அர்ப்பணிப்பு(திறப்பு விழா!) செய்யப்பட்டது. கதீட்ரல் என்பது கிறித்தவ ஆயரின்(பிஷப்) தலைமைப்பீடம் அடங்கிய தேவாலயம் ஆகும். இருக்கை என்ற பொருள்கொண்ட கதீட்ரா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து கதீட்ரல் என்ற பெயர் உருவானது.  ஒரு லட்சத்துப் பதினேழாயிரத்துக்கும் அதிகமான சதுர அடிகள் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்தப் பேராலயம், கட்டிடக்கலை வரலாற்றின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது மட்டுமின்றி, மிகப் பெருமளவிற்கு அதன் உண்மையான அமைப்புகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய கட்டிடமாகவும் உள்ளது. இந்தப் பேராலயம் உள்ள இடத்தில் 4ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பேராலயம் கட்டப்பட்டிருந்து,

743இல் அக்விட்டைன் பகுதியின் சிற்றரசரால்(ட்யூக்) எரிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட பேராலயம், 858இல் டென்மார்க் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டது. அதன்பின் எழுப்பப்பட்ட பேராலயம், 962இல் ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தது. ஜிஸ்லெபர்ட் என்ற ஆயரால்(பிஷப்) மீண்டும் கட்டப்பட்ட இது, 1020இல் ஒரு தீவிபத்தில் அழிந்துபோனது. அதன்பின் ஃபுல்பர்ட் என்ற ஆயர், ஐரோப்பிய அரச குடும்பங்களிடமிருந்து நிதியுதவிபெற்று, தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1155வரை தொடர்ந்தன. இப்பணிகளில் மக்கள் காட்டிய ஆர்வம் ‘கல்ட் ஆஃப் த கார்ட்ஸ்’ என்று வருணிக்கப்பட்டது. அதாவது,

12-13ஆம் நூற்றாண்டுகளில், தேவாலயப் பணிகளுக்காக, வண்டிகளில் மாடுகளுக்குப் பதிலாக எளிய மக்கள் தாங்களே நுகத்தடியில் நுழைந்து இழுத்ததாகக் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதற்கிடையில் 1134இலும் ஒரு தீவிபத்து ஏற்பட்டு சில பகுதிகள் அழிந்தன. இந்தப் புதிய பேராலயமும் 1194இல் ஒரு பெரும் தீவிபத்தில் அழிந்து, முகப்பு, கோபுரங்கள், நிலவறை ஆகியவை மட்டுமே மிஞ்சின. அப்போது, இந்த பேராலயத்தின் கன்னி மேரி மிகவும் புகழ்பெற்றுவிட்டிருந்த நிலையில், ஏராளமான நன்கொடைகள் குவிய, உடனடியாகத் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 1260இல் நிறைவுற்றன. 430 அடி நீளம், 151 அடி அகலம், 371 அடிவரை உயரம்கொண்ட கோபுரங்கள், வண்ண ஓவியக் கண்ணாடிகள்கொண்ட 176 சாளரங்கள், 200 சிலைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் அதன்பின், பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது. பிரெஞ்சு கோத்திய கட்டிடக்கலையின் உச்சம் என்று இதனைப் புகழ்ந்துள்ள யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியக் களமாக இதனை அறிவித்துள்ளது.

;