tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 03 இதற்கு முன்னால்

1929 - செர்பிய, குரோஷிய, ஸ்லோவீனிய முடியரசு, யூகோஸ்லாவியா முடியரசு என்று  அந்நாட்டின் முதலாம் அலெக்சாண்டர் அரசரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்லாவிக் மொழிகளில் ஜுக்(யுக்) என்றால் தெற்கு என்று பொருள். ஸ்லாவேனி என்பது ஸ்லாவிய மக்களைக் குறிக்கும் என்பதால், யூகோஸ்லாவியா என்பதன் பொருள் தென்பகுதி ஸ்லா வியர்களின் நாடு  என்பதாகும்.  முதல் உலகப்போர் முடிந்தவுடன், செர்பியர்கள், குரோஷியர்கள், ஸ்லோவீனியர்கள் ஆகிய மக்களின் ஒன்றிய நாடாக மேற்குறிப்பிடப்பட்ட முடியரசு உருவாகி, 1929இல் பெயர் மாற்றம்பெற்றது.

உண்மையில் முதல் உலகப்போரைத் தொடக்கிவைத்த நிகழ்வான, ஆஸ்திரிய-ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசர் பெர்டினாண்டைக் கொலை செய்த காவ்ரிலோ பிரின்சிப், யூகோஸ்லாவியாவை ஒருங்கிணைக்கும் நோக்குடன் செயல்பட்ட இளம் போஸ்னியா என்ற புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர். (இளவரசர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது வயது 50, கொலை செய்தவரின் வயது 19!) போஸ்னியா-ஹெர்ஷகோவினாவில் ஆஸ்திரிய-ஹங்கேரியன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் கொலை நடத்தப்பட்டது. 1877-78இல் நடைபெற்ற ரஷ்ய-துருக்கியப் போரைத் தொடர்ந்து, அன்றைய பெரும் சக்திகளான ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மெனி ஆகியவை கூடிப்பேசிய பெர்லின் காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆஸ்திரிய-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இப்பகுதியை 1908இல் ஒட்டோமான் பேரரசு கைப்பற்ற முயன்ற போஸ்னிய நெருக்கடி (அல்லது முதல் பால்க்கன் நெருக்கடி) என்ற நிகழ்வுக்குப்பின், போஸ்னியா-ஹெர்ஷகோவினாவை தன்நாட்டின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரிய-ஹங்கேரி இணைத்துக்கொண்டது.

தென்பகுதி ஸ்லாவிய நாடுகள் ஒருங்கிணையவேண்டும் என்ற கருத்து 17ஆம் நூற்றாண்டிலேயே உருவாகியிருந்த நிலையில், 1911இல் இந்த இளம் போஸ்னியா அமைப்பு அதே நோக்கத்துடன் உருவானது. 1917இல் ஆஸ்திரிய -ஹங்கேரி என்ற இரட்டை முடியாட்சி நாட்டை, மும்முடியாட்சி நாடாக மாற்றி, யூகோஸ்லாவியாவை ஒரு நாடாக அங்கீகரித்து, தனியே நிர்வகிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாத நிலையிலேயே பெர்டினாண்டின் கொலை  நடைபெற்றது. முதல் உலகப்போரின் முடிவில்  ஆஸ்திரிய-ஹங்கேரியின் வீழ்ச்சிக்குப்பின், அதன்  ஒரு மாநிலமாக இருந்த ஸ்லோவீனிய, குரோஷிய, செர்பியப் பகுதிகளுடன், செர்பியா, மாண்டி நீக்ரோ  ஆகிய முடியரசுகளும் ஒருங்கிணைந்து விடுதலை பெற்ற நாடாக உருவாகிய யூகோஸ்லாவியா, 1992இல் யூகோஸ்லாவியா, குரோஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆகிய குடியரசுகளாகப் பிளவுற்று முடிவுக்கு வந்தது.

;