tamilnadu

img

இந்நாள் டிச. 10 இதற்கு முன்னால்

1768 - கலைக்களஞ்சியம் என்றதும் முதலில் நினைவுக்கு வரக்கூடியதும், உலகில் மிகநீண்ட காலமாக (244 ஆண்டுகளுக்கு) அச்சிலிருந்ததுமான ‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா’வின் முதல் பதிப்பு விற்பனைக்கு வந்தது. பண்டைய ரோமின் கி.மு.முதல் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த மார்க்கஸ் டெரண்ஷியஸ் வேரோ என்பவர் எழுதிய 620 நூல்களே பின்னாளில் தோன்றிய கலைக்களஞ்சியங்களுக்கு முன்னுதாரணம். இவருக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு செய்திகள்குறித்து அரிஸ்டாட்டில் எழுதியிருந்தாலும், வேரோவின் ‘துறைகள் குறித்த 9 நூல்கள்’ என்பதே, துறைகளாகப் பிரிக்கப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்டு, கலைக்களஞ்சியத்தின் வடிவத்தைத் தொடக்கிவைத்தது.

இந்த வடிவத்தைப் பின்பற்றி, கி.பி.முதல் நூற்றாண்டில் மூத்த பிளினி, 2493 கட்டுரைகளுடன் எழுதிய நேச்சுரலிஸ் ஹிஸ்டரியா என்பது இடைக்காலம்வரை தாக்கம் செலுத்திய கலைக்களஞ்சியம் என்பதுடன், பிரதி கிடைக்கக்கூடிய மிகப்பழைய கலைக்களஞ்சியமுமாகும். இதற்குப்பின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தகவல் தொகுப்பு நூல்கள் வெளியாகியிருந்தாலும், 1728இல் லண்டனில் வெளியான சேம்பர்ஸ் சைக்ளோப்பீடியா, 1751இல் பிரான்சில் வெளியான என்சைக்ளோப்பீடி, 1768இல் வெளியான என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஆகியவையே தற்போது நாம் அறிந்துள்ள கலைக்களஞ்சிய வடிவம் உருவாகக் காரணமாயின. 15ஆம் நூற்றாண்டுவரை வெளியான கலைக்களஞ்சியங்கள் பல்வேறு பெயர்களில் வெளியாயின.

1408இல் சீனாவில் உருவான 37 கோடிச் சீன எழுத்துகளுடன், 11,095 தொகுதிகள் கொண்ட(1400 சதுர அடிக்கு அடுக்கப்பட்டிருந்த!) யாங்கிள் டாடிஸ் என்ற கலைக்களஞ்சியமே உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக விளங்கியது. ஆறு நூற்றாண்டுகளுக்குப்பின் 2007 செப்டம்பர் 9இல் விக்கிப்பீடியா இச்சாதனையை முறியடித்தது! வட்டம், பொது என்பதான பொருள்கொண்ட என்கைக்கிளோஸ், கல்வி என்ற பொருள்கொண்ட பீடியா ஆகிய கிரேக்கச் சொற்களை முழுமையான அல்லது பொது கல்வி என்ற பொருளில் கி.பி.முதல் நூற்றாண்டைச்சேர்ந்த ரோமானியக் கல்வியாளர் க்விண்டிலியன் பயன்படுத்தியிருந்தார். 1470இல் இவரது கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்தவர்கள், தவறுதலாக என்சைக்ளோப்பீடியா என்று சேர்த்து எழுதிவிட, ஒரே லத்தீன் சொல்லாக இது உருவாகி, 16ஆம் நூற்றாண்டில் பொதுவான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது!

- அறிவுக்கடல்

;