tamilnadu

img

இந்நாள் மே 19 இதற்கு முன்னால்

1536 - அரசத் துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன், இங்கிலாந்தின் பட்டத்தரசி ஆன் பூலின், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கிலேய சீர்திருத்தத்தின் நாயகியாகக் குறிப்பிடப்படும் இவர், எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாவது மனைவி. ஹென்றியின் முதல் மனைவியான ராணி ஆரகானின் காத்தரீனுக்குத் தோழியாக இருந்த பூலினை மயக்கவும், ஆசைநாயகியாக்கவும் ஹென்றி எடுத்த முயற்சிகள் வெற்றிபெறாததால், காத்தரீனுடனான திருமணம் செல்லாது என்று அறிவிக்கச்செய்து, பூலினை மணக்கவிரும்பினார். திருமணத்தை ரத்துசெய்ய போப் ஏழாம் கிளமெண்ட் மறுத்துவிட்டதால், இங்கிலாந்து திருச்சபையின் தலைமையான காட்டன்பரியின் பேராயராக தாமஸ் கிரான்மரை நியமித்து, திருமணத்தை ரத்துசெய்வதையும், பூலினுடனான திருமணத்தை நடத்துவதையும் அவர்மூலம் நிறைவேற்றிக்கொண்டார் ஹென்றி. ஹென்றியையும், கிரான்மரையும் போப் சமயவிலக்குச்செய்துவிட, இங்கிலாந்தின் திருச்சபைமீதான கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரம் முடிவுக்குவந்து, அரசரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதற்கான தொடக்கமாக இது அமைந்தது. பூலினுக்கு முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததுடன், அடுத்தடுத்து மூன்று கருச்சிதைவுகள் ஏற்பட, ஆண்குழந்தை வேண்டுமென்று விரும்பிய ஹென்றி, பூலினின் தோழியான ஜேன் சீமோர் என்பவரை மணப்பதற்காக, பூலினுடனான திருமணத்தை செல்லாததாக்கவேண்டியிருந்தது. அதற்காகவே, அரசத் துரோகம், தகாத உறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவருக்கு மரணதண்டனை அளித்தார். பூலினின் மகள்தான் பின்னாளில் முதலாம் எலிசபெத் அரசியானார். திருமணமே செய்துகொள்ளாத இவர்தான், பிராட்டஸ்டண்ட் திருச்சபையை உருவாக்கி அதன் தலைமை நிர்வாகியானார். இதுவே இங்கிலாந்தின் திருச்சபையாக உருப்பெற்றதுடன், ரோமின் அதிகாரத்திலிருந்தும் விடுவித்ததால், இந்நடவடிக்கை 1559இன் புரட்சி என்று கூறப்படுவதுண்டு. எலிசபெத் அரசியானதும் தாயின்மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தார். பூலினின் திருமணம், மரணதண்டனை உள்ளிட்டவை மிகப்பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்ததால் (ஹென்றியின் ஆசைநாயகியாக இருக்க இவர் ஒப்புக்கொண்டிருந்தால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கா!) ஆங்கிலேய சீர்திருத்தத்தின் நாயகியாக பூலின் குறிப்பிடப்படுகிறார். இங்கிலாந்தின் பட்டத்தரசிகளிலேயே மிகச் சக்திவாய்ந்தவரும், முக்கியமானவருமாக குறிப்பிடப்படும் பூலின், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கலை, பண்பாட்டுப் படைப்புகளிலும் பெருமைப்படுத்தப்படுகிறார்.அறிவுக்கடல்

;