tamilnadu

img

இந்நாள் மே 14 இதற்கு முன்னால்

1939 – பெரு நாட்டின் 5 வயது லினா மெடினா உலகின் மிகக்குறைந்த வயதுத் தாயாக ஆனார். குழந்தையின் வயிறு பெரி தானதால் கட்டி இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கருவுற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிசேரியன் அறுவைமூலம் பிறந்த 2.7 கிலோ எடையிருந்த ஆண் குழந்தை, ஆரோக்கியமாகவே வளர்ந்தது. அக்குழந்தைக்கு 10 வயதாகும்வரை, மெடினாவைச் சகோதரியாகவே கருதியிருந்ததாம். கருவுக்குக் காரணம் யாரென்பதை இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல், மெடினாவின் தந்தை சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு, ஆதாரங்களின்மையால் விடுவிக்கப்பட்டார். ஜெரார்ட் என்று பெயரிடப்பட்ட மெடினாவின் மகன் 40 வயதில் 1979இல் இறந்தாலும், திருமணம் செய்துகொண்டு குழந்தையும் பெற்ற மெடினா, ஊடகங்களைத் தவிர்த்து ஒரு கிராமத்தில் வசித்தது 2002வரை அறியப்பட்டுள்ளது. 10 வயதுக்குக்கீழ் குழந்தைபெற்ற தாய்களாக ஆதாரத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, ஆறு வயதில் 2, 8 வயதில் 10, 9 வயதில் 27. 2019இல் ஆந்திராவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற, 74 வயதுப் பெண்ணே உலகின் மிகஅதிக வயதில் தாயானவர்.

1951இல் அமெரிக்காவில் 101 வயதில் தந்தையானவர்தான் உலகின் மிகஅதிக வயதில் குழந்தைபெற்ற ஆண்! முதிர்ந்த வயதிலும் இளைய பெண்ணைத் திருமணம் செய்யும் வாய்ப்புக் கிடைப்பதால், 90க்கும் அதிகமான வயதில் ஏழு பேரும், 80க்குமேல் 11 பேரும், 70க்குமேல் ஏராளமாகவும் ஆண்கள் தந்தையாகியுள்ளனர். சீனாவில் 1910இல் தந்தையான 9 வயதுச் சிறுவனே, உலகின் மிகக்குறைந்த வயதுத் தந்தை! 16 இரட்டைக் குழந்தைகள், 7 முறை 3, நான்கு முறை 4 குழந்தைகள் என்று 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை, 1725-65ல் பெற்ற ரஷ்ய இணையரே உலகின் அதிகக் குழந்தைகள் பெற்றவர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். அந்தக் கணவருக்கு, மற்றொரு மனைவியின்மூலம் பிறந்த 18 குழந்தைகளுடன் மொத்தம் 87 குழந்தைகள் என்று கூறப்பட்டாலும், அக்காலத்திய பிறப்புகள் முழுமையாகப் பதிவு செய்யப்படாததால் உறுதிப்படுத்தப்படவில்லை. உலகில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் இரு முறையும், 8 குழந்தைகள் 8 முறையும், 7 குழந்தைகள் 7 முறையும், 6 குழந்தைகள் 18 முறையும், 5வரை ஏராளமான முறையும் பிறந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.

- அறிவுக்கடல்

;