tamilnadu

img

இந்நாள் மே 28 இதற்கு முன்னால்

1932 - நெதர்லாந்தில், கடலுக்கு நடுவில், அஃப்ஸ்லூடிஜிக் என்ற தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டது. சுமார் கால் பங்கு நிலப்பரப்பைக் கடல்மட்டத்திற்கும் கீழான உயரத்தில் கொண்டுள்ள நெதர்லாந்து, உலகின் மிகத்தாழ்வான நாடுகளில் ஒன்றாகும். இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், கி.பி.முதல் நூற்றாண்டில் செயற்கை மலைகளை உருவாக்கி, அவற்றின்மீது கிராமங்களை அமைத்துக்கொண்டனர். பின்னர், இவற்றுக்கிடையே சென்றுவர நீண்ட சுவர்களைக் கட்டினர். இந்தச் சுவர்கள் விவசாய நிலங்களுக்குள் கடல்நீர்வரத்தைத் தடுத்ததுடன், அதுவரை பெரும்பாலும் நீரில் மூழ்கி, பயன்படாமலிருந்த நிலங்களையும் பயன்படுத்த முடிந்ததால், எல்லாப்புறங்களிலும் இச்சுவர்களைக் கட்டினர். இவற்றைக் கட்டுவதற்கு நீரை வெளியேற்ற வேண்டியிருந்தது. காற்றாலைகளால் இயக்கப்படும் அமைப்புகளைக்கொண்டு நீரை வெளியேற்றியதால், ஏராளமான காற்றாலைகள் உருவாகி, நெதர்லாந்தே காற்றாலைகளின் நாடு என்று பெயர்பெற்றது. இப்பகுதியையொட்டிய, தென்கடல் என்னும், வடகடலின் குடா, மீன்பிடிக்கவும், வணிகத்திற்கும் உதவியாக இருந்தாலும், அடிக்கடி ஏற்பட்ட கடல் சீற்றங்கள், பாதுகாப்புச் சுவர்களைத் தகர்த்து, உயிர், பொருள் இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தன. 1421இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 72 கிராமங்கள் மூழ்கி, சுமார் பத்தாயிரம்பேர் பலியாயினர். இவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் போதிய தொழில்நுட்பங்கள் இல்லை. அதிகரித்த மக்கள்தொகைக்கு நிலத்தின் தேவையும் இருந்தநிலையில், கார்னலிஸ் லெலி என்ற கட்டிடப்பொறியாளர் இந்தத் தடுப்பணை, நான்கு இடங்களில் செயற்கை நிலப்பரப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கான திட்டத்தை உருவாக்கினார். 1913இல் அவரே போக்குவரத்து, பொதுப்பணித்துறையின் அமைச்சரானாலும் பொருட்செலவுக்கு அஞ்சி மற்றவர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. 1916இல் ஏற்பட்ட வெள்ளம், பேரழிவுகளை ஏற்படுத்தியதையடுத்து, 1918இல் தனிச்சட்டம் இயற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. சிறுபகுதிகளைக் கட்டி, அந்த அனுபவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட இதன் கட்டுமானம் பொதுவாக 1927-32 என்று குறிப்பிடப்படுகிறது. 32 கி.மீ. நீளமுள்ள தடுப்பணை கடலுக்கு நடுவில் கட்டிமுடிக்கப்பட்டதும், ஸூய்டர்ஸீ என்றழைக்கப்படும் இந்தக்குடா, நன்னீர் ஏரியாக மாற்றப்பட்டு, 2,318 ச.கி.மீ. புதிய நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டது. இதன்மீது சாலைப் போக்குவரத்தும் உள்ளது.

;