tamilnadu

img

இந்நாள் மே 25 இதற்கு முன்னால்

1981 - வளைகுடாவின் அரேபிய நாடுகளுக்கான கூட்டுறவு அவை என்ற அமைப்பு உருவானது. பாரசீக வளைகுடாவிலுள்ள, இராக் தவிர்த்த மற்ற அரேபிய நாடுகளின் அரசுளுக்கிடையே அரசியல், பொருளாதார ஒன்றிய மொன்றை(ஐரோப்பிய ஒன்றியம் போன்று), இப்பகுதியில் இரானின் ஆதிக்கத்துக்கு மாற்றுச்சக்தியாக உருவாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்கள்(யுஏஇ) ஆகிய நாடுகள் உறுப்பினராகவுள்ள இவ்வமைப்பில், எதிர்காலத்தில் ஜோர்டான், மொராக்கோ, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்க்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. மதம், நிதி, வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலா, சட்டம், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்குதல், தொழிற்துறை, சுரங்கத்துறை, விவசாயம், நீராதாரங்கள் முதலானவற்றில் அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்துதல், பொதுவான அறிவியல் ஆய்வுக்கூடங்களைக் கட்டமைத்தல், இந்நாடுகளுக்கிடையே கூட்டுமுயற்சி அமைப்புகளை உருவாக்குதல், தனியார் துறையிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றுடன், இந்நாடுகளின் மக்களிடையேயும் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இவ்வமைப்பின் நோக்கங்களாகும். பெட்ரோலிய வளங்கள் தீர்வதற்குள், அவற்றால் ஈட்டிய வருவாயைக்கொண்டு, எதிர்காலத்துக்கான பொருளாதார அமைப்பைக் கட்டமைத்துக்கொள்வதற்காக, 2003க்குள் ஏற்றுமதி-இறக்குமதி ஒன்றியம், 2007க்குள் பொதுவான சந்தை, 2010க்குள் பொதுவான நாணயம் ஆகியவற்றை உருவாக்கிவிடவும் இது திட்டமிட்டிருந்தது.  திட்டமிட்டபடி ஏற்றுமதி-இறக்குமதி ஒன்றியம் 2003இல் உருவாக்கப்பட்டு, 2015இல் முழுமையாகச் செயல்படத்தொடங்கிவிட்டது. இந்நாடுகளுக்கிடையே தடைகளின்றி வணிகம்புரிய உதவும் பொதுச்சந்தை அமைப்பு 2008இல் தொடங்கப்பட்டாலும், முழுமையான ஒற்றைச்சந்தையாக இன்னும் மாறவில்லை. நாணய ஒன்றியத்துக்கான தலைமையிடம் சவூதி அரேபியாவின் ரியாத் என்று முடிவெடுக்கப்பட்டதால், பொதுவான நாணயத்திட்டத்திலிருந்து யுஏஇ விலகிக்கொண்டது. ஓமனும் ஏற்கெனவே பின்வாங்கியிருந்தாலும், யூரோவுக்கு முன்னோடியாக, ஐரோப்பிய நாணய அலகு என்பதைப் பயன்படுத்தியதுபோன்ற ஒன்றைச் செயல்படுத்தும் முயற்சியில் மற்ற நான்கு நாடுகளும் 2014இலிருந்து ஈடுபட்டுள்ளன. இது உருவானால், உலகின் இரண்டாவது பெரிய நாணய ஒன்றியமாக இருக்கும். இந்நாடுகளுக்கிடையே 40 ஆயிரம் கி.மீ. ரயில்பாதைகள் உள்ளிட்ட பொதுவான உட்கட்டமைப்புப் பணிகளும் திட்டமிடப்பட்டுவருகின்றன.

;