tamilnadu

img

இந்நாள் மே 23 இதற்கு முன்னால்

1945 - 1.7 கோடிப் பேரைக் கொலைசெய்த, நாஜி இனப்படுகொலையின் சிற்பி ஹீன்ரிச் ஹிம்லர், இங்கிலாந்தின் விசாரணை முகாமில், சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார். 1925இல் எஸ்எஸ் என்று குறிப்பிடப்படும் சுட்ஸ்டாஃபல் படையில் சேர்ந்த இவர், 1929இல் அதன் தலைவராக(ரீச்ஃப்யூரர்-எஸ்எஸ்) ஹிட்லரால் நியமிக்கப்பட்டார். நாஜிக்கட்சியின் கூட்டங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் சிறிய தன்னார்வலர்களின் படையான அதை, வெறும் 290 உறுப்பினர்களிலிருந்து, எட்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள்கொண்ட (அடியாள்)படையாக மாற்றினார் ஹிம்லர். நாஜிக்கட்சியின் இனவெறிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆல்ஜெமெய்ன்-எஸ்எஸ் என்ற பொதுப்படை, ராணுவத்திற்கிணையான (உண்மையில் அதைவிட அதிகமான) அதிகாரங்கள் கொண்ட துணை ராணுவப் படையாக வாஃபன்-எஸ்எஸ் என்ற ஆயுதம்தாங்கிய படை ஆகியவற்றுடன், மூன்றாவதாக இருந்த எஸ்எஸ்-டோட்டன்காப்வெர்பண்டே என்ற பிரிவுதான் நாஜி வதைமுகாம்கள், இனப்படுகொலைமுகாம்கள் ஆகியவற்றை செயல்படுத்தியது. ஹிட்லர், ஹிம்லர், எஸ்எஸ் படையின் சக்திவாய்ந்த தலைவர்களுள் ஒருவரான ரீன்ஹார்ட் ஹேட்ரிச் மூவரும்தான் 1942இல் ஹோலோகாஸ்ட் என்று பெயரிடப்பட்ட இனப்படுகொலைக்கான திட்டத்தை உருவாக்கினர். 1936இலிருந்து ஜெர்மன் காவல்துறைத் தலைவராக இருந்த ஹிம்லர், 1943இல் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதால், காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்துப் படைகளையும், அவை செய்யத்தயங்கிய அட்டூழியங்களுக்கு எஸ்எஸ் படையையும் பயன்படுத்தி இனப்படுகொலைகளைச் செய்தார். ஹிட்லரின் பிறந்தநாளில்(1945 ஏப்ரல் 20) கடைசியாக அவரைச் சந்தித்து, தான் விசுவாசமாக இருப்பதாக உறுதிகூறிய ஹிம்லர், சோவியத் படைகள் வந்தாலும், பெர்லினைவிட்டு வெளியேறப்போவதில்லை என்று ராணுவத்துக்கு ஹிட்லர் உரையாற்றிய கூட்டம் முடிந்ததுமே பெர்லினைவிட்டு வெளியேறினார். நடுநிலைவகித்த ஸ்வீடனின் தூதரிடம், அடுத்த சில நாட்களில் ஹிட்லர் இறந்துவிடுவார் என்றும், தானே ஜெர்மனியின் தற்காலிகத் தலைவர் என்றும்கூறி, ஜெர்மனி சரணடைவதாக ஏப்ரல் 23இல் ஹிம்லர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. அத்துடன், ஏப்ரல் 30இல் ஹிட்லரும் தற்கொலை செய்துகொள்ள, அடையாளம் காட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முயன்ற ஹிம்லர், முன்னாள் போர்க்கைதிகளான சோவியத் படையினர் அமைத்திருந்த சோதனைமையத்தில் கைது செய்யப்பட்டு, இங்கிலாந்தின் விசாரணை முகாமிற்குக்கொண்டுவரப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்டார்.அறிவுக்கடல்

;