tamilnadu

img

நான்காவது தொழில் புரட்சி என்ன செய்யும்?

உலகில் ஒவ்வொரு கால கட்டமும் ஒவ்வொரு தொழில் நுட்பத்தை மையப்படுத்தி நகரத் தொடங்குவது இயல்பு. அப்படிப்பட்ட நகர்வில் முக்கியமான கால கட்டத்தை நோக்கி  தற்போது ஒட்டுமொத்த  உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் நான்காவது தொழிற்புரட்சி. இது சம்பந்தமான பெரிய விவாதங்கள் எதுவும் சாமானிய மக்கள் மத்தியில் இல்லை என்றாலும் உலக அளவில் உள்ள  பெருமுதலாளிகள் மற்றும் அரசுகள் இதைப் பற்றி தீவிரமாக பேசுவது மட்டுமின்றி அதற்கான வேலைகளையும் தொடங்கியுள்ளனர். தொழிற்புரட்சியின் வரலாற்றின் நகர்வை கொஞ்சம் அறிவது மூலம் நான்காவது தொழிற்புரட்சியின் மையம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும். ஆம் உலகின் முதல் தொழில் புரட்சி என்பது 18வது நூற்றாண்டில் ஏற்பட்டது. அந்த புரட்சியை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அன்று நீராவி என்ஜின் மூலம் செயல்படக்கூடிய தொழில்நுட்பம் தான் மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இதன் மூலம் பல மணி நேரம் பலர் செய்யும் வேலையை குறைந்த நேரத்தில் இயந்திரமே செய்யும் சூழல் உருவானது.  அதன்பிறகு 19வது நூற்றாண்டில் இரண்டாவது தொழிற்புரட்சியை நோக்கி உலகம் நகர்ந்தது அதாவது நீராவிக்கு  பதில் அனைத்தையும் மின் சக்தியை  பயன்படுத்தி செய்வதுதான் அது. உற்பத்திக்கு பயன்படும் பொருட்களைக் கொண்டு செல்ல இடைவிடாமல் நகரக்கூடிய  கன்வேயர் பெல்ட் தொழில்நுட்பங்களை கொண்டுவந்தனர்   அதற்கு முன்பு வரை இருந்த உற்பத்தி ஆற்றலை வெகுவாக மெல்ல மேல் நோக்கி நகரச் செய்தது.  20வது நூற்றாண்டில் வந்தது மூன்றாவது தொழிற்புரட்சி அது மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டது. உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரம் என்ன செய்யவேண்டும் என்பதை   program செய்திடுவார்கள். 

இப்போது நாம் சந்திக்கப் போவது 21 ஆம் நூற்றாண்டில் வரக்கூடிய நான்காவது தொழிற்புரட்சியாகும். இது மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி  நம்மை நகர்த்தி செல்ல இருக்கிறது. அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் நாம் ஆழமாக பார்க்கவேண்டியுள்ளது.ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியத் தொழில் நுட்பமாக சொல்லப்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இதுவரையில் நாம் வைத்திருந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிட்ட செயலை மட்டும் செய்யும், அதற்கு ஏற்ப அதை வடிவமைத்து அந்த வேலையை செய்யச் சொல்வார்கள்.உதாரணமாக கம்ப்யூட்டரை செயல்படுத்த குறிப்பிட்ட தொழில்நுட்ப மொழி  உள்ளது. அதன் மூலம் நமக்கு ஏற்றார் போல் நம் தேவைகளை அது எப்படி செய்ய வேண்டும் என்பதனை யீசடிபசயஅ செய்தால் அந்த கம்ப்யூட்டர் அதை செய்யும். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல இயல்பாக கற்றல் கேட்டல் மற்றும் செய்தல் ஆகியவை  தொழில்நுட்பம் மூலம் இயந்திரத்தை உருவாக்குவதாகும். இந்த செயற்கை நுண்ணறிவு இரண்டு வகையாகப் பார்க்கப்படுகிறது ஒன்று வலுவற்ற செயற்கை நுண்ணறிவு மற்றொன்று வலுவான செயற்கை நுண்ணறிவு. 

வலுவற்ற செயற்கை நுண்ணறிவு என்பது இன்று நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.  உதாரணமாக நாம் ஒரு புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த உடனே அந்தப் புகைப்படத்தில் உள்ளது யார்?  அவர்கள் பேஸ்புக்கில் உள்ளார்களா? அவர்கள் எந்த பெயரில் பேஸ்புக்கில் உள்ளார்கள்  என்று அதுவாக அவர்களை தேடி  டேக் செய்யும் இதனை முகத்தை கண்டறியும்  தொழில்நுட்பம்  என்போம். இதைப்போல ஐபோனில் சிறி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது அது எப்படி செயல்படும் என்றால் நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு ஏற்றார்போல் அது பதிலளிக்கும் உதாரணமாக எனக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவேண்டும் இன்று எத்தனை ரயில்கள்  உள்ளன  என்று கேட்டால் அதை கூகுளில் தேடி அதுவே நமக்கு காட்டும்.

வலுவான செயற்கை நுண்ணறிவு

வலுவான செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் அது செய்யும் உதாரணமாக தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான சிட்டி ரோபோட் பார்த்தோம்.  மனிதர்கள் போல அனைத்தையும் அதுவே செய்யும். இதைத்தான் வலுவான செயற்கை நுண்ணறிவு என்று சொல்கிறார்கள். இதற்கான பல ஆராய்ச்சிகளை உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஐபிஎம் நிறுவன ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட வாட்சன் என்று அழைக்கப்படும் சூப்பர் கம்ப்யூட்டர் சிஸ்டம் அதிதீவிரமாக மனிதர்களை விட பன்மடங்கு ஒரு கம்ப்யூட்டர் செயல்படுவதை உறுதி செய்து உள்ளனர். உலக பொருளாதார மன்றம் சார்பாக 2016 இல் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டனர் அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூன்று பிரிவாக  உலகத்தில் ஆளுமை செலுத்தும் என்று தெரிவித்துள்ளனர். அது என்னென்ன என்றால் பிஸிக்கல், டிஜிட்டல் மற்றும் பயாலஜிக்கல். இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்

பிஸிக்கல்

பொதுவாக உடல் ரீதியாக அன்றாடம்  நாம் செய்யக்கூடிய வேலைகளை செய்வது என்று எடுத்துக்கொள்வோம். அப்படி செய்து கொண்டிருந்த வேலைகள் வருங்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திர மனிதர்களை கொண்டு செயல்படுத்தப்போகிறார்கள்.   உதாரணத்திற்கு டாக்சி வேண்டும்  என்றால் புக் செய்த உடன் நாம் இருக்கும் இடத்திற்கு அந்த குறிப்பிட்ட நிறுவனத்தோடு இணைப்பு   செய்துள்ள டாக்சி ஓட்டுநர் காரை ஓட்டி வந்து நம்மை அழைத்துச் செல்வார். ஆனால் இனிமேல்  ஓட்டுநர் இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு  டாக்சி வரும்.  அப்படியான ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் வருங்காலத்தில் நாம் பார்க்கப் போகிறோம்.  இது சம்பந்தமாக கூகுள் நிறுவனம் ஒரு ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தானாக ஒரு கார் சாலையில் பயணிப்பதுதான் அது.  இந்த ஆராய்ச்சியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கியுள்ளது. அதற்கு பெயர்தான் கூகுள் வேமோ தானியங்கி கார். இந்த கார்  குறிப்பிட்ட சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் எங்கு நிற்க வேண்டும் அந்த கார் முன்பின் எத்தனை பேர் வந்தாலும் எவ்வளவு இடைவேளை அது இருக்க வேண்டும் என்ற பல அம்சங்களை அதற்கு கற்றுக் கொடுத்துள்ளனர். இதை மிஷின் லேர்னிங் என்பார்கள். தற்போது இது சுமார் 80 லட்சம்  கி.மீ வரை தானாக  பயணிக்கிறது என்று அந்த ஆராய்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல்

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவைகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பதற்கான முக்கிய காரணம் இணைய வசதி. 2019ல்  உலகளவில்  இணையதளத்தை பயன்படுத்துவோர்  எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.உலகத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா நேரடியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வேலைகளை செய்யாமல் இருந்தாலும் அந்த தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமான டிஜிட்டல் மயமாக்கும் வேலைகளை அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  அதன் விளைவு தான் நாம் இன்று அனைவரும் ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டை என்ற வரைவுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளோம்.

இப்படி டிஜிட்டல்மயமாக்குதன்  மூலம் மிகப்பெரிய டிஜிட்டல் தகவல்கள் சேமிக்கப்படுகிறது. இதைத்தான் பிக் டேட்டா என்பார்கள். அதாவது பல கோடி டேட்டாக்களை கையாள்வது ஆகும். இதற்கு இணையதளத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 40 லட்சம் யூ டியுப்  வீடியோ  பார்க்கப்படுகிறது. அதேபோல நாம் இணையதளத்தில் தகவல்களை தேடுவதற்கு கூகுள் என்ற தேடு தளத்தை பயன்படுத்துகிறோம் இதிலும் ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம்  தகவல்களை  நாம் தேடுகிறோம் என்பது புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி நாம் தேடக்கூடிய தகவல்கள் அனைத்தும் ஒரு சீராக சேகரிக்கப்பட்டு  எந்தெந்த பகுதி   எதை அதிகமாக தேடுகிறார்கள், அதை ஏன் தேடுகிறார்கள், எந்த வயதுடையவர் அதை தேடுகிறார்கள் என்ற பல தகவல்களை தானாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக வகைப்படுத்தப்படும். இதையே  பிக் டேட்டா (மிகப்பெரிய தகவல் சேகரிப்பு மையம்)  என்று சொல்கிறார்கள்.  இப்படி இந்த தக வல்களை பெறுவதற்கு இணையதளத்தை மையப் படுத்தி இயங்கக்கூடிய மின் பொருட்கள் மிக முக்கியமாக இதனை செய்கிறது இதைத்தான் இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்று அழைக்கின்றனர். உலகத்தின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமாக ஃபேஸ்புக் உள்ளது. ஆனால் அதற்கென உள்ளடக்கத்தை அது தயாரிப்பதில்லை. பயனாளிகளே அதனை தயாரிக்கின்றனர். அதேபோல உலகத்தின் முன்னணி வாடகை  டாக்சி நிறுவனமான உபர் நிறுவனம் நேரடியாக எந்த டாக்சியையும் ஓட்டுவதில்லை. டாக்சி வைத்திருப்பவர்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுக்கான சேவையை வழங்குகிறார்கள். இப்படி செய்யப்படும் அனைத்து தகவல் அடிப்படையிலான சேவைகள் வருங்காலத்தில் முக்கியப்பங்காற்றும்.

பயாலஜிக்கல்
 

செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்கினை பயாலஜிக்கல் மையப்படுத்திய துறைகளில் செய்யப்போகிறது. பயாலஜிக்கல் துறை என்று நான் சொல்வது மருத்துவத்தை தான். ஆம் முன்பெல்லாம் நமக்கு ஏதாவது நோய் என்றால் நாம் மருத்துவரை அணுகுவது உண்டு. ஆனால் வருங்காலங்களில் நாம் ஒரு செயற்கை நுண்ணறிவுடன்  கூடிய கணினி முன்னால் போனலே போதும். நமக்கு என்ன தேவையோ அதைச் சொன்னால் அதற்கான தீர்வு மற்றும் என்ன மருந்து  சாப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் அது சொல்லிவிடும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நாம் நம் கையில் ஒரு விரலை இழந்து மருத்துவமனைக்குச் சென்றால் இயற்கை திசுக்களை பயன்படுத்தி எந்த விரல் உடைந்ததோ அந்த விரலை செயற்கையாக முப்பரிமாண வடிவில்  வடிவமைத்து நம் கையில் இயந்திரமே பொருத்தும்.  இதுகுறித்த ஆராய்ச்சியும் வெற்றிபெற்றுள்ளது. இப்படியாக செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திய நான்காவது தொழிற்புரட்சி உலகில் மிகப்பெரிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளன.

புதிய தொழில்நுட்ப வேலையின்மை ஏற்படுமா?
 

உலகில் ஏற்பட்ட ஒவ்வொரு தொழில் புரட்சியின் போதும்  பல மாற்றங்கள் ஏற்பட்டன.  உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தால் வேலையின்மையை ஏற்படுத்துமோ என்ற கேள்வி உலக அளவில் பெரிய விவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 1 ஆம்தேதி  ரஷ்ய அதிபர்  தங்கள் நாட்டுக்கு என பிரத்யேக இணையதளத்தை  தொடங்குவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார். இதற்கு காரணம் பாதுகாப்பு மற்றும் அவர்கள்  கட்டுப்பாட்டில் இயக்கக் கூடியதாக இணையதளம் இருக்க வேண்டும் என்பதுதான். உலகளவில் இணையதளம் என்ற உடனே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது கூகுள் நிறுவனம் தான். அப்படி கூகுள் நிறுவனம்தான் இன்று இணையதள தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரிய ஆளுமையை செலுத்தி வருகிறது. அந்த குறிப்பிட்ட நிறுவனம் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும். அதாவது அந்த நிறுவனம் நான் முன்பே சொன்னபடி நம்முடைய தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்காக விற்க முடியும். விற்றுக்கொண்டும் இருக்கிறது. இதன் மூலம் தனிப்பட்ட நபரின் தகவல்கள் வர்த்தகமயமாக்கப்பட்டுள்ளன.உலகில் மறுபக்கம் பெரு முதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் லாபத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்வதற்காக இந்த தொழில் நுட்பங்களை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துவதற்கான வேலையை தொடங்கி விட்டனர். இதை தொழிலாளி வர்க்கம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.
 

;