tamilnadu

img

பித்தம் தலைக்கேறும் பேன்ஃப் நகரம் - நா.வே.அருள்

கனடாவில் அட்பெர்டா மாநிலத்திலிருக்கும் பேன்ஃப் தேசியப் பூங்கா பகுதியில் இருக்கும் அழகிய நகரம்தான் பேன்ஃப்.  ட்ரான்ஸ் கனடா தேசிய நெடுஞ்சாலையைத் தொடர்ந்து இருக்கும் அல்பெர்டா மலைத் தொடர்களில் பேன்ஃப் தேவதை குடியிருக்கிறாள். உண்மையிலேயே சொல்லப் போனால் பித்தம் தலைக்கேறும் பேன்ஃப் நகரம்.  கால்கரியிலிருந்து 126 கி.மீ தொலைவிலும் லேக் லூயிஸ் ஏரியின் கிழக்கே 58 கி.மீ தூரத்திலும்  உள்ளது இந்த நகரம். ரன்டில் மலை, நார்க்கே மலை, காஸ்கேட் மலை, சல்ஃபர் மலை ஆகிய மலைகளின் மடியில் குடியிருக்கும் வனதேவதையைப் பார்ப்பதற்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு இன மக்கள் வந்து குவிந்து கொண்டேயிருக்கிறார்கள். நாங்கள் போனது ஒரு இந்திய உணவகம்.  அவர் தமிழர்.  சென்னையில் படித்தவராம்.  ஆந்திராப் பெண்ணைக் காதலித்து மணம் செய்து கொண்டவர்.  கோயமுத்தூர்க் காரராம்.  சென்னையில் படிப்பு.  இப்போது வசிப்பது கனடாவின் பேன்ஃப்.  வாழ்க்கை யார் யாரை எங்கெங்கோ அமர்த்தி வேடிக்கை பார்க்கிறது.  வாழ்க்கை ஒரு சாமர்த்தியமான சதுரங்கம்தான்.  சிப்பாயா?  குதிரையா? யானையா? ராணியா? ராஜாவா?  அவரவரின் தேர்ந்தெடுப்பில்தான் அத்தனையும் இருக்கிறது என்றால்  பிடிக்காத வேடத்தைப் பலர் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறதே அதற்கு என்ன சொல்ல?  உணவு விடுதிகளிலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது.  இவ்வளவு குளிர்ச்சியான பேன்ஃப் இல்தான் சூடான ஆர்ட்டீஷியன் ஊற்றுகளும் இருந்தன.  இதுதான் வாழ்க்கையின் விநோத முரண்.  மலையேறலாம். பனிச் சறுக்கலாம்.  வாகனத்தில் சுற்றித் திரியலாம்.

நம் நாட்டில் எப்படி ரயில் இருப்புப் பாதைகள் அமைந்த பிறகு வளர்ச்சி சாத்தியமானதோ அப்படித்தான் அங்கும். போவ் ஆறு பாயும் பேன்ஃப் பகுதியின் சமவெளியில் போடப்பட்ட கண்டங்கள் இணைக்கும் ரயில்வே இருப்புப் பாதையைத் தொடர்ந்துதான் 1880 ஆம் ஆண்டில் பேன்ஃப் நகரம் குடியிருப்புப் பகுதியானது. ஸ்காட்லாண்டின் பேன்ஃப் இல் பிறந்தவர் ஜியார்ஜ் ஸ்டீபன்.   கனடியன் பசிபிக் ரயில்வேயின் தலைவராய் இருந்தவர். 1884 ஆம் ஆண்டில் அவர்தான் தனது ஊரின் ஞாபகார்த்தமாய் பேன்ஃப் என்று பெயர் சூட்டினார்.   1985 இல் ஐ நா சபையினால் கனடியன் ராக்கி மலைத் தொடர்ப் பூங்காக்களில் ஒன்றாக பேன்ஃப் தேசியப் பூங்கா அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இது உலகத்தின் பழங்காலச் சின்னமாக விளங்கி வருகிறது.  பேன்ஃப் குளிர்கால விழாவும் பேன்ஃப் இந்திய நாட்கள் கொண்டாட்டமும் நடத்துவதற்கு நார்மன் லக்ஸ்டன் ஏற்பாடு செய்திருக்கிறார்.  இவர் திருவாளர் பேன்ஃப் என்று அறியப் படுகிறார்.

சல்ஃபர் மலையின் உச்சியில் இருக்கும் சுடுநீர் ஊற்று பேன்ஃபின் பிரபலமான சுற்றுலா இடம். மனிதர்கள் மீன்களைப்போல நீந்திக் களிக்கிறார்கள்.  காமிராக்களுடன் சுற்றித் திரிகிறார்கள்.   சல்ஃபர் மலை உச்சியிலிருந்து கோண்டுலா (கண்ணாடி கூண்டு) மூலம் சான்சன் சிகரத்தை அடையலாம்.  இதனை பேன்ஃப் ஸ்கை வாக் (வான் வழி)  என்று சொல்கிறார்கள்.   நார்க்கே மலையில் பைக் ஓட்டுகிறார்கள். டனல் மலை (சுரங்க மலை) என்று அழைக்கப்படுகிற மலைக்கு இன்னொரு பெயர் தூங்கும் எருமை மலை.  போவ் ஆற்றையொட்டியே இரயில்வே இருப்புப் பாதைக்குப் பதிலாக இந்த மலையைக் குடைந்து ரயில் பாதை போடுவதான திட்டம் வகுக்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டது.  

கேல்கரியிலிருந்து மூன்று மணி நேரத்தில் பேன்ஃப் வந்து சேர்ந்தோம்.  அங்கிருந்து புராதனமான பேஃர்மான்ட் ஓட்டலுக்கு வந்தோம்.  அந்த ஓட்டல் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது.  சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தரைத் தளத்தையும் முதல் மாடியையும் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  நுழைவதற்கு முன் அற்புதமான குதிரை சிலையொன்று இருந்தது.  உள்ளே விதவிதமான விற்பனைப் பொருள்கள்.  சுற்றுலாவாசிகள் விருப்பப்பட்ட உணவைத் தட்டில் வைத்து அங்கங்கே சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.  முதல் மாடி முற்றத்தில் ஒரு டெலஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது.  தொலைவாக இருந்த மலை கண்ணுக்கு அருகில் தெளிவாகத் தெரிந்தது. முதல் மாடி பூங்காப் புல்வெளியில் ஒரு இந்திய மணமகனுக்கும் சீன மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ந்தது.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  எவ்வளவு சீக்கிரம் ஒரு திருமணம் நடந்தேறிவிடுகிறது.  ஆணவக் கொலை பயமின்றி இரண்டு காதல் பறவைகள் சர்வ சாதாரணமாக ஜோடி சேர்ந்து விடுகின்றன.  காதல் கைகூடுவதற்குக் கூட நாடு பார்த்துப் பிறக்க வேண்டுமோ? பேஃர்மான்ட் ஓட்டலில் இருந்த சுடுநீர் ஊற்றில் ஆண்களும் பெண்களும் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தார்கள். சில டாலர்கள் செலவில் சுடுநீர் நீச்சலடிக்கலாம்.  ஓட்டலின் வெளியே வந்து லூயிஸ் ஏரிக்குப் போகலாம் என்பது திட்டம். வழியில் ஒரு ஒற்றையடிப் பாதை மாதிரி நீண்டு சென்றது.  அருகில் போனால் மரச் சட்டங்களால் ஆன பாலம்.  போவ் ஆறு நுரைத்துக் கொண்டு ஓடியது.  

அல்பெர்டாவின் ராக்கி மலைத்தொடரில் உருவாகி பசும்புல் வெளிகளான சமவெளிகளில் ஓடி ஓல்டுமேன் ஆற்றில் கலந்து தெற்கு சஸ்கச்சிவான் ஆறு என்று அழைக்கப்படுகிறது.  காட்டெருமை வேட்டைகளுக்காகப் பழங்குடியினர் பயன்படுத்திய ஆறு போவ் ஆறு.  இன்று உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தெல்லாம் வருகிற சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகிறது.  இந்த ஆற்றின் கரைகளில் வளருகிற ரீட்ஸ் என்கிற தாவரங்களிலிருந்துதான் பழங்குடியினர் வில்களைத் தயாரித்தனர்.  அதனால்தான் இந்த ஆறு போவ் ஆறு என்று அழைக்கப்படுகிறது. போவ் பனிப்பாறைகளில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு நீர்ப்பாசனத்திற்காகவும், மின்சாரத் தயாரிப்பிற்காகவும் பயன்படுகிறது.  இது தெற்குப் பக்கமாக ஓடி லேக் லூயிஸ் என்னும் ஊரை அடைகிறது.  லூயிஸ் ஏரியை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.  ஏற்கெனவே ஜாஃப்ரி ஏரியின் மூன்று நிலைகளைப் பார்த்திருக்கிறோமே, இதிலென்ன புதிது என்று நினைத்துவிட முடியாது.  ஒரு முகம், இரண்டு கை கால்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, இப்படியான சேர்மானம்தான் மனிதன் என்று இருந்துவிட முடியுமா?  ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அழகல்லவா?  ஒரு மனிதனைப் போலத்தான் இன்னொருவனா?  ஏரிகளும் அப்படித்தான்.  ஜாஃப்ரி ஒருவிதம்.  லூயிஸ் ஒருவிதம்.  எல்லாமே தண்ணீர்தான்.  அது இசைக்கும் ஜலதரங்கம்தான் வேறு வேறு.

-பயணிப்போம்

;