tamilnadu

img

பாப்கார்ன் விற்பனையாளர் தயாரித்த விமானம்!

பாகிஸ்தானில் பாப்கார்ன் விற்பனை செய்யும் ஒருவர், விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். இதனை அந்நாட்டு விமானப்படை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. 

பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிப்பவர் முகமது ஃபையாஸ். இவர் கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் விற்று வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடரவில்லை. இந்நிலையில், இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையதளம் மூலம் காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை துல்லியமாக கற்றுக் கொண்டு விமானம் செய்வது தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து பணி நேரம் போக, வீட்டில் இருக்கும்போது துரிதமாக செயல்பட்டு விமானம் ஒன்றை தயார் செய்துள்ளார். 

இவர் விமானம் உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து இது குறித்து விசாரித்து வந்துள்ளனர். அவரது பணியை கண்காணித்து, அதற்கான விளக்கம் கேட்டும் வந்துள்ளனர். இந்த விமானத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், விமானப்படையினர் அவரது திறமையை பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விமானத்தை அருகில் இருக்கும் கிராமத்தினரும், கல்வி பயிலும் மாணவர்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


;