tamilnadu

img

இத்தாலியில் கியூப மருத்துவர்கள்

ஹவானா/ரோம் மார்ச் 23 - கோவிட் 19 படர்ந்து பெரும் நாசம் விளைவித்துள்ள இத்தாலியின் சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு உதவ கியூபா நாட்டின் மருத்துவர்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே சீனாவுக்கு மருத்துவ உதவிகளை இதுபோல் கியூபா அளித்துள்ளது.

கியூபாவிலிருந்து இத்தாலிக்கு 52 மருத்துவர்கள் கொண்ட குழு சென்றுள்ளது. ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா வைரஸ் தடுப்பு பணிகளில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொள்ளை நோயை தடுக்க சோசலிச கியூபாவிலிருந்து புறப்பட்ட ஆறாவது குழு இது எனவும், ஐரோப்பா செல்லும் முதலாவது குழு எனவும் கியூப தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கொள்ளை நோய்களையும் துயரங்களையும் எதிர் கொள்வதில் வல்லுர்களான 144 பேர் கொண்ட குழு கோவிட்டை எதிர்கொள்ள சனியன்று ஜமைக்கா சென்றுள்ளது. கியூப தொலைக்காட்சி செய்தியின்படி இந்த குழுவில் 70 சதவிகிதம் மருத்துவர்களும் செவிலியர்களும் பெண்களாவர். அதே நேரத்தில் இத்தாலியில் ஞாயிறன்று மட்டும் கோவிட் 19-க்கு 631பேர் உயிர் பலியாகினர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை திங்களன்று மாலை 4 மணி அளவில் 5,476 ஆக அதிகரித்தது.

கியூபாவில் பிடலும் ‘சே’வும் சேர்ந்து பற்ற வைத்த சோசலிசத்தின் ஜுவாலை இன்று கியூப மருத்துவர்கள் வடிவத்தில், கொள்ளை நோய் துயரைப் போக்க அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. சீனாவுக்கு அவர்கள் முதலில் சென்றனர். ஒருவாரம் முன்பு எம்.எஸ்.ப்ரைமர் என்கிற இங்கிலாந்து நாட்டின் சுற்றுலா சொகுசுக் கப்பலில் சுமார் ஆறு நபர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மரணத்தில் பிடியில் சிக்கியிருந்தனர். உதவி கோரியபோது நட்பு நாடுகள் முகம் திருப்பின. நடுக்கடலில் வானத்தை வெறித்தபடி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அந்த கப்பலை ‘ரத்தக்கறை’ போன்ற கியூப நாடு கைநீட்டி அழைத்தது. அந்த மனிதநேயம் உலகையே மெய்சிலிக்க வைத்தது.

இப்போது சீனாவில் பணி முடித்து, மரண எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கும் இத்தாலிக்கு கியூப மருத்துவர்கள் சென்றுள்ளனர். முதலாளித்துவ வலதுசாரிகள் வாழும் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலியை கைவிட்டுவிட்டன. உலகின் மிகப்பெரிய பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலியை காப்பாற்ற கைகொடுக்கிறது உலகம் முழுவதும் இருக்கிற கோடானு கோடி ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமான சோசலிச கியூபா!

ஹவானாவிலிருந்து இத்தாலிக்கு புறப்படுவதற்கு முன்பு மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் உருவப்படத்தை ஏந்தி, புரட்சிகர மருத்துவப் பணியை இத்தாலியில் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்றுக் கொண்ட கியூப மருத்துவர்கள்.

;