tamilnadu

இந்நாள் மே 20 இதற்கு முன்னால்

1873 - ரிவிட்-டுடன்கூடிய தற்கால ஜீன்ஸ் ஆடைக்கு லீவி ஸ்ட்ராஸ், ஜாக்கோப் டேவிஸ் ஆகியோர் அமெரிக்காவில் காப்புரிமை பெற்றனர். உண்மையில் ஜீன்சின் பிறப்பிடம் அமெரிக்கா அல்ல. இத்தாலியின் ஜெனோவா நகரில், கடுமையான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுகிற தொழிலாளர்களுக்கான, உறுதியான உடையாக இது உருவாக்கப்பட்டது. சுமாரான தரத்துடன், குறைவான விலைகொண்ட கார்ட்ராய் வகைத் துணியில் அங்கு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ், 17ஆம் நூற்றாண்டில் வடக்கு இத்தாலித் தொழிலாளர்களின் முக்கிய உடையாக இருந்தது. மலிவான டுங்கரீ என்ற துணியும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது, இந்தியாவில் மும்பைக்கருகிலுள்ள டோங்ரி என்ற கிராமத்தில் உருவாகி ஏற்றுமதி செய்யப்பட்டது. டோங்ரிதான், டுங்கரீயாக மருவியதாகக் கருதப்படுகிறது. ஸ்விட்சர்லாந்திலிருந்து ஜெனோவாவுக்கு வந்த ஜீன்-காப்ரியேல் ஐனார்ட்-தான் 1795இல் முதன்முதலில் ஜீன்ஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார். 1800இல் மாசெனா என்ற தளபதியின்கீழ் நெப்போலியனின் படைகள் ஜெனோவாவை முற்றுகையிட்டபோது, படைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் பணி ஜீன்-காப்ரியேலுக்குக் கிடைத்தது. அவர், ஜெனோவாவின் பிரெஞ்சுப் பெயரான ஜீன்ஸ் என்பதைக் குறிக்கும்வண்ணம், ப்ளூ ஜீன்ஸ் என்ற பெயரில் சீருடைகளைத் தைத்துத்தந்ததையடுத்து, அப்பெயரே நிலைத்துவிட்டது. பிரான்சின் நைம்ஸ்(உச்சரிப்பு நிம்) நகரில் ஜெனோவாவில் பயன்படுத்தப்படும் துணியைப்போன்று உருவாக்க முயன்று, தற்போதைய டெனிம் துணியை உருவாக்கினார்கள். நைம்சிலிருந்து வந்தது என்ற பொருளில் டி-நைம்ஸ்(டெ-னிம்) என்று அழைத்ததால் டெனிம் என்ற பெயர் உருவானது. ஜெர்மானியரான லீவி ஸ்ட்ராஸ், 1851இல் அமெரிக்காவுக்கு வந்து வியாபாரம் தொடங்கினார். இவரிடம் ஜீன்சுக்கான துணியை வாங்கிக்கொண்டிருந்த (லாட்வியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவரான) ஜாக்கோப் டேவிஸ், கடுமையான உழைப்பாளிகள் பயன்படுத்தும் உறுதியான ஜீன்சில், தையல் விட்டுப்போகிற சில இடங்களில் ரிவிட் பொருத்தினால் உறுதியாக இருக்கும் என்று கூறியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதற்கே இவர்கள் காப்புரிமை பெற்றனர். தொடக்கத்தில் நீலநிறத்திற்கு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோ பயன்படுத்தப் பட்டாலும், பின்னர் ஜெர்மனியில் செயற்கை இண்டிகோ உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பிற வண்ணங்களிலும் ஜீன்ஸ் உருவாக்கப்பட்டது.


அறிவுக்கடல்