உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அயோத்தி தாவா விற்கு இறுதித் தீர்வாக அளிக்கப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்ப தற்கு சாத்தியம் இல்லாத நிலையில், சட்டத்தின் ஆட்சி நடை பெறும் ஒரு மதச்சார்பற்ற குடியரசில் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி, நீதித்துறையின் மூலம் தீர்வு காண்பதேயாகும். அதனால்தான், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆழமான முறையில் கருத்துவேறுபாடுகள் இருந்த போதிலும், அல்லது ஆட்சேபணைகள் இருந்த போதிலும் பொதுவாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தாவா குறித்து சுதந்திரம் பெற்றதிலிருந்தே நீதி மன்றத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, 2010 செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வா யம், ஒரு தீர்ப்பினை அளித்தது. அந்த சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அந்தத் தீர்ப்பைக் கீழ்க்கண்டவாறு விமர்சித்திருந்தது:
“இந்த வழக்கில் தீர்ப்பு, நிலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திட வேண்டும் என்று ‘நம்பிக்கை’யின் (faith and belief) அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகள், நீதிமன்றத்தின் முன்புள்ள ஆதார ஆவணங்கள் மற்றும் உண்மை விபரங்களை ஆராயாமல், அதற்கு மாறாக மதம் சார்ந்த நம்பிக்கையைப் பிரதானமாகக்கொண்டு அளிக்கப்பட்டிருப்பது, கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.” எனினும், உச்சநீதிமன்றமானது, இந்தத் தாவாவைத் தீர்ப்பதற்கு, மதச்சார்பின்மைக் கொள்கையை அஸ்தி வாரமாகக் கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய்திருக்கி றது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாவது: “நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின்கீழ், அனைத்து மதம் சார்ந்த நம்பிக்கைகள், அதன் மீதான உறுதிகள் மற்றும் பெருமிதங்கள் கொண்டவர்களும் தங்களின் தெய்வீகத் தோற்றுவாயைக் கண்டறிவது என்பது சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்தின் முன் சமம் என்ற அடிப்படையிலும்தான் இருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டம் ஒரு மத அடிப்படையாளரின் கடவுள் நம்பிக்கைக்கும், பிறிதொரு மத அடிப்படையாளரின் கடவுள் நம்பிக்கைக்கும் இடையே பாகுபாடு எதையும் ஏற்படுத்தவில்லை. நம்பிக்கை, வழிபடுவது, கூடிப் பிரார்த்திப் பது ஆகியவற்றின் அனைத்து வடிவங்களும் சமமான வைதான்?
மேலும், “நீதிமன்றத்தின்முன் தனியார் சொத்து தொடர்பாக சிவில் உரிமை கோரும்போது, அது அரச மைப்புச்சட்ட விழுமியங்களை உயர்த்திப்பிடித்திட உறுதி பூண்டிருக்குமானால், அது மதச்சார்பின்மையின் அதிகார வரம்பெல்லைக்குள் தான் அமைந்திட வேண்டும்.” மேலும், “ஓரிடத்தின் சட்டப்பூர்வமான உரிமையை கடவுள் நம்பிக்கை யின் அடிப்படையில் நிறுவிட முடியாது.” என்றும் கூறி யிருக்கிறது. எனினும் தீர்ப்பின் இதயம் போன்ற பகுதியில் ஒரு முரண்பாடு இருக்கிறது. இந்தத் தாவாவை நம்பிக்கையின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளக்கூடாது, மாறாக நம்முன் உள்ள ஆதார ஆவணங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று தீர்ப்பில் பல இடங்களில் கூறப்பட்டிருந்தபோதிலும், நாம் பின்பற்றும் மதச்சார்பின்மைக் கொள்கை அனைத்து மதத்தி னரையும், அனைத்து நம்பிக்கையாளர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது என்று கூறப்பட்டுள்ள போதிலும், இறுதியில் பிறப்பித்திருக்கும் தீர்ப்பானது கடவுள் நம்பிக்கைக்கு அதிகபட்ச முக்கியத்து வம் கொடுத்திருப்பதும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வர்களின் கடவுள் நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தி ருப்பதும் மிகவும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
கோவில் இருந்த இடத்தில் அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்னும் கூற்றை தீர்ப்பு மிகச் சரியாகவே ஒதுக்கித்தள்ளுகிறது. இந்தியத் தொல்லி யல் ஆய்வுத் துறை (The Archaeological Survey of India)யின் முடிவுகளிலிருந்து, அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்த தற்கு சாட்சியம் எதுவும் இல்லை என்றும், தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்தது என்பதற்கான ஆதார மாக தொல்லியல் ஆய்வுத்துறை எதையும் மெய்ப்பித்திட வில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும், இது தொடர்பாக எவ்விதமான வரலாற்றுத் தவறும் இதற்கு முன்பு நீதித்துறையின் தீர்ப்பின் மூலமாக திருத்தப்பட்டதா என்பது குறித்தும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நீதிமன்றம், தாவாவுக்குரிய இடத்தின் உடைமை மற்றும் அது பயன்படுத்தப்பட்டு வந்த விதம் ஆகியவற்றை மதிப்பிட்டிருக்கும் விதமும் அதன் அடிப்படையில் முடிவுக்கு வந்திருப்பதிலும் முரண்பாடு காணப்படுகிறது. தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்பட்டிருக்கிறது: “தாவாவுக்குரிய இடத்தின் ஒட்டுமொத்த சொத்தையும் யார் உடைமையாகக் கொண்டிருந்தார்கள் என்பது சம்பந்த மாக, யார் சொல்வது அதிகபட்ச உண்மையாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தின்படி ஆராய்ந்து பார்க்கும்போது, முஸ்லிம்கள் அளித்துள்ள ஆதாரங்களைவிட இந்துக்கள் அளித்த ஆதாரங்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்ப தற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.”
நீதிமன்றம் ‘ஒட்டுமொத்த இடம்’ (composite whole) என்று குறிப்பிடுவது பாபர் மசூதி இருந்த இடத்தின் உள்முற்றம் மற்றும் வெளிமுற்றம் ஆகிய அனைத்து இடங்களையு மாகும். ஆனால் இதனை நீதிமன்றம் தன்முன்வந்த ஆதாரங் கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆராயும்போது, வெளிமுற்றத்தைத் தனியாகவும், உள் முற்றத்தைத் தனியாகவும் பிரித்துக் கணக்கில் கொண்டி ருப்பதை பார்க்க முடிகிறது. தாவாவுக்குரிய இடத்தின் வெளிமுற்றத்தின் உடைமை இந்துக்களிடம் பிரத்யேகமாகவும், தடுக்கப்படாமலும் (exclusive and unimpeded) இருந்தது என்று மெய்ப்பிக்க முடியும் என்று தீர்ப்பு முடிவு செய்திருக்கிறது.
1857இல், நாட்டை ஆண்ட காலனிய ஆட்சியாளர்கள் வெளிமுற்றத்திற்கும் உள்முற்றத்திற்கும் இடையே சுவர் எழுப்பி இருந்தார்கள். அதன்பின்னரும்கூட, தீர்ப்பில் கூறப் பட்டுள்ளதுபடி, மசூதியின் சூழிடங்களில்கூட வழிபாடு செய்வ தற்கான முயற்சிகளை இந்துக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். இந்துக்களின் உரிமைகளை மதிப்பீடு செய்கையில், நீதிமன்றம் தன்முன் வந்துள்ள உண்மைகளின் அடிப்படை யில் மட்டும் கறாராக முடிவினை எடுத்திடாமல், அவர்களின் நம்பிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறப் பட்டிருக்கிறது: “இருவிதமான பாதைகளை உருவாக்கிய பின்னரும்கூட, கருவறைக்கு சென்று வழிபடுவதற்காக அவர்கள் உள் முற்றத்திற்கும் வெளிமுற்றத்திற்கும் இடையே நின்றார்கள்.” இந்துக்களுக்கு இருக்கின்ற தங்களது வழிபாட்டிற்கான உரிமையை இவ்விதம் வலியுறுத்தியிருப்பதன் மூலம், உள்முற்றத்திற்குப் பிரத்யேக உடைமை பெற்றிருப்பதற்கு முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என்பதுபோல் வியாக்கியா னம் செய்யப்பட்டிருக்கிறது.
தீர்ப்பில், மசூதி கட்டப்பட்ட 1528க்கும், அந்த இடத்தை பிரிட்டிஷார் ஆளுகைக்குக் கொண்டுவந்த 1856க்கும் இடை யேயான காலத்தில், இந்தக் கட்டடம் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதால், முஸ்லீம்கள் 1857க்கு முன்னர் உள்முற்றத்தை தங்கள் பிரத்யேக உடைமையாக வைத்தி ருந்தார்கள் என்பதற்கு சாட்சியம் எதையும் தாக்கல் செய்ய வில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. 1528க்குப் பின்னர் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த பிராந்தியமும் முஸ்லிம்களின் ஆட்சி யின்கீழ் (முதலில் முகலாயர்களின் கீழும், பின்னர் ஆவாத் நவாப்புகளின் கீழும்) இருந்த நிலையில், இவ்வாறு அனுமானித்திருப்பது அதீத கற்பனையான ஒன்றாகும்.
முகலாயர்களின் ஆட்சியின் தொடக்கத்தில் மசூதி கட்டப் பட்டு இடைவிடாமல் தொழுகைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெளிவானதாகும். அந்த சமயத்தில் எவ்வித மான தாவாவிற்கும் ஆதாரம் இல்லை என்கிற உண்மையை, இதற்கு மாறாக முடிவு எடுப்பதற்கான நிரூபணம் எனக் கொள்ள முடியாது. தாவாவுக்குரிய இடத்தில் வெளி முற்றத்திலும், உள்முற்றத்திலும் தொடர்ந்து வழிபட்டு வந்தார் கள் அல்லது தொழுது வந்தார்கள் என்பது தொடர்பாக நிரூபணத்தை மெய்ப்பிப்பதற்கு நீதிமன்றம், இரண்டு விதமான நிலைப்பாட்டை கடைப்பிடித்திருப்பதும், குறிப்பாக, ராமர் பிறந்த இடம் என்று கூறிவந்த இந்துக்களின் நம்பிக்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது போன்றே தோன்றுகிறது.
தீர்ப்புரையில் முரண்பாடுகள் தொடர்கின்றன. 1949 டிசம்பரில் மசூதி இடிக்கப்பட்டு அங்கே சட்டவிரோதமான முறை யில் சிலைகள் வைக்கப்பட்டதும், பின்னர் 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஓர் ஆழமான சட்டமீறல் என்றும் ஒப்புக்கொள்ளும் நீதிமன்றம், தன் தீர்ப்பை முடிக்கும் போது, அவ்வாறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மசூதியை இடித்தவர்களிடமே அந்த இடத்தை ஒப்படைத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. குழந்தை ராமரின் பிரதிநிதி யாக நீதிமன்றத்தில் 1989இல் வழக்கைத் தாக்கல் செய்த நபர், பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு இட்டுச்சென்ற வன்முறை நடவடிக்கைகளுக்குக் காரணமான விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராவார். பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எதிரான வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துகொண்டி ருக்கிறது. அநேகமாக அடுத்த ஆண்டு, அதன்மீது தீர்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது உச்சநீதிமன்றமானது மசூதியை இடித்த சதிகாரர்களுக்கே வெகுமதிகள் அளித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத் தின் இந்த தீர்ப்பின் தாக்கத்திலிருந்து அந்த வழக்கின் முடிவும் எப்படி அமையக்கூடும் என்று கற்பனை செய்து கொள்ள முடியும்.
உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் 1991ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சட்டத்தை (The Places of Wor ship Act, 1991) மேற்கோள் காட்டியிருக்கிறது. இந்தச் சட்டமா னது, அனைத்து மதங்களின் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் உயர்த்திப்பிடித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் கடப்பாடுகளை வலியுறுத்துகிறது. எனினும், உச்ச நீதிமன்றமானது, வேறு எந்த மத வழிபாட்டிடமும் சர்ச்சைக் குரியதாக மாற்றப்படவோ, தகர்க்கப்படவோ அனுமதிக்காத வகையில், அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவை பிர யோகித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காசி, மதுரா மற்றும் இதர மதம் சார்ந்த இடங்கள் தொடர்பான வழக்குக ளிலும் இதுபோன்று கோரிக்கைகள் எழுவதற்கான ஒரு ‘முன்மாதிரியாக’ அயோத்தி மீதான தீர்ப்பு மாறிவிடக் கூடாது என்பதால், இவை அனைத்தும் மிகவும் முக்கிய மானவையாகும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காசி மற்றும் மதுரா சம்பந்தமான உரிமை கோரும் வழக்குகள் தங்கள் நிகழ்ச்சிநிரலில் “இப்போதைக்கு” இல்லை என்று மட்டும்தான் கூறியிருக்கிறார்.
தீர்ப்பானது, நீதி வழங்குவதைக் காட்டிலும் இந்தத் தீர்ப்பின் விளைவாக அமைதி குலைந்துவிடாமல் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை கொடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்திருப்பதற்கான காரணங்களில் இவ்வாறுதான் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அந்தத் தீர்ப்பு “அமைதியை மீண்டும் கொடுக்காது என்பதால் தள்ளுபடி” செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நீதிமன்றம், அரசியல் கணக்கீடுகளையும், நிலைப்பாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இந்துத்துவா ஆட்சியாளர்களின் தற்போதைய ஆதிக்க நிலை, பெரும்பான்மையானவர்களின் உணர்வுக்கு எதிராக தீர்ப்பு இருக்குமானால் அதன் கொடூரமான அம்சங்கள் – ஆகிய அனைத்தும் சேர்ந்துதான் தாவாவுக்குரிய ஒட்டுமொத்த 2.77 ஏக்கர் நிலத்தையும் வழக்கு தொடுத்த ‘ராமரின் நண்பருக்கே’ கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
இந்தத் தாவா எப்படியாவது தீர்க்கப்பட வேண்டும் என்கிற உணர்வே பொதுவாக இருந்திருக்கும்போல் தெரிகிறது. எனவேதான் மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல இதனை வரவேற்றிருக்கின்றன. நாட்டின் உயர்ந்த நீதித்துறையின் அமைப்பிலிருந்து வந்துள்ள இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் ஒரு விஷயத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு இதனை ஏற்பதனால், பெரும்பான்மைவாதத்துடனும் அதன் நாசகர விளைவுகளுடனும் சமரசம் செய்து கொண்டுவிட்டோம் என்று பொருள் அல்ல.
தமிழில்: ச.வீரமணி