மோட்டார் பம்ப்செட் தொழில் நெருக்கடி
கோயம்புத்தூர், செப். 9 – மோட்டார் வாகன நெருக்கடியை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ரூ.500 கோடி மதிப்பிலான மோட்டார் பம்ப் செட்கள் மற்றும் உதிரி பாகங்கள் தேக்க மடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரம் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதேபோல் 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங் கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாகவும், மறை முகமாகவும் லட்சக்கணக்கா னோருக்கு இத்தொழில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மோட்டார் வாகன உற்பத்தி பாதிப்பையடுத்து தற்போது மோட்டார் பம்ப் செட் உற்பத்தி தொழில் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் இருந்து தயாராகும் மோட்டார் பம்ப் செட்டுகள் மற்றும் உதிரிபாகங்கள் நாடு முழுவதும் சந்தைப்படுத்தப் பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில நாளாக விற்பனை வெகுவாக குறைந்துள்ள தால், பல கோடி ரூபாய் மதிப்பிலான மோட்டார் பம்ப் செட்டுகள் நிறு வனங்களிலிலேயே தேக்க மடைந்துள்ளன. இதனால், போதிய பணப்புழக்கம் இல்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தொழி லாளர்களுக்கான போனஸ் தொகை யை எப்படி கொடுப்பது என தற்போதே சிறு குறு தொழில்முனைவோர் கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பா ளர்கள் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: நாட்டில் பண சுழற்சி வெகு வாக குறைந்துவிட்டதால் பெரு நிறு வனங்களே லே-ஆப் விடும் நிலைக்கு சென்றுள்ளனர். கடந்த 2 மாதமாக கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் வாரத்தில் 3 முதல் 4 நாள் விடுமுறை அளித்து வருகின்றனர். உற்பத்தி குறைக்கப்பட்டதால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பம்ப்செட் உற்பத்தி தொழில் பாதிப்படைய முக்கிய காரணமாக இருப்பது ஜி.எஸ்.டி. இதில், 18 சத வீதம் கொள்முதல் வரி விதிக்கப்படு கிறது. ஆனால், 12 சதவீதம்தான் விற்பனை வரி, மீதம் உள்ள 6 சதவீத வரியை நாங்கள் யாரிடம் வசூலிக்க முடியும்? தற்போதையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தக துறை இணை அமைச்சராக இருந்த போது இந்த குறைகளை அவரிடம் கூறினோம். ஆனால், எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதனால் கோவையில் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனத்திலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்பிலான பம்ப் செட்டுகள் மற்றும் உதிரிபாகங்கள் தேங்கிக்கிடக்கின்றன. ஏறக்குறைய ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பண சுழற்சி இல்லாத காரணத்தால் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க முடியுமா என்று பல தொழில்முனைவோர்களுக்கு கவலை தொற்றிக்கொண்டுள்ளது. மேலும், பெரு நிறுவனங்கள் அளவுக்கு வரி செலுத்தும் சூழ்நிலை உள்ளது. முதலில் எங்களுக்கு விற்பனை வரி மட்டும் இருந்தது. தற் போது கலால் வரியும் விதிக்கப்படு கிறது. எனவே ரூ.1.5 கோடி வரை விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கலால் வரியை அறவே நீக்க வேண்டும். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை குறைத்தால் தான் நிமிர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.