1896 - பறக்கும் மனிதன் என்றழைக்கப்பட்ட ஓட்டோ லிலியன்த்தால் என்ற ஜெர்மானியர், மிதவை வானூர்தி (க்ளைடர்) கட்டுப்பாட்டை இழந்ததில் சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழுந்து, கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மறுநாள் ஆகஸ்ட் 10இல் உயிரிழந்தார். விமானம் உருவாக்கப்படுவதற்குமுன், காற்றைவிட எடைமிகுந்த - அதாவது வெப்பக்காற்று பலூன் அல்லாத - பறக்கும் கருவியில், மிக அதிக முறை, வெற்றிகரமாகப் பறந்தவர் லிலியன்த்தால்தான். இரண்டாயிரத்தும் அதிகமான முறை ஏராளமான மாறுபட்ட க்ளைடர்களை உருவாக்கிப் பறந்துள்ள இவர், காற்றைவிட எடை மிகுந்த பறக்கும் கருவியை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். பறத்தல் முயற்சிகளுக்காகவே, பெர்லினுக்கு அருகில், தானே உருவாக்கிய ஒரு சிறிய செயற்கை மலையிலிருந்துதான் லிலியன்த்தால் பறக்கும் ஆய்வுகளை மேற்கொண்டார். பறவைகளின் (குறிப்பாக ஸ்டோர்க் என்னும் பெரிய நாரை - இது சுமார் 8 கிலோ எடை கொண்டது) பறத்தல்குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்ட லிலியன்த்தால், துருவ வளைவு என்னும் கணக்கீட்டுமுறையைப் பயன்படுத்தி, அவற்றின் இறக்கைகளின் காற்றியக்கவியல் குறித்த விளக்கங்களை உருவாக்கினார். விமானத்தை உருவாக்குவதற்கு தொடக்கத்தில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திய ரைட் சகோதரர்கள், பின்னர் காற்றுப் பாதை (விண்ட் டன்னல்) முறைக்கு மாறினாலும், இன்றைய நவீன க்ளைடர்களின் உருவாக்கத்தில் லிலியன்த்தாலின் ஆய்வு முடிவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
தொங்கு க்ளைடரை(ஹேங் க்ளைடர்) இயக்குபவர்கள் பிடித்துக்கொள்ள லிலியன்த்தால் 1894இல் உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்த அமைப்பே, தற்போதைய தொங்கு க்ளைடர்களில் பயன்படுத்தப்படுகிறது. இறக்கை அசைத்துப் பறப்பவை, இரட்டை அடுக்கு, ஒற்றை அடுக்கு நிலையான இறக்கை கொண்டவை என்று ஏராளமான க்ளைடர்களை வடிவமைத்துப் பறந்த லிலியன்த்தால்தான், தற்போதைய நவீன தொங்கு க்ளைடர்களில் பயன்படுத்தப்படும், பறப்பவரின் உடல் அசைவின்மூலம் புவியீர்ப்பு விசையைக் கட்டுப்படுத்திப் பறக்கும் முறையை உருவாக்கினார். பறத்தலின் தந்தை என்று புகழப்பட்ட லிலியன்த்தாலின் பறக்கும் படங்களை உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. 1909இல் ஜெர்மனியில் ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் பறக்கச்செய்து காட்டியபோது, லிலியன்த்தாலின் மனைவியை அழைத்து கவுரவப்படுத்தினர்.