tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 05 இதற்கு முன்னால்

1735 - இதழியல் சுதந்திரத்திற்கு எதிரான முதல் வழக்கு என்று குறிப்பிடத்தக்க வழக்கில், 8 மாதங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்தபின், அமெரிக்க இதழியலாளர் ஜான் பீட்டர் ஸெங்கர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தின் குடியேற்ற நாடாக இருந்த காலத்தில், அமெரிக்காவின் நியூயார்க் குடியேற்றத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட வில்லியம் காஸ்பி, நிர்வாகக்குழுவைமீறி கூடுதல் ஊதியம் எடுத்துக்கொண்டது, அவருக்கு ஒத்துழைக்காத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றியது என்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை, ‘தி நியூயார்க் வீக்லி ஜர்னல்’ இதழில் ஸெங்கர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இதனால், தேசத்துரோக அவதூறு வழக்கில் 1734 நவம்பரில் கைதுசெய்யப்பட்டார். ஆளுனரால் நியமிக்கப்பட்டவரான தலைமை நீதிபதி, வாதங்களையே கேட்கத் தயாராக இல்லாதநிலையில், நேரடியாக நடுவர்களை(கிராண்ட் ஜூரி) நாடியபோது, ஆளுனரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கக்கூடியவையென்றாலும், ஸெங்கர் எழுதியவை உண்மையென்பதால், அவதூறு என்று கருதமுடியாது என்று விடுவிக்கப்பட்டார். ஆனாலும், பின்னர் வந்த ஆளுனர்களும் இதழியல் சுதந்திரத்தை ஏற்காதவர்களாகவே தொடர்ந்தனர். அதனாலேயே, விடுதலைக்குப்பின் அமெரிக்க அரசமைப்புச் சட்டமும், முதல் திருத்தமும் தகவல், கருத்து ஆகியவற்றின் பரிமாற்றத்தில் அரசு தலையிடத் தடையை ஏற்படுத்தின.

நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் என்ற அடிப்படையில் இதழியலாளர்களின்மீது வழக்குத் தொடர முடிந்தாலும்கூட, பெரும்பாலான நாடுகளைவிட அமெரிக்காவின் இதழியல் சுதந்திரம் கூடுதலானதாகவே குறிப்பிடப்படுகிறது. இதழ்கள் தொடங்கப்பட்டதுமே, அவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் தோன்றிவிட்டன. எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிமம்(லைசென்ஸ்) பெறவேண்டுமென்ற விதியுடன், வெளியிடுவதற்குமுன் தணிக்கை செய்யவும் வழிவகுத்த, உரிமம் வழங்கும் உத்தரவு என்ற அவசரச் சட்டம், 1643இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. இதழியல் சுதந்திரத்திற்கெதி ரான முதல் சட்டமான இதை எதிர்த்துத்தான், பேச்சு, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி, புரட்சிக்கவி மில்ட்டன், ஏரோபேஜிட்டிக்கா என்ற சிறு பிரசுரத்தை 1644இல் வெளியிட்டார். தற்போது, பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிக அதிக இதழியல் சுதந்திரம் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. இன்றும், உலகின் மூன்றிலொரு பங்கு நாடுகளில், குறிப்பாக, மக்களாட்சி முறை இல்லாத நாடுகளில், இதழியல் சுதந்திரம் என்பது மிகமோசமாக ஒடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உலகின் மிகப்பெரிய மக்களாட்சி(ஜனநாயகம்) என்று அழைத்துக்கொள்கிற இந்தியாவில், இதழியலாளர்கள் மிகக்கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பதாக பன்னாட்டு இதழியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

- அறிவுக் கடல்