1896 - மோட்டார் வாகனம் மோதி உலகின் முதல் உயிரிழப்பு ஏறற்பட்டது. உண்மையில், மோட்டார் வாகனத்தினால் உலகின் முதல் உயிரிழப்பு 1869இலேயே ஏற்பட்டுவிட்டது. ஆனால், அது காரிலிருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு. அதில், நீராவியால் இயங்கும் காரில் சென்ற மேரி வார்ட் என்ற 42 வயதுப் பெண்மணி, தவறி காருக்கடியில் விழுந்து உயிரிழந்தார். மோட்டார் வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்ட முதல் விபத்தான 1896 விபத்தில், ப்ரிட்ஜெட் ட்ரிஸ்கால் என்ற 44 வயதுப் பெண்மணி, லண்டனில் நடந்து சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். ஆங்கிலோ-ஃப்ரெஞ்ச் மோட்டார் கேரேஜ் கம்பெனி, வாடிக்கையாளர்களுக்கு ஓட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்திக்கொண்டிருந்த இந்தக் காரின் அதிகபட்ச வேகமே மணிக்கு 13 கி.மீ.தான் என்பதுடன், அது மணிக்கு வெறும் 6 கி.மீ. வேகம் மட்டுமே செல்லும்படி மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதற்குச் சிலவாரங்கள் முன்புதான், இங்கிலாந்தில் அதுவரை நகருக்குள் மணிக்கு 3 கி.மீ., நகருக்கு வெளியே 6 கி.மீ.யாக இருந்த வேக வரம்பு, 23 கி.மீ.யாக உயர்த்தப்பட்டு இயற்றப்பட்டிருந்த சட்டமும் இதனால் விவாதத்துக்குள்ளாகியது. அந்த கார் மிக வேகமாகச் சென்றதாக மக்கள் குற்றம் சாட்டினாலும், அதை ஓட்டிப்பார்த்த மற்றோர் ஓட்டுனர், அது 7 கி.மீ. வேகத்திற்குமேல் ஓடாது என்பதை உறுதிப்படுத்தினார். ஆறு மணிநேர விசாரணைக்குப்பின் விபத்தால் மரணம் என்று முடிவு செய்யப்பட்டதுடன், மோட்டார் வாகனத்தால் ஏற்படும் உலகின் கடைசி உயரிழப்பாக அது இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. (ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டதா என்ற தகவல் பதிவு செய்யப்படவில்லை.) ஆனால், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2016 ஓராண்டில் மட்டும் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 13.5 லட்சம். அதாவது, 25 நொடிக்கு ஒருவர், சாலை விபத்தில் பலியாகிறார். சாலை விபத்துகளால் மிக அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளாக ஆஃப்ரிக்க நாடுகளும், மிகக் குறைந்த உயிரிழப்புகள் நிகழும் நாடுகளாக ஸ்விட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன் முதலானவையும் இருக்கின்றன. 2018இல் ஊபர் நிறுவனத்தின் சோதனை வாகனம் மோதி எலைன் ஹெர்ஸ்பர்க் என்பவர் உயிரிழந்தார். ஓட்டுனர் இல்லாத தானியங்கி கார் மோதி உயிரிழந்த முதல் மனிதரான இவரும் பெண்தான்!