tamilnadu

img

ஒசாமா பின்லேடனின் மகன் இறந்துவிட்டதாக அமெரிக்கா தகவல்

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டதாக, அமெரிக்கா அரசின் உளவுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு, அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், முடி இளவரசராகவும் பார்க்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை, கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. 

அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.  இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், ஹம்ஸா பின்லேடன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.